Wednesday, March 24, 2010

கடவுள் பாதி....

வீட்டை விட்டு வெளியே வந்ததுமே, 'அட, என்ன அது இவ்வளவு உயரத்தில் வெள்ளையாக.....!? அதுவும் இவ்வளவு வெளிச்சமாக ஏதோ ஒன்று...!?' என்று ஆச்சர்ய கண்களோடு வேரித்துக்கொண்டிருந்தேன் சிகாகோ வானத்தை...
சுமார் ஆறு மாதங்களுக்கு பின் சூரியனை பார்க்கும் எவருக்கும் ஏற்படும் பிரமை தான் எனக்கும்.

நாடக மேடையில் பின்னனித்திரை மாற்றுவது போல், பனி எல்லாம் கரைந்து பசும் புல்வெளி காண முடிகிறது இப்போதெல்லாம்.

வெயிலை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துவிட்டால் இந்தியா சீக்கிரம் வல்லரசு நாடு ஆகிவிடும் என்று பல முறை நண்பர்கள் மத்தியில் கூறியதை நினைத்து என்னுள் சிரித்தேன். இனி என் வாழ்நாளில் 'வெயில் கொடுமை'  என்ற எண்ணம் கூட வரவிடமாட்டேன்  என்று உறுதிமொழி கூறி பல நாட்கள் ஆகிவிட்டன.

மின் இரயில் ஏறிச்செல்ல முடிவு செய்திருந்தேன் சிகாகோ-வில் வெயில் பட்டு மிளிரும் மிச்சிகன் ஏரியை ரசிக்க.
வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடை தூரம் மின் ரயிலேற.

பொதுவாக இங்கு பஸ், இரயில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் கணிசம். காரணம், அனைவரிடமும் கார் உண்டு. இதனாலேயே இங்கு இருக்கும் இரயில் நிலையங்கள் வெறிச்சோடியே காணப்படும்.
நான் சென்றது சனிக்கிழமை காலை.
இரயில் நிலையம் அடைந்தபோது, என்னையும் சேர்த்து மூன்று பேர்.

இரயில் நிலைய ஒலிப்பெருக்கி, மெல்லிய வயலின் இசையை கசிந்து கொண்டிருந்தது.
இசையை சற்று நிறுத்திவிட்டு, அமெரிக்க ஆங்கிலத்தில் "இனிய காலை வணக்கங்கள்" என்றது ஒரு ஆண் குரல்...  தொடர்ந்து....
"இப்போது நேரம் சரியாக 8:20 மணி 32 வினாடிகள். இந்த மின் இரயில் நிலையத்திற்கு 8:40 மணிக்கு வரவேண்டிய மின் இரயில் வண்டி 90 வினாடிகள் தாமதமாக வந்தடையும். இதனால் உங்கள் பயணத்தில் ஏற்படும் தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறோம்.
உங்கள் நாள் நன் நாளாக...." என்று தொடர்ந்தது அந்த அறிவிப்பு.

நான் ஒன்பது மணி நேரம் கூட காத்திருந்து, இரயில் ஏறி இருக்கிறேன் என் நாட்டில்(!). இந்த தொண்ணூறு  வினாடி தாமதத்திற்கு ஏன் இந்த அலட்டல் என்று மனதிற்குள் வியந்து கொண்டிருந்தேன்.

என் அருகில் அமர்த்திருந்த 'குட்டப்பாவாடைக்காரி', கடித்த ஆப்பிள் தாங்கியிருந்த   தோடுதிரை கைப்பேசியை., விரல்களால் வருடி காதருகே கொண்டு சென்றதுமே "ச்சே.....நான் வரும் இரயில் 90 வினாடிகள்  தாமதமாம், இந்த ஒழுங்கீனம் எனக்கு சுத்தமா புடிக்காது... எதற்கு வரி வாங்குகிறார்களாம்.....' என்று யாரிடமோ புலம்புவது என்னால் கேட்க முடிந்தது.
இங்கிதம் கருதி சற்று நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன், என் எண்ண அலைகளை சற்று சிதரவிட...

வெளிச்சத்திலும் சட்டென்று புலப்படும் LCD திரை 8:41:23 என்று  மணி காட்டிக்கொண்டிருந்தது.
சொல்லி வைத்தாற்ப்போல, சற்று தூரத்தில் இரயில் வரும் சப்தம்.
இன்னும் சில வினாடிகளில் கண்களுக்கு புலப்பட்டு, 8:41:30 க்கு இரயில் நிலையம் வந்தடைந்தது.

