Wednesday, June 2, 2010

சுறா

வேட்டைக்காரன் வந்து ஓடிய தடம் மறையும் முன், இதோ மறுபடியும் சன் பிக்சர்ஸ் - விஜய் கூட்டணியில் : சுறா.

என்ன எதிர்பார்க்கலாம் விஜய் படத்தில்.,
  • ஊர் போற்றும் இளைஞனாக விஜய் அல்லது கிராமத்திலிருந்து சென்னை வந்து வில்லன்களை பந்தாடும் வெகுளி இளைஞனாக விஜய்
  • ஊரைக் கட்டி ஆள நினைக்கும் அரசியல்வாதி அல்லது கட்டப்பஞ்சாயத்து தாதா அல்லது பணக்கார முதலை... இவர்களை எதிர்க்கும் ஹீரோவாக விஜய்
  • ஹீரோவை அதிரடியாக காட்ட(நடந்து வருகையில் மின்னல்/இடி பூமியில் இறங்குவது போலும், எதிரிகளை பந்தாடுகையில் ஹீரோவின் கைகள் ஐந்தாகவும் நூறாகவும் பிண்ணுவதும், தீ பறக்கும் கண்கள் என...)., மென்பொருள்/கேமரா உத்திகள், அதிரவைக்கும் பின்னனி இசை
  • கூட்டம் நிறைந்த சந்தையில் சண்டை காட்சிகள், வில்லன்களை துரத்தி துரத்தி பந்தாடும் சண்டை காட்சிகள்
  • வார்த்தையில் ஜாலங்கள் செய்யவதாக எண்ணி 'பஞ்ச்' வசனங்கள்
  • அம்மா/அப்பா/தங்கை/அக்கா/சித்தப்பா/தாத்தா/பாட்டி......நண்பன்... என இதில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து.. அதற்கேற்ற செண்டிமெண்ட் காட்சிகள்
  • ஹீரோ அறிமுக காட்சிக்கு ஒரு அதிரடிப் பாடல்
  • மற்ற மூன்று பாடல்களுக்கு நடனமாட ஒரு முன்னனி நடிகை, ஹீரோயினாக.
  • இடுப்பாட்டி, தொப்புள் காட்டி, செர்ரி பழ வர்ண உதடு கடித்து ஆடும் கவர்ச்சி நடிகையுடன் ஒரு பாடல்
  • இதில் குறைந்தபட்சம் ஒரு பாடலுக்காவது சுவிட்சர்லாந்தில் நடனம்.
  • இந்த பட்டியலில் ஏதாவதொரு பாடல்..கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்
  • இவையெல்லாம் சலித்து விடாமலிருக்க ஆங்காங்கே தலைக்காட்டும் வடிவேலு அல்லது விவேக் நகைச்சுவை காட்சிகள்
  • ரசிகர்கள் தான் தனது பலமென்று புரியவைக்க ஆங்காங்கே அவர்களை போற்றி வசனங்கள்
  • அடுத்த காட்சி என்னவென்று மூன்றாம் வகுப்பு சுட்டியும் சட்டென்று கூறிவிடும் கதை தளம்
இவை தான் சமீபகால விஜய் படங்களில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது.
மேலே குறிப்பிட்ட எதற்கும் குறை வைக்காமல் வெள்ளி திரைகளில் உலா வந்து கொண்டிருக்கிறது - சுறா

யாழ்குப்பம், அதில் வசிக்கும் மீனவர்கள்.. அவர்கள் போற்றும் தலைவனாக சுறா(விஜய்). மீனவர்கள் வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்து கேளிக்கை பூங்காவாக மாற்ற நினைக்கும் அரசியல்வாதி சமுத்ர ராஜா(தேவ் கில்). ஹீரோ ஏழையாக இருப்பதால் பணக்கார ஹீரோயினாக பூர்ணிமா(தமன்னா). 
மீனவக்குப்பத்து நண்பனாக அம்பர்லா(வடிவேலு).
வில்லன்களின் சூழ்ச்சிகளிலிருந்து எப்படி தன் மீனவ குப்பத்தை மீட்டு, அங்கு வாழும் அனைவருக்கும் எப்படி வீடு கட்டி தந்து வெற்றி காண்கிறார் சுறா என்பது தான் மீதிக்கதை.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் S.P.ராஜ்குமார்., நான்கு வரிக்கதையில் எதற்கு இயக்கம், அதுவும் விஜய் நடிக்கும் படத்தில் எதற்கு என்று சும்மா இருந்துவிட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்(!).

தமன்னா., அவருடைய முந்தய படங்களை நினைவூட்டுகிறார் பல காட்சிகளில். பல படங்களில் ஒரே மாதிரி நடிச்சு ஹிட் ஆகுற காலம் ஜோதிகாவோட மலையேறி போச்சு என்பதை யாராவது அவரிடம் சுட்டி காட்ட வேண்டிய நேரமிது.

வடிவேலு., நம்மை சிரிக்கவைக்க முயற்சிசெய்து படம் முழுக்க தோற்றிருக்கிறார்.

தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமான், ராதா ரவி தங்கள் பங்கை செய்துவிட்டிருக்கிறார்கள்...அவ்வளவே(!)

படத்தில் முற்றிலும் புரியாத காட்சிகளில் ஒன்று., "விஜய்., தான் வில்லனிடம் கடத்திய மடிக்கணிணிகளை மும்பை சென்று யாரோ ஒரு தொழிலதிபரிடம் விற்ப்பது போல்"
உண்மையில் எனக்கு விளங்கவில்லை, என்ன செய்ய முயற்சிக்கிறார்களென்று.
இது கலியுகமில்லை..கணிணியுகம்...
படிப்பறிவின்றி கத்தரிக்காய் வியாபாரம் செய்பவருக்கும் 'IT Recession' வரை என்னவென்று புரியும் இந்த காலத்தில், இதைப்போன்ற காட்சிகளால் மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது சிரிப்பை வரவைக்கிறது.

சண்டைக் காட்சிகள் ஏற்கனவே பார்த்துச் சலித்தவை.

மணி ஷர்மா இசையில் ஐந்து பாடல்கள்... 'சிறகடிக்கும் நிலவு..' பாடல், படத்தில் மீதமுள்ள பாடல்களை காட்டிலும் மேன்மை.

சுருக்கமாக ஒரு வரியில் : சுறா ஓடுற தியேடர் பக்கம் கூட போய்டாதீங்க பாஸ்.

சந்திப்போம்...N