Friday, May 28, 2010

நீ

நான்
விரும்பிய எல்லாமே
வெகு தூரத்தில்..
அன்று
நிலவு..
இன்று
நீ!

Tuesday, May 18, 2010

உன்னுடன்..

நீ
கண்டும் காணாமல்
கடந்து செல்கிறாய்..
நான்
பார்த்தும் பாராமல்
பின்தொடர்கிறேன் உன்னை...

Thursday, May 13, 2010

இதயம்

இமை மூடும்
நேரத்தில்
இதயம் சொல்லும்..
நீ உறங்கு
நான்
உறங்காமல் துடிக்கிறேன்
என்று!

Wednesday, May 12, 2010

அனுபவி ராஜான்னு அனுப்பிவெச்சான்...

சனிக்கிழமை, மே 8 2010
எங்கோ படித்த ஞாபகம்., வட துருவத்தில் வாழும் பனிக்கரடிகள் சீல்களை பிடிக்க பனியில் குழித்தோண்டி காத்திருந்து வேட்டையாடும்போது தன் இரு கைகளால் மூக்கை மூடிக்கொள்ளுமாம் மீதமுள்ள தன் உடலும், சுற்றியிருக்கும் பனியும் 'பளீர்' வெள்ளை நிறம் என்பதறிந்து.
காரணம்: ஒரு மொத்த வெள்ளை(வெளேர்) பரப்பில் தன் மூக்கின் நுனியில் மட்டும் கருப்பு நிறம் கண்டு தன் இரையாகப்போகும் சீல்கள் உஷாராகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்(!).
எப்படி தெரியும் இந்த கரடிகளுக்கு தன் மூக்கின் நிறம் என்னவென்று... தன்னை தானே தண்ணீரில் பார்த்தா அல்லது மற்ற பனிக்கரடிகளை காணும்போதா !?

நானும் கிட்டத்திட்ட ஒரு பனிக்கரடியைப்போல் தான் என் உடல் முழுவதையும் உள்ளடக்கி போர்வைக்குள் குடியிருந்தேன் பதினோரு மணி வரை, சனிக்கிழமை என்பதால்.
ஜன்னலின் ஊடே என் கண்களை கீற வரும் சூரிய ஒளியும், என் அறை நண்பனின் வினோத கர்ஜனையோடான(!) பல் தேய்க்கும் பழக்கமும், அன்றைய தினம் விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தன. 

காலையில் எழுந்து பல் துலக்கியதும் பெரும்பாலானோர் மூளையில் தட்டுப்படும் அதே சொல்... ஆம்...
"யார் அங்கே... கொண்டு வாருங்கள், நான் பருக வெறியம் நீக்கிய குளம்பி" என்று கூற எனக்கு ஆசை இருந்தாலும், மறு ஜென்மத்தில் 'Rockefeller' பரம்பரையில் பிறக்கும் வரை அது சாத்தியமில்லை என்று உணர்ந்து வெகு நாட்களாகிவிட்டது.

துயிலெழுந்த நேரம், மதியவேளை ஏற்கனவே நெருங்க ஆரம்பித்து விட்டிருந்ததால், காபி தயார் செய்யும் திறன்படைத்த என் மூளையின் உயிரணுக்கள் செயலிழந்துவிட்டிருந்தன.
காலை நேரக் காபி குடிப்பதோடு சேர்த்து, வாரக்கடைசியில் முடிக்க வேண்டிய இன்னபிற வேலைகளையும் முடித்துவிட முடிவு செய்தேன்.

கார் பயணம்(காபி குடிக்க) : ருபாய் 677
காபி + பால் : ருபாய் 451
மறுபடியும் கார் பயணம் : ருபாய் 1354
முடி திருத்த(கொசுறு பணம் சேர்த்து) :  ருபாய் 1219
நான் சமைக்கும் பதார்த்தங்களுக்கான மளிகை கடை பட்டியல்.,
               இதயம் நல்லெண்ணெய் : ருபாய் 492
               கடுகு, உப்பு, புளி, மிளகாய், திப்பிலி என பட்டியலில் சில : மொத்தம் ருபாய் 2012 
வீடு திரும்ப கார் பயணம் : ருபாய் 1580

மீதமெல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கு 'MasterCard'
என்று முடிந்து விடும் இந்த விளம்பரம் அல்லது 
'தெளிந்துவிட்டது என் கனவு' என்று கூறக்கேட்க, கேலிச்சிரிப்போடு காத்திருக்கும் உங்களில் சிலருக்கு இதெல்லாம் 'உண்மையன்றி வேறில்லை' என்று கூறினால் என்னவாக இருக்கும் உங்களது பதில்..?

