Wednesday, March 24, 2010

கடவுள் பாதி....

வீட்டை விட்டு வெளியே வந்ததுமே, 'அட, என்ன அது இவ்வளவு உயரத்தில் வெள்ளையாக.....!? அதுவும் இவ்வளவு வெளிச்சமாக ஏதோ ஒன்று...!?' என்று ஆச்சர்ய கண்களோடு வேரித்துக்கொண்டிருந்தேன் சிகாகோ வானத்தை...
சுமார் ஆறு மாதங்களுக்கு பின் சூரியனை பார்க்கும் எவருக்கும் ஏற்படும் பிரமை தான் எனக்கும்.

நாடக மேடையில் பின்னனித்திரை மாற்றுவது போல், பனி எல்லாம் கரைந்து பசும் புல்வெளி காண முடிகிறது இப்போதெல்லாம்.

வெயிலை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துவிட்டால் இந்தியா சீக்கிரம் வல்லரசு நாடு ஆகிவிடும் என்று பல முறை நண்பர்கள் மத்தியில் கூறியதை நினைத்து என்னுள் சிரித்தேன். இனி என் வாழ்நாளில் 'வெயில் கொடுமை'  என்ற எண்ணம் கூட வரவிடமாட்டேன்  என்று உறுதிமொழி கூறி பல நாட்கள் ஆகிவிட்டன.

மின் இரயில் ஏறிச்செல்ல முடிவு செய்திருந்தேன் சிகாகோ-வில் வெயில் பட்டு மிளிரும் மிச்சிகன் ஏரியை ரசிக்க.
வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடை தூரம் மின் ரயிலேற.

பொதுவாக இங்கு பஸ், இரயில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் கணிசம். காரணம், அனைவரிடமும் கார் உண்டு. இதனாலேயே இங்கு இருக்கும் இரயில் நிலையங்கள் வெறிச்சோடியே காணப்படும்.
நான் சென்றது சனிக்கிழமை காலை.
இரயில் நிலையம் அடைந்தபோது, என்னையும் சேர்த்து மூன்று பேர்.

இரயில் நிலைய ஒலிப்பெருக்கி, மெல்லிய வயலின் இசையை கசிந்து கொண்டிருந்தது.
இசையை சற்று நிறுத்திவிட்டு, அமெரிக்க ஆங்கிலத்தில் "இனிய காலை வணக்கங்கள்" என்றது ஒரு ஆண் குரல்...  தொடர்ந்து....
"இப்போது நேரம் சரியாக 8:20 மணி 32 வினாடிகள். இந்த மின் இரயில் நிலையத்திற்கு 8:40 மணிக்கு வரவேண்டிய மின் இரயில் வண்டி 90 வினாடிகள் தாமதமாக வந்தடையும். இதனால் உங்கள் பயணத்தில் ஏற்படும் தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறோம்.
உங்கள் நாள் நன் நாளாக...." என்று தொடர்ந்தது அந்த அறிவிப்பு.

நான் ஒன்பது மணி நேரம் கூட காத்திருந்து, இரயில் ஏறி இருக்கிறேன் என் நாட்டில்(!). இந்த தொண்ணூறு  வினாடி தாமதத்திற்கு ஏன் இந்த அலட்டல் என்று மனதிற்குள் வியந்து கொண்டிருந்தேன்.

என் அருகில் அமர்த்திருந்த 'குட்டப்பாவாடைக்காரி', கடித்த ஆப்பிள் தாங்கியிருந்த   தோடுதிரை கைப்பேசியை., விரல்களால் வருடி காதருகே கொண்டு சென்றதுமே "ச்சே.....நான் வரும் இரயில் 90 வினாடிகள்  தாமதமாம், இந்த ஒழுங்கீனம் எனக்கு சுத்தமா புடிக்காது... எதற்கு வரி வாங்குகிறார்களாம்.....' என்று யாரிடமோ புலம்புவது என்னால் கேட்க முடிந்தது.
இங்கிதம் கருதி சற்று நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன், என் எண்ண அலைகளை சற்று சிதரவிட...

வெளிச்சத்திலும் சட்டென்று புலப்படும் LCD திரை 8:41:23 என்று  மணி காட்டிக்கொண்டிருந்தது.
சொல்லி வைத்தாற்ப்போல, சற்று தூரத்தில் இரயில் வரும் சப்தம்.
இன்னும் சில வினாடிகளில் கண்களுக்கு புலப்பட்டு, 8:41:30 க்கு இரயில் நிலையம் வந்தடைந்தது.

