Monday, March 15, 2010

உலகம் பிறந்தது எனக்காக

அன்று சூரியன் சற்று பிரகாசமாகவே உதித்திருந்தது...
காரணம் வெள்ளிக்கிழமை என்பதாலா...?
"என்ன சிறப்பு வெள்ளிக்கிழமையென்றால்...!!?!?" என்று உங்கள் நெற்றியில் சுருக்கங்கள் உருவெடுப்பது தெரிகிறது எனக்கு...
உங்களில் சிலர் யூகித்திருப்பதும் சரி தான்..

மென்பொருள் நிறுவனங்களில், கணிப்பொறியின் கதகதப்பில் காலம் தள்ளும் அனைவருக்கும் கண்டிப்பாக புரியும் வெள்ளிக்கிழமை என்ன சிறப்பு என்று...

வாரம் முழுதும் வேலை செய்து(!) ஓய்ந்த களைப்பு, அடுத்த இரண்டு விடுமுறை நாட்களில் 11 மணி வரை தூங்கலாம், கணிணிகளின் 'பீப்' சப்தம், கணிணிகளை குளிரூட்டும் அதிவேகக்  காத்தாடிகளின் சப்தம் கேட்காமல் நிம்மதி பெருமூச்சு விடலாம், இணையத்தின் மற்ற பயன்பாடுகளை எட்டிப்பார்க்கலாம்.... 
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

வெள்ளிக்கிழமை என்றதுமே, "..காவேரி நீர் நாளை தமிழ்நாட்டை வந்து சேர்ந்துவிடும்..." என்று கூறக்கேட்ட விவசாயியின் மனதை போல ஆரவாரம் கொண்டு விடும் எங்கள் மனமும் என்று சொன்னால் கூட அது நிச்சயம் மிகையாகாது.

நான் சொல்ல ஆரம்பித்த வெள்ளிக்கிழமை விடிந்தது, நான் இப்போது இருக்கும் சிகாகோவில்.
இங்கு என் சக ஊழியர்களில் பலர் அமெரிக்கர்கள்... மிக நல்ல நண்பர்கள் கூட. "....நீங்கள்(இந்தியர்கள்) இங்கு வந்து குடியேறுவதால் தான் என் சக அமெரிக்கர்கள் வேலை இன்றி திண்டாடுகிறார்கள்...." என்ற வயித்தெரிச்சல் இருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காண்பிக்காமல், புன்சிரிப்போடு பழகுபவர்கள்.
நான் இங்கு வந்து, starbucks காபி வாங்குவது முதல்.... விமான பயணம் வரை., எங்கும் தடையின்றி அமெரிக்க வாழ்க்கை புரிந்து வாழ இவர்கள் கூறும் விஷயங்களை கேட்பது முக்கிய காரணம்.

அப்படி ஒரு அமெரிக்க நண்பர், பெயர் கெல்லி.
"நான் புதிதாக கார் ஒன்று வாங்கியிருக்கிறேன்... வந்து பார்.." என்று எனக்கு செல்ல மிரட்டலோடு குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

நானும் அவர் அழைப்பை மதித்து, அவர் இடம் நோக்கி நடந்தேன்.
இங்கு வாழும் அனைவரிடமும் கார் உண்டு.
இங்கு "கார் இல்லா மனிதன்... கால் இல்லாதவன்..."
காரணம், நடந்து செல்லும் தூரத்தில் என்பது., வழி இல்லா ஊருக்கு போக நினைப்பதைப்  போல்.
பஸ், ரயில் பயணம் செய்தால்., நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு மைல் தூரமாவது நடந்துசெல்ல நேரிடும்(அதுவும் கடுங்குளிரில்... ஹி...ஹி...)

நான் கெல்லி-யின் கார் அருகில் சென்றதுமே புரிந்தது, என்னை அழைத்தது போல் மேலும் சில சக நண்பர்களையும் அவர் அழைத்திருப்பது... எல்லோரும் கரை பற்றி பேசி முடிந்ததும்... நான் கெல்லியிடம், "...புது கார் பிரமாதம்.." என்றேன்.
கெல்லி பேச ஆரம்பித்தார்.. "சரி குமரன்... என்னுடன் இந்த காரில் வா... எப்படி சீறிச்செல்லும் என்று காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்... "நீ இன்று  மதிய உணவிற்கு என்னுடன் வருகிறாயா?"

"பில்லுக்கு நீங்கள் பணம் தருவதானால் உங்களுடன் வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றேன் குறும்புச்சிரிப்புடன்.

"நாங்கள் HOOTERS  செல்கிறோம்... அதனால் தான் கேட்டேன்" என்றார். 
"எங்கு சென்றால் என்ன கெல்லி, chicken wings(நம் ஊர் சிக்கன்-65 போல்,  காரம் இல்லாமல்...) கிடைக்குமா?"  என்றேன்.
இந்த முறை அவர் குறும்புச்சிரிப்போடு "Buckle-up" என்றார்.

மறுபடியும் கார் பற்றிய பேச்சு.... 8-மைல் தூர அதிவேக கார் பயணம்.
கெல்லி பெரும் கார் காதலர். கார்களை வாங்கி, அதை பந்தயங்களில் காற்றை கிழித்துக்கொண்டு சீரும் கார்களைப்போல் அதற்க்கு அதிபயங்கரவேக  என்ஜின், அதற்கேற்ற பிரேக், கண்களை ஊசி வைத்து குத்தும் பளீர் வெளிச்ச விளக்குகள் என்று.... இன்ன பிற பாகங்களையும் மாற்றி வடிவமைத்து ஓட்டுபவர். 
இந்த வினாடி வரை, கார் தொழில்நுட்ப்பத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவர்.

