Friday, June 25, 2010

பதினொன்னு போட்டு காட்டு...

அழுதுவடியும் அழுக்குப்படிந்த பழைய கட்டிடம்.. அல்லது சற்றுமுன் கலெக்டர்/மந்திரியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய, ஆனாலும் விரைவில் அழுக்குப்படியப்போகும் வெள்ளை வெளேர் கட்டிடம்.

எவ்வளவு புதிதாக இருப்பினும்., அந்த கட்டிடங்களின் பெரும்பாலான தூண்கள் ஏற்கனவே சிகப்பு பாவாடை கட்டி இருப்பதை காணலாம். உபயம் : போது இடங்களில் வெற்றிலை மென்று துப்புவோர் சங்கம்.

கட்டிடத்தின் சுவரிலோ அல்லது அதை சுற்றி அமைந்துள்ள மதில் சுவரிலோ(!) 'நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்ற எச்சரிக்கையின் மேல் தேர்தல் பிரச்சார விளம்பரமோ, சினிமா விளம்பரங்களோ குடிகொண்டிருக்கும்.

கட்டிடத்தின் தென்மூலை, வடமூலை, சனிமூலை, ஈசான்யமூலை என எந்த மூலையையும் விடாமல், மூங்கில் தடுப்புகள் கட்டி அதை வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வசூலிக்கும் கூட்டம்.

தட்டச்சு இயந்திரம்/மடிக்கணிணி சகிதமாக கட்டிடத்தின் முன் இருபுறமும் அமர்ந்து தன் வேலைகளை கவனித்தும், மீதமுள்ள புலன்களால் நம்மை ஊடு கதிர்படமேடுக்கும் 'உடனடி தரகர்கள்' கூட்டம். இவர்களன்றி அரசாங்க அலுவலகத்தினுள் ஓரணுவையும் அசைக்க எந்த ஒரு இந்திய குடியுரிமை பெற்ற சாமானியனாலும் முடியாதென்பது இவர்களது எண்ணம்...இது உண்மை இல்லை என்று மறுக்க நாமில் பெரும்பாலானோர்க்கு முடியாது.

கட்டிடத்தினுள் நுழைந்ததுமே நாம் என்ன காரியத்திற்காக வந்திருக்கிறோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் அன்பளிப்பாக(!!) வாங்கலாம் என்று நம் முகம்/நடை/உடை பாவனைகளை வைத்து ஆரூடகம் செய்யும் 'அரசாங்க அலுவலர்' கூட்டம்.

கத்தை கத்தையாக கோப்புகள், ஏற்கனவே தன் பாதியை மூட்டைபூச்சிகள் விழுங்கிவிட்டதை உணர்ந்திருக்கும் மேசை நாற்காலிகள், மழைக்கால விளைவாக கண்ணீர் விட்டும் விரிசல் கண்டும் நிற்கும் சுவர்கள், ராஜராஜ சோழன் காலத்திலிருந்து இந்த அலுவலகங்களில் தங்கள் குடும்பத்தை விருத்தி செய்து கொண்டிருக்கும் சிலந்திகள்.... இவையெல்லாம் அரசாங்க அலுவலகத்தின் அடையாளமாக கண்டு வளர்ந்தவன் நான்.

கண்டிப்பாக., பெருமாள், செந்தில், மணிகண்டன் என பெயர்கள் கொண்ட அரசாங்க அலுவலர்களில் ஒருவரேனும்.. அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள் மேஜை மேலுள்ள பெயர் பலகைகளை...
ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன... என ஒவ்வொரு மேசைக்கும் டீ, காப்பி விநியோகிக்கும் டீ கடை சிறுவர்கள்..
நேற்றைய 'தங்கம்', 'தென்றல்' மெகா சீரியல் விமர்சனங்கள் காதுக்கு எட்டும் தூரத்திலிருக்கும் பெண் அலுவலர்களிடமிருந்து.

ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலக வேலைக்கு., பதினோரு மணிக்கு வந்ததையே லிம்கா சாதனைகளில் பதியவேண்டிய நிகழ்வாக நினைத்து பேசும் கூட்டம் ஒரு பக்கம், நாசாவில் தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளராக இருந்து, பால்வெளி நட்சத்திரங்களை சுற்றி இனம் புரியாமல் தோன்றும் கருப்பு வட்டங்களை பற்றிய ஆராய்ச்சியை தமிழக அரசாங்க வேலை நிமித்தம் கைவிட்டுவிட்டு வந்துவிட்ட ஒரு தோரணையோடு உலா வந்து கொண்டிருக்கும் அலுவலர்கள் ஏராளம்.