இப்போது என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். வரிசையில் நின்று இரயிலில் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் சென்று சேர்ந்தேன் அந்த நான்கு பேர் வரிசையில் ஐந்தாவதாக.
'ஐந்து பேருக்கு வரிசையா !? என்ன கொடுமை சார் இது'

இரயில்களிலும் தானாக விலகி வழி விடும் கதவுகள், இன்னும் எத்துனை வினாடிகள் கதவு திறந்திருக்கும் என்பதையும் நடைபாதையிலிருந்து இரயிலில் ஏறும்போது கவனமாக ஏறவும் என்று எச்சரிக்கும் பெண் குரல்.

இரயிலில் ஏறியதும் முண்டியடிதுக்குகொண்டு, நிற்க இடம் தேடும் கஷ்டம் இல்லை. கிண்டி வந்தால் கண்டிப்பாக உட்காரலாம் என்ற கற்பனைகள் ஏதும் இல்லாமல் சற்று நிதானமாக உட்கார இடம் கண்டேன் இரயிலின் முதல் தளத்தில்.

எப்படி நேரம் கடத்துவேன் இந்த பயணத்தில்,
'Ramu loves Divya', 'Chrompet  Kings - Always Wins', 'எங்கள் தல Ajith' என்ற வாசகங்கள் .....
"நீ பார்க்க வேண்டும் என்று, நீ திரும்பும் இடங்களில் எல்லாம் நான் நிற்கிறேன் -இப்படிக்கு செந்தில்" என்ற கவிதைகள்....
'ஒரு நாளைக்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்', 'ஏசு சீக்கிரம் அவதரிப்பார்' என்ற விளம்பரங்கள்....
இவை ஏதும் இல்லையே இந்த இரயில் சுவற்றில் என்று சிரித்தபடி திரும்பினேன்.

"டிக்கெட் ப்ளீஸ்!" என்றார் ஒரு PeterEngland விளம்பர மாடல்.
இரயில் கண்டக்டர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு என்னை வியக்க வைத்ததும், சிகாகோ சென்று எப்போது திரும்புவீர்கள் என்றார்.
"ஏன்? அதற்கும் ஏதாவது வரி வைத்திருக்கிறீர்களா ?" என்றேன்.
சிரித்துக்கொண்டே, "இல்லை சார், Return டிக்கெட் சேர்த்து வாங்கினால் 4டாலர் குறைவு, உங்கள் சம்பாத்தியத்தில் கொஞ்சம் மிச்சம் பண்ண உதவி செய்யலாம் என்ற எண்ணம் தான்" என்றார்.
நானும் சிரித்துக்கொண்டே நன்றி கூறிவிட்டு, பின்னோக்கி நகரும் வீடுகளையும் மரங்களையும் பார்த்து நேரம் கடத்த சற்று ஜன்னலோரம் அமர்ந்தேன்.

நாற்பத்தி ஐந்து நிமிட இரயில் பயணம்.

பயணம் முழுவதிலுமே, அடுத்து வரும் நிறுத்தம் எது, இப்போது இரயில் நிற்கும் நிறுத்தம் பற்றிய அறிவிப்புகள் இரயிலின் உள்ளடங்கிய ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்தன.

சிகாகோ வந்திறங்கியதும், மிச்சிகன் ஏரி பார்க்க சிகாகோ நதியோர பாதையில் நடந்து சென்றேன். ஒரு மைல் தூர நடை பயணம்.
நதியோரம் நடக்க காரணம், சிகாகோ-வின் பெரும்பாலான பிரபல கட்டடங்கள் அனைத்துமே இந்த நதிக்கரையோரம் தான்.

சிகாகோ நதி, மிச்சிகன் ஏரியிலிருந்து தென் திசை நோக்கி பாயும் நதி.
கிட்டதிட்ட ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் பிணங்களையும் நகரத்தின் இன்னபிற கழிவுகளையும் உள்வாங்கிக்கொண்டிருந்த நதி, இப்போது இந்த நகரத்தின் ஒரு முக்கிய அங்கம்.

வெயிலடித்து நாட்கள் பல ஆகியிருந்ததால், அன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது.
வந்திருந்த பெண்களில் பெரும்பாலானோர், மூன்று வயதில் அவர்கள் அணிந்திருந்த ஆடையை அணிந்து வந்திருந்தனர்......  வெயில் கொடுமையாம்!

மிச்சிகன் ஏரியின் ஓரம் இருக்கும் சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.,  சிகாகோ-வின் அறிவியல் மற்றும் தொழிற்சாலை அருங்காட்சியகம் சென்றடைய.

அருங்காட்சியகம் வந்தடைந்ததேன்... அப்படி என்ன இங்கு இருக்கிறது என்கிறீர்களா ?

மனிதன் கலப்பை பிடித்து விவசாயம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, இயந்திரங்களின் தேவை புரிய ஆரம்பித்து, அவற்றை வடிவமைத்து, பின்னர் தேவைக்கேற்ப மேம்படுத்தியது முதல் நிலவில் மனிதன் கால் பதித்தது, செவ்வாயில் கிணறு வெட்டும் இயந்திர மனிதன், நாம் பிரபஞ்சத்தில் இதுவரை சென்றிருக்கும் தூரம், நாளைய வீடுகள் எப்படி காட்டப்படும் என்ற நீண்ட நெடும் பட்டியல்...