இல்லை.. இல்லை....இவை நடப்பது 3012-ஆம் வருடத்தில் இல்லை..
எல்லாம் நிகழ்காலம் தான்.
இவையெல்லாம் அமெரிக்க டாலர்களில். 
மேலிருக்கும் பட்டியலில், ருபாய்க்கு அருகில் இருக்கும் எண்கள், 44.7250-ஆல்  வகுக்கப்படவேண்டியவை..(இன்றைய நிலவரத்திற்கு!)
கார் பயணம்(காபி குடிக்க) : $ 15
காபி + பால் : $ 10
மறுபடியும் கார் பயணம் : $ 30
முடி திருத்த(கொசுறு பணம் சேர்த்து) :  $ 27 
மீதம் கணிக்கப்படாதவை, உங்களின் கணிதத்திறன் மேம்பாட்டிற்க்கு.. ஹி....ஹி...

ஆம்! இங்கு(அமெரிக்கா) வந்து வாழ ஆரம்பித்ததிலிருந்து என் மூளையினுள் ஒரு கணிப்பானை பொருத்தி, நான் செய்யும் எல்லா செலவுகளையெல்லாம் நாற்ப்பத்திஐந்தால் பெருக்க செயல்படுத்தப்பட்டதைப்போல் உணர்கிறேன்.

கலாச்சார மாற்றங்களை எதிர்கொண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், 
காந்திக்கும் பெஞ்சமின் பிராண்க்ளினுக்கும்(அமெரிக்க நூறு ருபாய் நோட்டிலிருப்பவர்) இருக்கும் வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இன்னும் சொல்லப்போனால் உலகப்போருளாதாரத்தின்(!) அடிப்படை புரிந்து விடவும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஆகும்.

இந்தியாவிலிருந்து இங்கு வந்து வாழும் பெரும்பாலானோருக்கு... இல்லை... இல்லை... எல்லோருக்கும் ஏற்ப்படும் இணைப்போக்கு தான் இது.

ஆறு மாதங்களுக்கு பின் இந்த எண்ணம் தோய்ந்து, செலவுகளை நாற்ப்பத்திஐந்தால் பெருக்கும் கணிப்பான் ஒரு மூலைக்கு தள்ளப்படும்., அதன் செயல் வேகம் சற்றும் குறையாமல்(!).

ஏன் நம் நாட்டை இன்னும் "வளர்ந்து வரும் நாடு" என்று இன்னும் கூறுகிறார்கள் என்ற அர்த்தம் புரியும். நம் நாட்டில் பெட்ரோல் விலை உயரும் போது, செய்தி வாசிப்பாளினி கூறும் அர்த்தம் புரியாத..."உலக வர்த்தகச்சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரெல் ஒன்றிற்கு..." என்பதன் விரிவாக்கம் சற்று விளங்கவரும்.

"அட! எனக்கு இன்றுவரை அப்படி(45-ஆல் பெருக்க) எல்லாம் ஒன்னும் தோணலயே.." என்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியவர் யாரேனும் இப்படி கூறக்கேட்டால், கண்டிப்பாக அவர் புளுகு மூட்டை என்று முத்திரை குத்தலாம்.

இந்த புளுகு மூட்டைகள் தான், "முடி வேட்டுவதைப்போன்ற அர்த்தமற்ற(!) செலவுகளில் மாதத்திற்கு ஒரு ஆயிரம்($15) செலவு செய்வதா ?" என்று அறிவு ஜீவித்தனமாக யோசித்து, அந்த செலவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை குறைக்க மொட்டை அடித்துக்கொள்ளும் கூட்டமும்.