எல்லாமிருக்கட்டும், நாம் அந்த அலுவலகத்திற்க்கு வந்த வேலை என்ன என்பதை மட்டும் சுருங்கசொல்லிவிட்டால் போதும்.. அது அப்துல் கலாம் - முன்னாள் இந்திய ஜனாதிபதி என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் வேண்டுமானாலும் சரி(!)., அதற்க்கு யாருக்கு எவ்வளவு அன்பளிப்பு(!) கொடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் தயாராக இருப்பர் சித்திரகுப்தனாக அங்கிருக்கும் ப்யூன்கள்.

இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது நடந்திருக்கும்.

கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் என்பதில் ஆரம்பித்து மின் கட்டணம் கட்டுவது வரை பொதுவாக எல்லாவற்றுக்கும் இதே நிலை தான் நம் நாட்டில்.
உதாரணதிற்க்கு, ஓட்டுனர் உரிமம் பெற அரசாங்கத்திற்க்கு செலுத்தவேண்டிய கட்டணம் எவ்வளவு கேட்டால் நம்மில் பெரும்பாலனோர்க்கு கண்டிப்பாக தெரியாது... காரணம்..
இது தன்னிலை விளக்கம் கொண்ட வாக்கியம். காரண விளக்கம் தேவையிறாது என்று நினைக்கிறேன்(!).

"கட்டணம் மட்டும் தான் செலுத்துவேன்... அன்பளிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு..." என்று அரசு அதிகாரிகளிடம் வீம்பு பேசினால், கண்டிப்பாக எட்டு போடுவதற்கு பதிலாக பதினொன்று பொட்டு காட்டிவிட்டு தான் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இதைப் போன்ற அனுபவங்களில் வாழ்ந்து பழகிய எனக்கு, வரப்போகும் அனுபவ அலைகள் சற்றே பரவசமூட்டுபவை என்று சொன்னாலும் அது மிகையாகாது........

அனுபவ அலைகளோடு மீண்டும் சந்திக்கிறேன்.....N

Friday, June 11, 2010

சிங்கம் - மசாலா கர்ஜனை

பிக் பிக்சர்ஸ் - ஸ்டுடியோ கிரீன் இணைந்து K. E. ஞானவேல் ராஜா தயாரிக்க.,
'ஆறு' வெற்றிக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் சூர்யா - ஹரி கூட்டணியில்,
சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது - சிங்கம்

நாலு வரிக் கதையோ, நாற்பது வரிக் கதையோ...
இது வரை தமிழ் சினிமா பார்த்திராத கதையோ, பார்த்து சலித்துவிட்ட கதையோ..
மொத்தத்தில் வேண்டியது, எல்லா தர பார்வையாளர்களையும் இருக்கையில் இருத்த தேவையான அம்சங்கள். இந்த அம்சங்களில், பெரும்பாலானவற்றை தன்னுள் வாங்கி ரசிகர்களிடையே கம்பீர நடையோடு - சிங்கம்


தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சுழல ஆரம்பிக்கிறது கதை. தந்தை சொல் கேட்டு காவல்துறையில் தன் சொந்த ஊரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார் துரைசிங்கம்(சூர்யா)(படத்தின் பெயர்க் காரணத்தை இவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதை சற்றும் தவிர்க்க இயலவில்லை). பஞ்சாயத்து, சோம்பு, ஆலமரம் இவையேதுமில்லாமல் FIR, கோர்ட், கேஸ் என்றில்லாமல் ஊர் பிரச்சினைகளை தீர்த்தும் வைக்கிறார்.
விடுமுறைக்கு நல்லூரில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வரும் காவ்யா(அனுஷ்கா)வை சந்தித்து காதல் வயப்படுகிறார் துரைசிங்கம்.
பிரபல சென்னை கட்டப்பஞ்சாயத்து தாதா மயில்வாகனம்(பிரகாஷ் ராஜ்), கோர்ட் உத்தரவின் பேரில் நல்லூர் வரநேர்ந்து, துரைசிங்கத்திடம் மோதல் காண்கிறார்.
மோதலில் மண்ணை கவ்வும் மயில் வாகனம், துறைசிங்கத்தை பழிவாங்க தன் செல்வாக்கை கொண்டு அவரை சென்னைக்கு இடம் மாற்றுகிறார். சென்னை வரும் துரைசிங்கம் எப்படி மயில் வாகனத்தை ஒடுக்கி வெற்றி காண்கிறார் என்பதை கொஞ்சமும் சலிக்காமல் நேர்த்தியான காட்சிகளை கொண்டு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