Hooters  என்று பகல் நேரத்திலும் கண்களுக்கு பளீர் என்று புலப்படும் neon விளக்கு எங்களை வரவேற்றது.
"...இந்த இடத்திற்கு லேட்டாக வந்தால் இப்படி தான்.. கார் நிறுத்த கூட இடம் இல்லை பார்..." என்று சலித்துக்கொண்டே கார் நிறுத்த இடம் தேடிக்கொண்டிருந்தார் கெல்லி.
இங்கு கார் நிறுத்தும்போது கண்டிப்பாக கவனம் தேவை. நீங்கள் அவசரத்தில் உடல் ரீதியாக ஊனம் உள்ளவர்களுக்கென ஒதுக்கப்பட்டிரும் இடத்தில் கரை நிறுத்திவிட்டால், உங்கள் வீட்டிற்கு ஓலை அனுப்பி விடுவார்கள். "500$ பணம் கட்டு, இல்லையேல் லைசென்ஸ் ரத்து" என்று.

கரை நிறுத்தியதும், நடக்க ஆரம்பித்தோம் 'Hooters' நோக்கி.
மனிதர்கள் வருவதை அறிந்ததும் விலகி வழிவிடும் கதவுகள் எங்களை உள்ளே  அனுப்பியது. அந்த கதவுகளை பார்க்கும்போதெல்லாம்., "அண்டா கா கசம்.......திறந்திடு சிசேம்.." என்று சொல்ல என் உதடுகள் துடிக்கும்.

உள்ளே சென்றதுமே, "இனிய மதிய வணக்கங்கள் ஜென்டில்மென், நீங்கள் எத்தனை பேர்" என்றாள் ஒரு இளஞ்சிவப்பு உதட்டுச்சாயம் பூசிய அழகுப்பதுமை ஒருத்தி.
என் கண்கள் ஏற்கனவே அகலவிரிந்துவிட்டிருந்தது.
காரணம், அவள் அணிந்திருந்தது வெறும் உள்ளாடைகள் மட்டும்!

இது கனவு இல்லை., என்னால் கண்டிப்பாக கூற முடியும்... அருகில் எங்களைப் போல் உணவு உண்ண வந்திருந்த பெண் ஒருத்தி ஹீல்ஸ் கால்களால் என் காலை மிதித்துக்கொண்டிருந்தாள் நான் வலியோடு திரும்பிப்பார்க்க, "மன்னிக்கவும், கூட்டத்தில் நான் உங்களை கவனிக்கவில்லை" என்றாள்.

நான் இருந்த ஆச்சர்ய அலையில், கெல்லி-யிடம் நகர்ந்து "கெல்லி, அங்கே பாருங்கள் ஒரு பெண் வேலைக்கு வரும் அவசரத்தில் வெறும் உள்ளடைகளோடு மட்டும் வந்துவிட்டாள் என்றேன்"

அவர் "Welcome to America" என்று சிரிப்போடு கூறிவிட்டு என்னை அந்த உணவு விடுதியின் மற்ற இடங்களையும் பார்க்கச்சொன்னார்.
அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் தடுமாறி... அதை மறைக்க 'டக்' என்று ஒரு முழுங்கு தண்ணீர் குடித்து சமாளித்தேன்.
இங்கு பரிமாறும் அல்லது பணிபுரியும் பெண்கள் அணிய வேண்டிய ஆடை இதுதான் என்று கெல்லி விளக்கம் கூறினார்.

அப்போதுதான் என் இந்திய மூளைக்கு புரிந்தது "நாங்கள் HOOTERS  செல்கிறோம்... அதனால் தான் கேட்டேன்" என்று கெல்லி கேட்டதும், அவர் குறும்புச்சிரிப்பின் காரணமும்.

இந்த Hooters ஆண்கள் மட்டும் உண்ணும் உணவு விடுதி என்று நினைக்க வேண்டாம். ஆண்கள், பெண்கள் இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுடன் வந்து உணவு உண்பவர்களையும் எளிதில் காண முடிந்தது.

"கூட்டத்தை கவர்வதற்கு இது ஒரு வியாபார நுணுக்கம்.. அவ்வளவுதான். இவர்கள்(Hooters) மேல் சில வழக்குகளும் உண்டு., பெண்களை இப்படி பயன்படுதுவதற்க்கு என்று நினைக்காதே.... குண்டு பெண்களையும், ஓரினச்சேர்க்கை ஆண்களையும் வேலைக்கு அமர்த்தாததால்" இது கெல்லி.

"என்ன குமரன் இப்படி ஆச்சர்யமாக பார்க்கிறாய்., உங்கள் ஊரில் இப்படி ஹோட்டல்கள் கிடையாதா ?" இது கூட வந்த இன்னொரு அமெரிக்க நண்பர்.
'நாங்கள் பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள்' என்று கூற விளைந்து.. ஏதோ காரணத்தால், 'இல்லை' என்று மட்டும் கூறினேன்.

மதிய உணவு முடித்து அலுவலகத்திற்க்குள் நுழைந்ததுமே ,
"Hooters சென்றிருந்தாயாமே., என்ன சாப்பிட்டாய் ?" என்றான் என் அலுவலக தோழன்.

புன்னகையோடு பதிலளித்தேன்... "ஞாபகம் இல்லை"