Friday, June 11, 2010

சிங்கம் - மசாலா கர்ஜனை

பிக் பிக்சர்ஸ் - ஸ்டுடியோ கிரீன் இணைந்து K. E. ஞானவேல் ராஜா தயாரிக்க.,
'ஆறு' வெற்றிக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் சூர்யா - ஹரி கூட்டணியில்,
சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது - சிங்கம்

நாலு வரிக் கதையோ, நாற்பது வரிக் கதையோ...
இது வரை தமிழ் சினிமா பார்த்திராத கதையோ, பார்த்து சலித்துவிட்ட கதையோ..
மொத்தத்தில் வேண்டியது, எல்லா தர பார்வையாளர்களையும் இருக்கையில் இருத்த தேவையான அம்சங்கள். இந்த அம்சங்களில், பெரும்பாலானவற்றை தன்னுள் வாங்கி ரசிகர்களிடையே கம்பீர நடையோடு - சிங்கம்


தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சுழல ஆரம்பிக்கிறது கதை. தந்தை சொல் கேட்டு காவல்துறையில் தன் சொந்த ஊரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார் துரைசிங்கம்(சூர்யா)(படத்தின் பெயர்க் காரணத்தை இவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதை சற்றும் தவிர்க்க இயலவில்லை). பஞ்சாயத்து, சோம்பு, ஆலமரம் இவையேதுமில்லாமல் FIR, கோர்ட், கேஸ் என்றில்லாமல் ஊர் பிரச்சினைகளை தீர்த்தும் வைக்கிறார்.
விடுமுறைக்கு நல்லூரில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வரும் காவ்யா(அனுஷ்கா)வை சந்தித்து காதல் வயப்படுகிறார் துரைசிங்கம்.
பிரபல சென்னை கட்டப்பஞ்சாயத்து தாதா மயில்வாகனம்(பிரகாஷ் ராஜ்), கோர்ட் உத்தரவின் பேரில் நல்லூர் வரநேர்ந்து, துரைசிங்கத்திடம் மோதல் காண்கிறார்.
மோதலில் மண்ணை கவ்வும் மயில் வாகனம், துறைசிங்கத்தை பழிவாங்க தன் செல்வாக்கை கொண்டு அவரை சென்னைக்கு இடம் மாற்றுகிறார். சென்னை வரும் துரைசிங்கம் எப்படி மயில் வாகனத்தை ஒடுக்கி வெற்றி காண்கிறார் என்பதை கொஞ்சமும் சலிக்காமல் நேர்த்தியான காட்சிகளை கொண்டு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

நல்லூர் கிராமமாகட்டும், கூட்டம் நிறைந்த சென்னையாகட்டும்., கதையை எவ்விதத்திலும் தவற விட்டு விடாமல் தேவையான அளவு மசாலா கலவையோடு படம் தந்திருக்கிறார் ஹரி. கதையோடான நகைச்சுவை காட்சிகள், சல்லிப்பு உண்டாக்காத சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம்.

சூர்யா, கலகமற்ற நடிப்பு.
முகத்தின் பெரும்பாலான இடங்களில் மீசையோடு, படம் முழுக்க மிரட்டியிருக்கிறார். வசனங்கள், சண்டை காட்சிகள், காதல் வயப்படும் காட்சிகளென நடிப்பில் தெளிவு.

அனுஷ்கா., அழகு.
தமிழ் ரசிகர்களூடே இது அனுஷ்கா காலம் போலும்.
சூர்யாவின் மிரட்டலான நடிப்பை, தன் உதடு சுழிப்புகளில் கவர்ந்துவிட்டிருக்கிறார்.
பாடல் காட்சிகளில் மட்டும் வந்து போகாமல், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

விவேக்...கலைவாணர் ஸ்டைல் காமெடியை விட்டுவிட்டு 'ஏட்டு ஏரிமலை'யாக கலக்கியிருக்கிறார். பெரும்பாலானவை(வழக்கம்போல!!) இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பினும், கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கிறது.

பிரகாஷ் ராஜ், வில்லன்னுகேற்ற நடிப்பு..வழக்கம் போல.
நடிப்பில் மின்னுகிறார்.

ராதா ரவி, நிழல்கள் ரவி, மனோரமா, நாசர், போஸ் வெங்கட் என பெரும் நட்சத்திர கூட்டம். எல்லோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

நம்மை நாற்காலியோடு இரண்டரை மணி நேரம் கட்டிபோடிருக்கும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ்!
திரைக்கதையின் வேகத்தில் V.T.விஜயனின் கத்தரிக்கோலுக்கு முக்கிய பங்குண்டு.

தமிழ் படங்களுக்கே உரித்தான., ஒரே பாடலில் சாதிக்கும் ஹீரோ, பார்த்தவுடன் காதல் வயப்பட ஹீரோயின், Assistant Commissioner-யும் எதிர்த்து பேசி ஸ்டேஷனை விட்டு வெளியேற்றும் இன்ஸ்பெக்டர் ஹீரோ, ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் நிராயுதபாணியாக நின்று எல்லோரையும் பந்தாடும் ஹீரோ என படம் நெடுக மசாலா வாசம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஐந்து பாடல்கள்.
பாடல்கள் ஏதும் மனதில் நிற்காவிட்டாலும், அனுஷ்காவின் ஆட்டத்தால் கண்களில்  நிற்கிறது.

நாலு வரிக்கதைக்கு அதிவேக திரைக்கதையோடு இன்னபிற மசாலா அம்சங்களையும் சேர்த்து வெற்றிப்படம் தருவதேப்படி என்பதற்கு சிங்கம் நல்ல உதாரணம்

சந்திப்போம்....N