நல்லூர் கிராமமாகட்டும், கூட்டம் நிறைந்த சென்னையாகட்டும்., கதையை எவ்விதத்திலும் தவற விட்டு விடாமல் தேவையான அளவு மசாலா கலவையோடு படம் தந்திருக்கிறார் ஹரி. கதையோடான நகைச்சுவை காட்சிகள், சல்லிப்பு உண்டாக்காத சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம்.

சூர்யா, கலகமற்ற நடிப்பு.
முகத்தின் பெரும்பாலான இடங்களில் மீசையோடு, படம் முழுக்க மிரட்டியிருக்கிறார். வசனங்கள், சண்டை காட்சிகள், காதல் வயப்படும் காட்சிகளென நடிப்பில் தெளிவு.

அனுஷ்கா., அழகு.
தமிழ் ரசிகர்களூடே இது அனுஷ்கா காலம் போலும்.
சூர்யாவின் மிரட்டலான நடிப்பை, தன் உதடு சுழிப்புகளில் கவர்ந்துவிட்டிருக்கிறார்.
பாடல் காட்சிகளில் மட்டும் வந்து போகாமல், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

விவேக்...கலைவாணர் ஸ்டைல் காமெடியை விட்டுவிட்டு 'ஏட்டு ஏரிமலை'யாக கலக்கியிருக்கிறார். பெரும்பாலானவை(வழக்கம்போல!!) இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பினும், கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கிறது.

பிரகாஷ் ராஜ், வில்லன்னுகேற்ற நடிப்பு..வழக்கம் போல.
நடிப்பில் மின்னுகிறார்.

ராதா ரவி, நிழல்கள் ரவி, மனோரமா, நாசர், போஸ் வெங்கட் என பெரும் நட்சத்திர கூட்டம். எல்லோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

நம்மை நாற்காலியோடு இரண்டரை மணி நேரம் கட்டிபோடிருக்கும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ்!
திரைக்கதையின் வேகத்தில் V.T.விஜயனின் கத்தரிக்கோலுக்கு முக்கிய பங்குண்டு.

தமிழ் படங்களுக்கே உரித்தான., ஒரே பாடலில் சாதிக்கும் ஹீரோ, பார்த்தவுடன் காதல் வயப்பட ஹீரோயின், Assistant Commissioner-யும் எதிர்த்து பேசி ஸ்டேஷனை விட்டு வெளியேற்றும் இன்ஸ்பெக்டர் ஹீரோ, ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் நிராயுதபாணியாக நின்று எல்லோரையும் பந்தாடும் ஹீரோ என படம் நெடுக மசாலா வாசம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஐந்து பாடல்கள்.
பாடல்கள் ஏதும் மனதில் நிற்காவிட்டாலும், அனுஷ்காவின் ஆட்டத்தால் கண்களில்  நிற்கிறது.

நாலு வரிக்கதைக்கு அதிவேக திரைக்கதையோடு இன்னபிற மசாலா அம்சங்களையும் சேர்த்து வெற்றிப்படம் தருவதேப்படி என்பதற்கு சிங்கம் நல்ல உதாரணம்

சந்திப்போம்....N

Monday, June 7, 2010

வீழ்வது நானாக இருப்பினும்.. வாழ்வது தமிழாக இருக்கட்டும்....

செம்மொழியான தமிழ் மொழியாம்.
இதோ நம் ரஹ்மானின் இசையில் தமிழ் மாநாட்டிற்க்கான தமிழ் வாழ்த்துப் பாடல்.
இரண்டரை மாத உழைப்பு.. எழுபது பாடகர்கள்... என பின்னியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் சுறுசுறுப்பாக இசைத்துக்கொண்டிருந்த ரஹ்மானை கொண்டுவந்து இந்த பாடலுக்கு சுருதி சேர்க்கச் செய்திருக்கிறார்கள்.

"பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்.." என T.M. சௌந்தரராஜன் ஆரம்பிக்க, யுவன், ஸ்ருதிஹாசன், P.சுஷீலா, ஹரிணி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், பென்னி தயல் என நீளுகிறது இந்த இசைஞர் குழுமம்.

கலைஞரின் பாடல் வரிகள், கௌதம் மேனன் இயக்கம், மூன்று வெவ்வேறு தலைமுறை பாடகர்கள் என மெய் சிலிர்க்கவைக்கும் அம்சங்கள் பல..

பாடலுக்கு மேலும் மெருகேற்ற., குமரியில் தொடங்கி, ராமேஸ்வரம் கடற்கரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி....மகாபலிபுரம், டைடல் பார்க் என பல 'அட' சொல்ல வைக்கும் கோணங்களில் கேமரா கொண்டு வர்ணம் தீட்டி இருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீதம் - அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மற்றும் சௌம்யா..
கிராமிய இசை - M.Y.அப்துல் கனி, காஜாமொய்தீன், S.சாபுமொய்தீன்
ராப் - ப்லேஸ்
என இசைக் காவியம் படைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும், என் மனதில் பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு...

இதோ உங்கள் பார்வைக்கு..


Friday, June 4, 2010

தனிமை

நீ
என்னுடன் இருக்கும்போது
பேசுவதை விட
நீ
இல்லாத என் தனிமையில்
உன்னுடன் பேசுவதே அதிகம்..!

Wednesday, June 2, 2010

என் மனதில்

சில நேரம் நினைவில்..
சில நேரம் அருகில்..
சில நேரம் தொலைவில்..
அனால்
நீ
என்றும்
என் மனதில்..

பிரிவு

உண்மையான
காதலை
புரிந்து
கொள்ள
ஒரு
சந்தர்ப்பம் -  உன் பிரிவு !!

சுறா

வேட்டைக்காரன் வந்து ஓடிய தடம் மறையும் முன், இதோ மறுபடியும் சன் பிக்சர்ஸ் - விஜய் கூட்டணியில் : சுறா.

என்ன எதிர்பார்க்கலாம் விஜய் படத்தில்.,
  • ஊர் போற்றும் இளைஞனாக விஜய் அல்லது கிராமத்திலிருந்து சென்னை வந்து வில்லன்களை பந்தாடும் வெகுளி இளைஞனாக விஜய்
  • ஊரைக் கட்டி ஆள நினைக்கும் அரசியல்வாதி அல்லது கட்டப்பஞ்சாயத்து தாதா அல்லது பணக்கார முதலை... இவர்களை எதிர்க்கும் ஹீரோவாக விஜய்
  • ஹீரோவை அதிரடியாக காட்ட(நடந்து வருகையில் மின்னல்/இடி பூமியில் இறங்குவது போலும், எதிரிகளை பந்தாடுகையில் ஹீரோவின் கைகள் ஐந்தாகவும் நூறாகவும் பிண்ணுவதும், தீ பறக்கும் கண்கள் என...)., மென்பொருள்/கேமரா உத்திகள், அதிரவைக்கும் பின்னனி இசை
  • கூட்டம் நிறைந்த சந்தையில் சண்டை காட்சிகள், வில்லன்களை துரத்தி துரத்தி பந்தாடும் சண்டை காட்சிகள்
  • வார்த்தையில் ஜாலங்கள் செய்யவதாக எண்ணி 'பஞ்ச்' வசனங்கள்
  • அம்மா/அப்பா/தங்கை/அக்கா/சித்தப்பா/தாத்தா/பாட்டி......நண்பன்... என இதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து.. அதற்கேற்ற செண்டிமெண்ட் காட்சிகள்
  • ஹீரோ அறிமுக காட்சிக்கு ஒரு அதிரடிப் பாடல்
  • மற்ற மூன்று பாடல்களுக்கு நடனமாட ஒரு முன்னனி நடிகை, ஹீரோயினாக.
  • இடுப்பாட்டி, தொப்புள் காட்டி, செர்ரி பழ வர்ண உதடு கடித்து ஆடும் கவர்ச்சி நடிகையுடன் ஒரு பாடல்
  • இதில் குறைந்தபட்சம் ஒரு பாடலுக்காவது சுவிட்சர்லாந்தில் நடனம்.
  • இந்த பட்டியலில் ஏதாவதொரு பாடல்..கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்
  • இவையெல்லாம் சலித்து விடாமலிருக்க ஆங்காங்கே தலைக்காட்டும் வடிவேலு அல்லது விவேக் நகைச்சுவை காட்சிகள்
  • ரசிகர்கள் தான் தனது பலமென்று புரியவைக்க ஆங்காங்கே அவர்களை போற்றி வசனங்கள்
  • அடுத்த காட்சி என்னவென்று மூன்றாம் வகுப்பு சுட்டியும் சட்டென்று கூறிவிடும் கதை தளம்
இவை தான் சமீபகால விஜய் படங்களில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது.
மேலே குறிப்பிட்ட எதற்கும் குறை வைக்காமல் வெள்ளி திரைகளில் உலா வந்து கொண்டிருக்கிறது - சுறா