காட்சிக்கு இல்லாத அரங்குகளே இல்லை என்று தான் கூறவேண்டும்...
மருத்துவம், விண்ணியல், புவியியல், கணிணியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல் என்று இன்னும் எத்தனையோ!

இது மட்டுமல்லாமல், ஜெர்மானியர்களிடமிருந்து அமெரிக்க கடற்படை கைப்பற்றிய U-505 என்னும் நீர்மூழ்கி(நிஜ) கப்பலை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
அந்த நீர்மூழ்கியின் பழமை சிறிதும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.
மட்டுமல்லாமல் அதனுள் சிறு சுற்றுலாவுக்கும் அனுமதி உண்டு.

என்னை மிகவும் கவர்ந்தது, ஏதிர்காலம் எப்படி இருக்கும்.
விஞ்ஞானம் எப்படி எல்லாம் உருமாறக்கூடும், அதற்கான ஆராய்ச்சிகள் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கின்றன, அந்த ஆராய்ச்சிகளில் நாம் ஏதேனும் வெற்றி பெற்றோமா அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப்பற்றிய., "இது சாத்தியமானால்" அறிவியல் அரங்கு தான்.
"இது சாத்தியமானால்" என்று ஒரு நீண்ட பட்டியலோடு அந்த அரங்கு.

பெரும்பாலானவை., 'இது எப்படி முடியும் !?' என்று நம் புருவத்தை  உயர்த்தும் வண்ணம் அமைந்திருந்தது.
- Pizza வை மின்னஞ்சலில் அனுப்புவது சாத்தியமானால்......
இதை விஞ்ஞானிகள் செயல் முறையில் சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

விளங்கச்சொன்னால்., நீங்கள் 'சரவணா பவன்' மசாலா தோசை வேண்டும் என்று வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசியில் உங்கள் விருப்பத்தை கூறி பணம் செலுத்தியதும், எதிர்முனையில் இருப்பவர் "10 நிமிடத்தில் தயார் ஆஹிவிடும் சார்" என்பார்.

நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வீட்டில் microwave-oven அளவில் இருக்கும் கணிணி முன் காத்திருக்க வேண்டியதுதான். 11-வது நிமிடம் தோசை 'சரவணா பவன்' லிருந்து அந்த கணிணிக்கு மின்னசலில் அனுப்பி வைக்கப்படும்.
இது 100% சாத்தியமாம். "இதை போல் தான் விண்ணில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணவு அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் ஒரு விஞ்ஞானி. சாமானியனின் பயன்பாட்டிற்கு வர ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருக்காது என்றும் கூறினார் ஒரு சிறு கண் சிமிட்டலுடன்.

இதைப்போல் மேலும் பல ஆச்சர்யங்கள்.,
- உங்கள் நிழலை வைத்து கணினியை இயக்க முடிந்தால்
- நீங்கள் நினைப்பது என்னவென்று உங்கள் கணிணியால் உணர முடிந்தால்
- நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமானால்
- கார்கள் எல்லாம் பெட்ரோல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால்
- நம்மைப்போல் இயந்திரங்களும் வேலை நேரம் போக மீத நேரம் விளையாட ஆரம்பித்தால்

இப்படி இன்னும் பல....
வெறும் வாய்ச்சவடால் மட்டுமல்லாமல், இவை எப்படி சாத்தியம் என்றும் விளங்க வைத்தார்கள்.

கண்கள் விரிந்து, பேசுவதறியாமல் வீடு திரும்பினேன் அடுத்த வார விடுமுறை வரை சிகாகோவிற்கு விடைதந்து... N

Tuesday, March 16, 2010

உன் முகம்

தெளிந்து போன நீரில் உன் முகம்..
எனக்கோ உயிர் போகும் தாகம்..
கை பட்டால் கலைந்து விடும் உன் முகம்..
போகட்டும் உயிர்.. உன் முகத்தை பார்த்து கொண்டே...

Monday, March 15, 2010

உலகம் பிறந்தது எனக்காக

அன்று சூரியன் சற்று பிரகாசமாகவே உதித்திருந்தது...
காரணம் வெள்ளிக்கிழமை என்பதாலா...?
"என்ன சிறப்பு வெள்ளிக்கிழமையென்றால்...!!?!?" என்று உங்கள் நெற்றியில் சுருக்கங்கள் உருவெடுப்பது தெரிகிறது எனக்கு...
உங்களில் சிலர் யூகித்திருப்பதும் சரி தான்..