இப்போது என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். வரிசையில் நின்று இரயிலில் ஏறிக்கொண்டிருந்தனர். நானும் சென்று சேர்ந்தேன் அந்த நான்கு பேர் வரிசையில் ஐந்தாவதாக.
'ஐந்து பேருக்கு வரிசையா !? என்ன கொடுமை சார் இது'

இரயில்களிலும் தானாக விலகி வழி விடும் கதவுகள், இன்னும் எத்துனை வினாடிகள் கதவு திறந்திருக்கும் என்பதையும் நடைபாதையிலிருந்து இரயிலில் ஏறும்போது கவனமாக ஏறவும் என்று எச்சரிக்கும் பெண் குரல்.

இரயிலில் ஏறியதும் முண்டியடிதுக்குகொண்டு, நிற்க இடம் தேடும் கஷ்டம் இல்லை. கிண்டி வந்தால் கண்டிப்பாக உட்காரலாம் என்ற கற்பனைகள் ஏதும் இல்லாமல் சற்று நிதானமாக உட்கார இடம் கண்டேன் இரயிலின் முதல் தளத்தில்.

எப்படி நேரம் கடத்துவேன் இந்த பயணத்தில்,
'Ramu loves Divya', 'Chrompet  Kings - Always Wins', 'எங்கள் தல Ajith' என்ற வாசகங்கள் .....
"நீ பார்க்க வேண்டும் என்று, நீ திரும்பும் இடங்களில் எல்லாம் நான் நிற்கிறேன் -இப்படிக்கு செந்தில்" என்ற கவிதைகள்....
'ஒரு நாளைக்கு 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்', 'ஏசு சீக்கிரம் அவதரிப்பார்' என்ற விளம்பரங்கள்....
இவை ஏதும் இல்லையே இந்த இரயில் சுவற்றில் என்று சிரித்தபடி திரும்பினேன்.

"டிக்கெட் ப்ளீஸ்!" என்றார் ஒரு PeterEngland விளம்பர மாடல்.
இரயில் கண்டக்டர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு என்னை வியக்க வைத்ததும், சிகாகோ சென்று எப்போது திரும்புவீர்கள் என்றார்.
"ஏன்? அதற்கும் ஏதாவது வரி வைத்திருக்கிறீர்களா ?" என்றேன்.
சிரித்துக்கொண்டே, "இல்லை சார், Return டிக்கெட் சேர்த்து வாங்கினால் 4டாலர் குறைவு, உங்கள் சம்பாத்தியத்தில் கொஞ்சம் மிச்சம் பண்ண உதவி செய்யலாம் என்ற எண்ணம் தான்" என்றார்.
நானும் சிரித்துக்கொண்டே நன்றி கூறிவிட்டு, பின்னோக்கி நகரும் வீடுகளையும் மரங்களையும் பார்த்து நேரம் கடத்த சற்று ஜன்னலோரம் அமர்ந்தேன்.

நாற்பத்தி ஐந்து நிமிட இரயில் பயணம்.

பயணம் முழுவதிலுமே, அடுத்து வரும் நிறுத்தம் எது, இப்போது இரயில் நிற்கும் நிறுத்தம் பற்றிய அறிவிப்புகள் இரயிலின் உள்ளடங்கிய ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு கொண்டிருந்தன.

சிகாகோ வந்திறங்கியதும், மிச்சிகன் ஏரி பார்க்க சிகாகோ நதியோர பாதையில் நடந்து சென்றேன். ஒரு மைல் தூர நடை பயணம்.
நதியோரம் நடக்க காரணம், சிகாகோ-வின் பெரும்பாலான பிரபல கட்டடங்கள் அனைத்துமே இந்த நதிக்கரையோரம் தான்.

சிகாகோ நதி, மிச்சிகன் ஏரியிலிருந்து தென் திசை நோக்கி பாயும் நதி.
கிட்டதிட்ட ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் பிணங்களையும் நகரத்தின் இன்னபிற கழிவுகளையும் உள்வாங்கிக்கொண்டிருந்த நதி, இப்போது இந்த நகரத்தின் ஒரு முக்கிய அங்கம்.