யாழ்குப்பம், அதில் வசிக்கும் மீனவர்கள்.. அவர்கள் போற்றும் தலைவனாக சுறா(விஜய்). மீனவர்கள் வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்து கேளிக்கை பூங்காவாக மாற்ற நினைக்கும் அரசியல்வாதி சமுத்ர ராஜா(தேவ் கில்). ஹீரோ ஏழையாக இருப்பதால் பணக்கார ஹீரோயினாக பூர்ணிமா(தமன்னா). 
மீனவக்குப்பத்து நண்பனாக அம்பர்லா(வடிவேலு).
வில்லன்களின் சூழ்ச்சிகளிலிருந்து எப்படி தன் மீனவ குப்பத்தை மீட்டு, அங்கு வாழும் அனைவருக்கும் எப்படி வீடு கட்டி தந்து வெற்றி காண்கிறார் சுறா என்பது தான் மீதிக்கதை.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் S.P.ராஜ்குமார்., நான்கு வரிக்கதையில் எதற்கு இயக்கம், அதுவும் விஜய் நடிக்கும் படத்தில் எதற்கு என்று சும்மா இருந்துவிட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்(!).

தமன்னா., அவருடைய முந்தய படங்களை நினைவூட்டுகிறார் பல காட்சிகளில். பல படங்களில் ஒரே மாதிரி நடிச்சு ஹிட் ஆகுற காலம் ஜோதிகாவோட மலையேறி போச்சு என்பதை யாராவது அவரிடம் சுட்டி காட்ட வேண்டிய நேரமிது.

வடிவேலு., நம்மை சிரிக்கவைக்க முயற்சிசெய்து படம் முழுக்க தோற்றிருக்கிறார்.

தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமான், ராதா ரவி தங்கள் பங்கை செய்துவிட்டிருக்கிறார்கள்...அவ்வளவே(!)

படத்தில் முற்றிலும் புரியாத காட்சிகளில் ஒன்று., "விஜய்., தான் வில்லனிடம் கடத்திய மடிக்கணிணிகளை மும்பை சென்று யாரோ ஒரு தொழிலதிபரிடம் விற்ப்பது போல்"
உண்மையில் எனக்கு விளங்கவில்லை, என்ன செய்ய முயற்சிக்கிறார்களென்று.
இது கலியுகமில்லை..கணிணியுகம்...
படிப்பறிவின்றி கத்தரிக்காய் வியாபாரம் செய்பவருக்கும் 'IT Recession' வரை என்னவென்று புரியும் இந்த காலத்தில், இதைப்போன்ற காட்சிகளால் மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது சிரிப்பை வரவைக்கிறது.

சண்டைக் காட்சிகள் ஏற்கனவே பார்த்துச் சலித்தவை.

மணி ஷர்மா இசையில் ஐந்து பாடல்கள்... 'சிறகடிக்கும் நிலவு..' பாடல், படத்தில் மீதமுள்ள பாடல்களை காட்டிலும் மேன்மை.

சுருக்கமாக ஒரு வரியில் : சுறா ஓடுற தியேடர் பக்கம் கூட போய்டாதீங்க பாஸ்.

சந்திப்போம்...N