மென்பொருள் நிறுவனங்களில், கணிப்பொறியின் கதகதப்பில் காலம் தள்ளும் அனைவருக்கும் கண்டிப்பாக புரியும் வெள்ளிக்கிழமை என்ன சிறப்பு என்று...

வாரம் முழுதும் வேலை செய்து(!) ஓய்ந்த களைப்பு, அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் 11 மணி வரை தூங்கலாம், கணிணிகளின் 'பீப்' சப்தம், கணிணிகளை குளிரூட்டும் அதிவேகக்  காத்தாடிகளின் சப்தம் கேட்காமல் நிம்மதி பெருமூச்சு விடலாம், இணையத்தின் மற்ற பயன்பாடுகளை எட்டிப்பார்க்கலாம்.... 
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

வெள்ளிக்கிழமை என்றதுமே, "..காவேரி நீர் நாளை தமிழ்நாட்டை வந்து சேர்ந்துவிடும்..." என்று கூறக்கேட்ட விவசாயியின் மனதை போல ஆரவாரம் கொண்டு விடும் எங்கள் மனமும் என்று சொன்னால் கூட அது நிச்சயம் மிகையாகாது.

நான் சொல்ல ஆரம்பித்த வெள்ளிக்கிழமை விடிந்தது, நான் இப்போது இருக்கும் சிகாகோவில்.
இங்கு என் சக ஊழியர்களில் பலர் அமெரிக்கர்கள்... மிக நல்ல நண்பர்கள் கூட. "....நீங்கள்(இந்தியர்கள்) இங்கு வந்து குடியேறுவதால் தான் என் சக அமெரிக்கர்கள் வேலை இன்றி திண்டாடுகிறார்கள்...." என்ற வயித்தெரிச்சல் இருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காண்பிக்காமல், புன்சிரிப்போடு பழகுபவர்கள்.
நான் இங்கு வந்து, starbucks காபி வாங்குவது முதல்.... விமான பயணம் வரை., எங்கும் தடையின்றி அமெரிக்க வாழ்க்கை புரிந்து வாழ இவர்கள் கூறும் விஷயங்களை கேட்பது முக்கிய காரணம்.

அப்படி ஒரு அமெரிக்க நண்பர், பெயர் கெல்லி.
"நான் புதிதாக கார் ஒன்று வாங்கியிருக்கிறேன்... வந்து பார்.." என்று எனக்கு செல்ல மிரட்டலோடு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

நானும் அவர் அழைப்பை மதித்து, அவர் இடம் நோக்கி நடந்தேன்.
இங்கு வாழும் அனைவரிடமும் கார் உண்டு.
இங்கு "கார் இல்லா மனிதன்... கால் இல்லாதவன்..."
காரணம், நடந்து செல்லும் தூரத்தில் என்பது., வழி இல்லா ஊருக்கு போக நினைப்பதைப்  போல்.
பஸ், ரயில் பயணம் செய்தால்., நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு மைல் தூரமாவது நடந்துசெல்ல நேரிடும்(அதுவும் கடுங்குளிரில்... ஹி...ஹி...)

நான் கெல்லி-யின் கார் அருகில் சென்றதுமே புரிந்தது, என்னை அழைத்தது போல் மேலும் சில சக நண்பர்களையும் அவர் அழைத்திருப்பது... எல்லோரும் கரை பற்றி பேசி முடிந்ததும்... நான் கெல்லியிடம், "...புது கார் பிரமாதம்.." என்றேன்.
கெல்லி பேச ஆரம்பித்தார்.. "சரி குமரன்... என்னுடன் இந்த காரில் வா... எப்படி சீறிச்செல்லும் என்று காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்... "நீ இன்று  மதிய உணவிற்கு என்னுடன் வருகிறாயா?"

"பில்லுக்கு நீங்கள் பணம் தருவதானால் உங்களுடன் வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றேன் குறும்புச்சிரிப்புடன்.

"நாங்கள் HOOTERS  செல்கிறோம்... அதனால் தான் கேட்டேன்" என்றார். 
"எங்கு சென்றால் என்ன கெல்லி, chicken wings(நம் ஊர் சிக்கன்-65 போல்,  காரம் இல்லாமல்...) கிடைக்குமா?"  என்றேன்.
இந்த முறை அவர் குறும்புச்சிரிப்போடு "Buckle-up" என்றார்.

மறுபடியும் கார் பற்றிய பேச்சு.... 8-மைல் தூர அதிவேக கார் பயணம்.
கெல்லி பெரும் கார் காதலர். கார்களை வாங்கி, அதை பந்தயங்களில் காற்றை கிழித்துக்கொண்டு சீரும் கார்களைப்போல் அதற்க்கு அதிபயங்கரவேக  என்ஜின், அதற்கேற்ற பிரேக், கண்களை ஊசி வைத்து குத்தும் பளீர் வெளிச்ச விளக்குகள் என்று.... இன்ன பிற பாகங்களையும் மாற்றி வடிவமைத்து ஓட்டுபவர். 
இந்த வினாடி வரை, கார் தொழில்நுட்ப்பத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவர்.