இவர்களைபோன்றவர்களின் அட்டகாசம்(!) கொஞ்சம் அதிகமென்றே கூறலாம், உண்ணும் உணவில் ஆரம்பித்து வாழ்வின் அத்தியாவசிய தேவைகளையும் கணக்கிட்டு வாழ்பவர்கள். இவர்கள் கூறும் காரணம், "எல்லாம் விலை ஜாஸ்தி!".

இதையெல்லாம் 'விலை ஜாஸ்தி' என்று கூறுவது அர்த்தமற்றது என்பது என் கருத்து. பொருளாதார நிலவரத்தையும், சராசரி வருமான அளவுகோல்களின் அடிப்படையில் தான் இந்த இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று புரிந்தாலும் இவர்களின் கஞ்சத்தனத்தை நியாயப்படுத்த கிடைத்த நொண்டிச்சாக்கு தான் இந்த 'விலை ஜாஸ்தி' வாதம்.

சிங்காரச்சென்னை என்றால்.,
காபியின் சுவையை உடலின் ஒவ்வொரு உயிரணுவுக்கும் உணர்த்தும் நாயர் டீ கடைகள் எல்லா தெரு முனைகளிலும் உண்டு. சாலையோர கடை, கிளாஸ் டம்ளரில் காபி, மணமணக்க மசாலா வடை, சுடச்சுட இட்லி என்று இருபது ரூபாயில் காலைப்பசியாறிருக்கிறேன் என் நண்பர்களோடு.

'சென்னை டீ கடைகள்' என்றதும் சற்று அண்மையில் நடந்த சுவாரசிய சம்பவம் மனதில் வந்தது. அன்றைய காலை விடிந்தது சென்னைப்பட்டினத்தில்.
விடிந்தது அன்று எனக்கு வேறுபட்டு தெரியவில்லை, காரணம் முழு இரவும் நான் உறங்காமல் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று என் கண்களை பார்த்து எனக்கு நானே கேள்விகள் கேட்டு பதிலும் கூறிக்கொண்டிருந்தேன்.
'என்ன பாவம் செய்தேன் நான், இந்த கொடுமையை அனுபவிக்க!?' இது என் சுவர்க்கண்ணாடியின் புலம்பல்.
விடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் நேர் முகத்தேர்வு.
என்ன தான் என் மனதில் தொண்ணூற்றி ஒன்பது சதவிகித நம்பிக்கை இருந்தாலும் மீதமிருந்த அந்த ஒரு சதவிகிதம் என்னை தூங்க விடவில்லை.
எட்டு மணி நேர்முகத்திற்கு, ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டேன் நானும் என் நண்பனும் bike-ல்.

என் நண்பன் பைக் வெறியன்.
ஒரு தையல் ஊசியின் முனையில் நூல் புகும் அளவு இடமிருந்தாலும் சரி, அதனுள் பைக்கை நுழைத்து 'மயிர்க்கூச்செறியும் வேகத்தில்' லாவகமாக ஓட்டச்செல்லும் திறனுடையவன்.
"...சென்னையில் இருக்கும் சாலைகளை பெயர்த்தேடுத்துவிட்டோம் அதற்க்கு பதிலாக தரையிலிருந்து இருபது அடி உயரத்தில் கயிறு கட்டியுள்ளோம் இடங்களை இணைக்க இனி அதன் மேல் தான் இருசக்கர வாகனங்கள் செல்லவேண்டும்.." என்ற அறிவிப்பு வந்தாலும் கூட, எவ்வித மாற்றமும் வேண்டியிருக்காது அவனின் பைக் ஓட்டும் லாவகத்தில்.