Hooters  என்று பகல் நேரத்திலும் கண்களுக்கு பளீர் என்று புலப்படும் neon விளக்கு எங்களை வரவேற்றது.
"...இந்த இடத்திற்கு லேட்டாக வந்தால் இப்படி தான்.. கார் நிறுத்த கூட இடம் இல்லை பார்..." என்று சலித்துக்கொண்டே கார் நிறுத்த இடம் தேடிக்கொண்டிருந்தார் கெல்லி.
இங்கு கார் நிறுத்தும்போது கண்டிப்பாக கவனம் தேவை. நீங்கள் அவசரத்தில் உடல் ரீதியாக ஊனம் உள்ளவர்களுக்கென ஒதுக்கப்பட்டிரும் இடத்தில் கரை நிறுத்திவிட்டால், உங்கள் வீட்டிற்கு ஓலை அனுப்பி விடுவார்கள். "500$ பணம் கட்டு, இல்லையேல் லைசென்ஸ் ரத்து" என்று.

கரை நிறுத்தியதும், நடக்க ஆரம்பித்தோம் 'Hooters' நோக்கி.
மனிதர்கள் வருவதை அறிந்ததும் விலகி வழிவிடும் கதவுகள் எங்களை உள்ளே  அனுப்பியது. அந்த கதவுகளை பார்க்கும்போதெல்லாம்., "அண்டா கா கசம்.......திறந்திடு சிசேம்.." என்று சொல்ல என் உதடுகள் துடிக்கும்.

உள்ளே சென்றதுமே, "இனிய மதிய வணக்கங்கள் ஜென்டில்மென், நீங்கள் எத்தனை பேர்" என்றாள் ஒரு இளஞ்சிவப்பு உதட்டுச்சாயம் பூசிய அழகுப்பதுமை ஒருத்தி.
என் கண்கள் ஏற்கனவே அகலவிரிந்துவிட்டிருந்தது.
காரணம், அவள் அணிந்திருந்தது வெறும் உள்ளாடைகள் மட்டும்!

இது கனவு இல்லை., என்னால் கண்டிப்பாக கூற முடியும்... அருகில் எங்களைப் போல் உணவு உண்ண வந்திருந்த பெண் ஒருத்தி ஹீல்ஸ் கால்களால் என் காலை மிதித்துக்கொண்டிருந்தாள் நான் வலியோடு திரும்பிப்பார்க்க, "மன்னிக்கவும், கூட்டத்தில் நான் உங்களை கவனிக்கவில்லை" என்றாள்.

நான் இருந்த ஆச்சர்ய அலையில், கெல்லி-யிடம் நகர்ந்து "கெல்லி, அங்கே பாருங்கள் ஒரு பெண் வேலைக்கு வரும் அவசரத்தில் வெறும் உள்ளடைகளோடு மட்டும் வந்துவிட்டாள் என்றேன்"

அவர் "Welcome to America" என்று சிரிப்போடு கூறிவிட்டு என்னை அந்த உணவு விடுதியின் மற்ற இடங்களையும் பார்க்கச்சொன்னார்.
அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் தடுமாறி... அதை மறைக்க 'டக்' என்று ஒரு முழுங்கு தண்ணீர் குடித்து சமாளித்தேன்.
இங்கு பரிமாறும் அல்லது பணிபுரியும் பெண்கள் அணிய வேண்டிய ஆடை இதுதான் என்று கெல்லி விளக்கம் கூறினார்.

அப்போதுதான் என் இந்திய மூளைக்கு புரிந்தது "நாங்கள் HOOTERS  செல்கிறோம்... அதனால் தான் கேட்டேன்" என்று கெல்லி கேட்டதும், அவர் குறும்புச்சிரிப்பின் காரணமும்.

இந்த Hooters ஆண்கள் மட்டும் உண்ணும் உணவு விடுதி என்று நினைக்க வேண்டாம். ஆண்கள், பெண்கள் இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுடன் வந்து உணவு உண்பவர்களையும் எளிதில் காண முடிந்தது.

"கூட்டத்தை கவர்வதற்கு இது ஒரு வியாபார நுணுக்கம்.. அவ்வளவுதான். இவர்கள்(Hooters) மேல் சில வழக்குகளும் உண்டு., பெண்களை இப்படி பயன்படுதுவதற்க்கு என்று நினைக்காதே.... குண்டு பெண்களையும், ஓரினச்சேர்க்கை ஆண்களையும் வேலைக்கு அமர்த்தாததால்" இது கெல்லி.

"என்ன குமரன் இப்படி ஆச்சர்யமாக பார்க்கிறாய்., உங்கள் ஊரில் இப்படி ஹோட்டல்கள் கிடையாதா ?" இது கூட வந்த இன்னொரு அமெரிக்க நண்பர்.
'நாங்கள் பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள்' என்று கூற விளைந்து.. ஏதோ காரணத்தால், 'இல்லை' என்று மட்டும் கூறினேன்.

மதிய உணவு முடித்து அலுவலகத்திற்க்குள் நுழைந்ததுமே ,
"Hooters சென்றிருந்தாயாமே., என்ன சாப்பிட்டாய் ?" என்றான் என் அலுவலக தோழன்.

புன்னகையோடு பதிலளித்தேன்... "ஞாபகம் இல்லை"

Saturday, March 13, 2010

காதல்

உன்னை
பார்த்த முதல்
நாள்
நினைவில் இல்லை...
உன்னை
பார்த்த நாள்
முதல்
நினைவே இல்லை...

Monday, March 8, 2010

கண்ணீர்

யாரை
காதலித்தது இந்த
மேகம்
இன்று
இப்படி கண்ணீர்
வடிக்கிறது...

நான் கவிஞனும் அல்ல...

நன்றி.. என்று கூறி இந்த வலை பதிவை ஆரம்பிப்பது மிகை ஆகாது என்று கூட சொல்லலாம்..
என் வலை பதிவைகளை படித்துவிட்டு, குறை நிறைகள் மட்டுமல்லாமல்., மேலும் இந்த வலை தளதில் என்ன இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருத்துகள் கூறி வந்த மின்னஞ்சல்களுக்கு சற்று முன் தான் நன்றி விடை கூறி முடிந்தேன்..

அந்த மின்னஞ்சல்களின் மேலோட்டம்,
1. கணிசமான எழுத்துப்பிழைகள்.
2. ஆங்கில சினிமாவை மட்டும் தான் விமர்சிப்பாயா ? தமிழ் சினிமா-விற்கு என்ன குறைச்சல் ?
3. "பயணக்கட்டுரைகள் போல ஏதாவது இடம்பெறச்செய்!"
4. இன்னும் நிறைய கவிதைகள்..
5. இதற்குமுன் இடம்பெற்ற ஆங்கில பதிவுளை தமிழில் மொழிபெயர்..
6. புதிய வலைபதிவுகளை நாங்கள் தெரிந்துகொள்வது எப்படி?
7. அது என்ன tamil16 ? 
இன்னும் ஒரு படி மேலே போய்(உண்மையில் பல படிகள் மேலே போய்)., 
வீரப்பன் இறந்தது.. காவிரி விவகாரம்... நித்தியானந்த சுவாமியின் லீலையை டிவி யில் ஒளிபரப்பியது சரியா இல்லையா? இது பற்றி உன் கருத்து என்ன ?
என்பது வரை.... கருத்துகள்.. எண்ணங்கள்.. வண்ணங்கள்...  என்று என் கண்களை அகல விரியச்செய்து விட்டிருந்தீர்கள்...


இதோ பதில்களுடன், நான்...
நான் எழுதும் இந்த வலைப்பக்கம் GooGle-லின் இலவச வலைதளத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. TRANSLITERATION   எனப்படும் தொழில்நுட்பம் கொண்டு தமிழை   இந்த வலைப்பக்கத்தில் எழுத வழிவகுக்கிறது GOOGLE.
சுருங்கச்சொன்னால்... நான் தமிழில் எழுத விழைவதை., ஆங்கிலத்தில் அதே போல கணினியில் தட்டச்சு செய்ய, GOOGLE-ன் மென்பொருள் நான் கூருவதறிந்து  அதை தமிழில் மொழிபெயர்க்கும்.

உதாரணத்திற்கு.... "நீங்கள் நலமா ?" என்பதை "neengal nalamaa ?" என்று கணனி எழுத்து பலகையின் பொத்தான்களை அழுத்த, மென்பொருள் கொண்டு மொழி பெயர்க்கிறேன்.
எல்லாம் ஆங்கில-தமிழில் SMS அனுப்பி பழக்கப்பட்ட விரல்கள் தானே.(!)

இப்படி ஆங்கிலத்தில் இருந்து உருமாறும் தமிழ், ஒரு சில இடங்களில் தடுமாறி... தடம் மாறி... எழுத்து பிழைகளில் முடிந்துவிடுகிறது. என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் கண்டிப்பாக செய்கிறேன்... எழுத்துப்பிழைகளை தவிர்க்க.. 

தமிழ் பட விமர்சனங்கள் பற்றி ----  "நான் நிறைய தமிழ் படம் பார்ப்பேன்" என்று நான் சொன்னால் "போதும் பொய் சொன்னது" என்று என்னை நன்கு தெரிந்தவர்கள் சட்டென்று கூறிவிடுவார்கள். நான் தமிழ் படம் நிறைய பார்க்காததர்க்கான காரணத்தை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.. சரி.... இன்றிலிருந்து நான் பார்க்கும் புதிய தமிழ் படங்களின் விமர்சனங்கள் கண்டிப்பாக இங்கு இடம்பெறும்.