அவனுக்கு 'வேளச்சேரி - ஜெமினி பாலம் - அமெரிக்க தூதரகம்' என்பதற்கு பதினைந்து நிமிடம் கூட ஆகவில்லை. ஆறு மணிக்கு முன்னதாகவே வந்து சேர்ந்தாயிற்று.
நேரம் கடத்த நாங்களும், ஜெமினி பாலம் முதல் ஸ்பென்சர் வரை எத்துனை கடைகள் என்பதில் ஆரம்பித்து குப்பை தொட்டிகள் வரை கூட எண்ணித் தீர்த்துவிட்டோம் 7.00  மணி வரை.
டீ/காபி குடிக்கலாம் என்று முடிவுசெய்து, கத்தீட்ரல் சாலையில் ஒரு டீ கடையை தேர்வு செய்து டீ குடிக்க ஆரம்பித்தோம்.
சற்று நேரத்திற்க்கெல்லாம் அந்த கடையில் டீ வாங்க அப்படி ஒரு அலை மோதும் கூட்டம். காரணம் புரியாமல் நாங்கள் ஒருவரையொருவர் வெறித்துக்கொண்டிருந்த நேரம் மின்னல் வேகத்தில் பேருந்துகளின் அணிவகுப்பு 'Stella Mary's' என்ற பெயர் தாங்கி.
சுடிதார் பாவைகளும், சேவல் கொண்டை நிற உதட்டோடு ஜீன்ஸ் பாண்ட் அழகிகளும் இறங்க, டீ கடை வாடிக்கையாளர்களின் அர்த்தம் விளங்கியது எனக்கு.

கேட்கிறது உங்கள் மனக்குரல் எனக்கு, "Stella Mary's தெரியாதாம் இவனுக்கு... போதும் நிறுத்து.. 'நாங்கள் நம்பிவிட்டோம்' "
என் சென்னை அத்தியாயம் தொடங்கியது என் வேலை நிமித்தமாகத்தான், என் பள்ளி/கல்லூரி நாட்கள் சென்னையில் இருந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும் எனக்கும்.

எங்கிருந்தால் என்ன.,
"ஆண்டவன் படைச்சான்...
எங்கிட்ட குடுத்தான்..
அனுபவி ராஜான்னு அனுப்பிவெச்சான்..." இந்த பாடல் வரிகள் தான் எனக்கு முணுமுணுக்க தோன்றுகிறது.

ராவணன் படப் பாடல்கள் கேட்க விழைந்தேன் சென்ற வாரம்...
மனதை கொள்ளைகொள்ளும் இசை.
'கணிணிகளுக்கு F5 போத்தானைப்போல, இந்த பாடல் வரிகள் என் மூளையின் செல்களுக்கு' என்று கூறினாலும் கூட அது மிகையாகாது.
நல்ல வேலை நான் கிராமபோன்(Gramophone) காலத்தில் பிறந்து இந்த பாடல்களை கேட்கும் நிலை இல்லை. அப்படி இருந்திருந்தால், அந்த பாடல்களை தாங்கியிருக்கும் தகடுகள் இந்நேரம் உஷ்ணத்தில் துவாரங்கள் கண்டிருக்கும்.
"காக்கை உன் மேல் எச்சமிட்டதை நினைத்து எரிச்சளுராதே, யானைகளால் பறக்க முடியவில்லை என்று சந்தோஷப்படு.." என்பதைப்போல் உள்ளதல்லவா என் உதாரணம்!?

என் தொடுதிரை Ipodல் இது வரை முன்னூறு முறைக்கு மேல் இந்த பாடல்களை கேட்டுத்தீர்ந்து விட்டேன்.

இதோ என் நாற்பதாவது வலைப்பதிவின் முடிவிற்க்கு வந்தாகிற்று.

நாற்ப்பது வலைப்பதிவுகள் 128 நாட்களில் அல்லது 3072 மணிநேரதில் அல்லது 184320 நிமிடங்களில் அல்லது 11059200 வினாடிகளில்.... எப்படியும் சொல்லலாம்.
உங்களின் தொடர்ந்த உற்சாகத்திற்கு தலை வணங்குகிறேன் வாசகர்களே.

இந்த வாரம் இணையத்தில் படித்ததில் பிடித்தது:
http://qurl.com/qj2hb (இதை படிக்க ஏதுவாக்கிய நட்பு வட்டாரதிற்க்கு, சிறப்பு நன்றிகள்)

படித்ததில் பிடித்த கவிதை:
நான்
ஆடையாக பிறந்திருந்தால்
என்னை உடுத்திக்கொண்டிருப்பாய்..
உன்
காதலனாகி விட்டேன்
அதான் துவைத்துக்கொண்டிருக்கிறாய்...

சந்திப்போம்...N