எப்போதும் போல்., என் அனுபவ நிகழ்வுகள், பயணக்கட்டுரைகளாக இந்த தளத்தை கண்டிப்பாக அலங்கரிக்கும்.

கவிதைகள் பற்றிய உங்கள் எண்ணங்களை comments  பகுதியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவியுங்கள்..

என் முந்தய ஆங்கில பதிவுகளை மொழி பெயர்ப்பது., நான் கூற வந்த அர்த்தத்தை மாற்றிவிடும். ஆதலால் அந்த ஆங்கில பதிவுகளை, இந்த தளதில் இனிவரும் பதிவுகளின் ஊடே உங்களின் பார்வைக்கு கண்டிப்பாக இடம் பெறச்செய்கிறேன்..

என்னுடைய புதிய வலைபதிவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொள்ள., இந்த தளத்தில் இருக்கும் "Follow" வலைப்பொத்தான் உங்களுக்கு ஆவண செய்யும்..

tamil16 என்பதற்கு வேறு என்ன விளக்கம் இருக்க முடியும். என்னைப்போலவே(எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!)  தமிழும் என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.

நீ வேலை செய்வது IT  நிறுவனத்தில்., உனக்கு ஏது தமிழில் எழுதும் அளவுக்கு நேரம்.. என்பது பெருவாரியானோர் கேள்வி..
"தான் செய்ய நினைத்த வேலையை, நேரமில்லாததால் செய்யமுடிவில்லை... என்று சொல்பவன் முட்டாள்". இது சாக்ரடீஸ் சொல்லோ, 'தினத்தந்தி சாணக்கியன்' சொல்லோ கிடையாது.. இது வரை எனக்கு வாழ்க்கை உணர்த்திய பாடம்...


குறைகளை என்னிடமும்.. நிறைகளை மற்றவர்களிடமும் கூறுங்கள்... அதுவே எனக்கு ஆஸ்கார் மகிழ்ச்சி..


இத்தோடு முடித்துக்கொள்கிறேன் இந்த பதிவை... மீண்டும் சந்திக்கிறேன்... புதிய அனுபவங்களுடன்....

Tuesday, March 2, 2010

வெள்ளை பூக்கள் உலகம்..

பூத்து குலுங்கும் வண்ண மலர்கள்..
பறவைகள் கூச்சலிடும் மரங்கள்..
வெளிர் நீல வானம்...
பச்சை வர்ணம் தெரிய வைக்கும் புல்வெளி...
சோம்பலோடு மரத்தில் இருந்து விழும் பழுத்த இலைகள்..

இவை ஏதும் இல்லாமல் வெண் பனி போர்வை போர்த்தி இருக்கிறது சிகாகோ.




இன்னும் சொல்லப்போனால் உறை பனி காலம் இது..

அக்டோபர் மாதம் வரை பூத்து குலுங்கும் மரங்கள், குளிர் காலம் வருவதறிந்து இலைகளுக்கு விடை தந்துவிட்டு வெறும் கிளைகளோடு மட்டும் வாழும் காலம்.. photosynthesis  செய்து உணவு தயார் செய்ய, சூரியன் அடுத்த ஆறு மாதத்துக்கு தலை காட்டாது என்பதால் தான் இந்த ஏற்பாடு... அட! ஆறாம் வகுப்பு பாடம்..!!
இன்னும் நினைவில் இருக்க காரணம்.... உயிரியல் பாடம் மீது எனக்கு இருந்த ஆர்வம் அல்ல... எங்களது உயிரியல் வகுப்பு டீச்சர் மீது...(ஹி.....ஹி.....)

போட்டிருக்கும் சட்டைக்கு அடியில் எத்தனை ஆடைகள் என்று நிர்ணயம் செய்வது., உங்கள் குளிர் தாங்கும் சக்தியின் அளவுகோல்.
கடுங்குளிர் என்பது, இங்கு வாழும் மக்களுக்கு சர்வ சாதாரணம்.
நான் கூறும் கடுங்குளிர்...... -20'C. ரத்தம் உறைந்து விடும் குளிர் இது.!

நான் இங்கு(Chicago) வந்தது குளிர் காலம் தலை காட்ட ஆரம்பித்த நேரம்.
நான் சினிமாக்களில் மட்டுமே பனி கண்டு வளர்ந்தவன்.
பனி பிரதேசங்களில் புடவை கட்டி ஆடும் நடிகைகளே... வாழ்க!

நான் இங்கு வந்து இரண்டு மாந்தங்கள் கழிந்து தான் பனி கண்டேன் முதன் முதலில்... துயிலெந்து ஜன்னல் கதவை திறந்தது தான் தாமதம்.... "அட கடவுளே !... அதற்குள் இறந்து சொர்கத்துக்கு வந்துவிட்டேனா.... இளமையின் முழுமை கூட இன்னும் முடியவில்லையே எனக்கு..." என்று மனதுக்குள் நொந்து கொண்டிருந்தபோது தான் புரிந்தது நான் சொர்க்கத்தில் இல்லை.. அதே சிகாகோவில்... பனிப்படலத்தை வெறித்துக்கொண்டிருப்பது..

இங்கு கூறப்படும் வானிலை அறிக்கை., நம் ஊர் போன்று விரல்(மதன் பாப் - வடிவேல் கூட்டணி) வைத்து கணிப்பது கிடையாது.
டிவி நிறுவங்கள் நேரடியாக செயற்கைகோள் கொண்டு வானிலை நிபுணர்கள்களால் கணிக்கப்படுவது.

இங்கு., மழை வரும் என்று டிவி அறிவிப்பாளினி கூறிவிட்டால்.. குடை எடுத்துச்செல்லவேண்டியது உங்கள் சமத்து. பனி வரும் என்று கூறினால், கடுங்குளிர் தாங்கும் உடைகள் அணிந்து செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு.

வானிலை அறிக்கையை நம்பி தான் அனைத்தும் செயல் படும் நிலை இங்கு.

திரும்பிய பக்கம் எங்கும் வெள்ளை நிறம் தான். வெண் பனி போர்வை போர்த்தி இருக்கும் மரங்கள், செடிகள், தார் சாலைகள், கார்களும் கூட..

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து தார் சாலைகளில் பனி விலக்கிவிட்டு, உப்பு தெளித்து விட்டு செல்லும் லாரிகளை அடிக்கடி இங்கு பார்க்கலாம்.

இந்திய மண்ணில் இருந்து இங்கு வந்து வாழும் மக்கள் கொண்டு இங்கு ஒரு தனி நாடு அமைக்கலாம்... அவ்வளவு பேர்... எல்லாம் மென்பொருள் நிறுவனங்களின் கைங்கர்யம்.

என்னைப்போல் பனி கண்டிராத பலர் இங்கு உண்டு...
.......பனியை ரசித்து, அதில் பொம்மை செய்து மகிழும் கூட்டம் ஒரு பக்கம்...
....."அட கடவுளே...! இப்படி என்னை பனி தேசத்தில் சிக்க வைத்து விட்டாயே" என்று நொந்து கொள்ளும் கூட்டம் ஒரு பக்கம்....
இதில் எந்த ரகம் நீ என்று கேட்கிறீர்களா..!?

அதற்கும் பதில் வைத்திருக்கிறேன்.... -29c குளிர்... நேரம்:நள்ளிரவு 10:45
டிசம்பர் 31,2009..
ரத்தம் உண்மையிலேயே உறைந்து  தான் போய்விட்டதோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.  மூக்கு உறைய ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது.... மூக்கு இருகிறதா என்று தெரிய அடிக்கடி மூக்கை தொட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய கொடுமை...
அந்த குளிரிலும் நடுங்கியவண்ணம், புகைப்படமேடுத்துக்கொண்டிருந்தேன்  சிகாகோ-வின் புத்தாண்டு வானவேடிக்கையை.....
உங்கள் பார்வைக்காக எனது புகைப்பட தளதில்.

குளிர் கண்டு அஞ்சவில்லை என்று கூறப்போவதில்லை நான்.. அதை சமாளிக்கும் சக்தி உடம்பிலும் மனதிலும் உள்ளதா என்று மட்டும் தான் யோசிக்க வேண்டிய நிலை..

கடுங்குளிர் என்றாலும்.... அங்கு வந்திருந்த, வெள்ளை தோல் போர்த்திய பெண்கள் பெரும்பாலானோர் தொடை தெரிய உடை அணிந்து.. பூனை நடை நடந்து என்னை வெறுப்பேத்தியது என்னவோ மறுக்க முடியாத உண்மை...
"எப்படி உங்களால் இப்படி உடை அணிய முடிகிறது...?
கொஞ்சமும் குளிர் இல்லையா..??" என்று கேட்க விளைந்து.......'Eve - teasing' சட்டம் இந்த ஊரில் என்னவென்று சரியாக தெரியாததால், தொண்டையோடு நின்று விட்டது அந்த கேள்வி ..!!

இந்த வாரம் இணையத்தில் படித்ததில் பிடித்தது:
நீ கேட்டால்
உளறாமல் சொல்வதற்கு
மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறேன்...
..... என் பெயரை..!


மீண்டும் சந்திக்கிறேன்... வெகு விரைவில்....
அனுபவங்களோடு...!!