வெயிலடித்து நாட்கள் பல ஆகியிருந்ததால், அன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது.
வந்திருந்த பெண்களில் பெரும்பாலானோர், மூன்று வயதில் அவர்கள் அணிந்திருந்த ஆடையை அணிந்து வந்திருந்தனர்......  வெயில் கொடுமையாம்!

மிச்சிகன் ஏரியின் ஓரம் இருக்கும் சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.,  சிகாகோ-வின் அறிவியல் மற்றும் தொழிற்சாலை அருங்காட்சியகம் சென்றடைய.

அருங்காட்சியகம் வந்தடைந்ததேன்... அப்படி என்ன இங்கு இருக்கிறது என்கிறீர்களா ?

மனிதன் கலப்பை பிடித்து விவசாயம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, இயந்திரங்களின் தேவை புரிய ஆரம்பித்து, அவற்றை வடிவமைத்து, பின்னர் தேவைக்கேற்ப மேம்படுத்தியது முதல் நிலவில் மனிதன் கால் பதித்தது, செவ்வாயில் கிணறு வெட்டும் இயந்திர மனிதன், நாம் பிரபஞ்சத்தில் இதுவரை சென்றிருக்கும் தூரம், நாளைய வீடுகள் எப்படி காட்டப்படும் என்ற நீண்ட நெடும் பட்டியல்...

காட்சிக்கு இல்லாத அரங்குகளே இல்லை என்று தான் கூறவேண்டும்...
மருத்துவம், விண்ணியல், புவியியல், கணிணியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல் என்று இன்னும் எத்தனையோ!

இது மட்டுமல்லாமல், ஜெர்மானியர்களிடமிருந்து அமெரிக்க கடற்படை கைப்பற்றிய U-505 என்னும் நீர்மூழ்கி(நிஜ) கப்பலை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.
அந்த நீர்மூழ்கியின் பழமை சிறிதும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.
மட்டுமல்லாமல் அதனுள் சிறு சுற்றுலாவுக்கும் அனுமதி உண்டு.

என்னை மிகவும் கவர்ந்தது, ஏதிர்காலம் எப்படி இருக்கும்.
விஞ்ஞானம் எப்படி எல்லாம் உருமாறக்கூடும், அதற்கான ஆராய்ச்சிகள் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கின்றன, அந்த ஆராய்ச்சிகளில் நாம் ஏதேனும் வெற்றி பெற்றோமா அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப்பற்றிய., "இது சாத்தியமானால்" அறிவியல் அரங்கு தான்.
"இது சாத்தியமானால்" என்று ஒரு நீண்ட பட்டியலோடு அந்த அரங்கு.

பெரும்பாலானவை., 'இது எப்படி முடியும் !?' என்று நம் புருவத்தை  உயர்த்தும் வண்ணம் அமைந்திருந்தது.
- Pizza வை மின்னஞ்சலில் அனுப்புவது சாத்தியமானால்......
இதை விஞ்ஞானிகள் செயல் முறையில் சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

விளங்கச்சொன்னால்., நீங்கள் 'சரவணா பவன்' மசாலா தோசை வேண்டும் என்று வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசியில் உங்கள் விருப்பத்தை கூறி பணம் செலுத்தியதும், எதிர்முனையில் இருப்பவர் "10 நிமிடத்தில் தயார் ஆஹிவிடும் சார்" என்பார்.

நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வீட்டில் microwave-oven அளவில் இருக்கும் கணிணி முன் காத்திருக்க வேண்டியதுதான். 11-வது நிமிடம் தோசை 'சரவணா பவன்' லிருந்து அந்த கணிணிக்கு மின்னசலில் அனுப்பி வைக்கப்படும்.
இது 100% சாத்தியமாம். "இதை போல் தான் விண்ணில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு உணவு அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் ஒரு விஞ்ஞானி. சாமானியனின் பயன்பாட்டிற்கு வர ரொம்ப நாள் காத்திருக்க வேண்டியிருக்காது என்றும் கூறினார் ஒரு சிறு கண் சிமிட்டலுடன்.

இதைப்போல் மேலும் பல ஆச்சர்யங்கள்.,
- உங்கள் நிழலை வைத்து கணினியை இயக்க முடிந்தால்
- நீங்கள் நினைப்பது என்னவென்று உங்கள் கணிணியால் உணர முடிந்தால்
- நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமானால்
- கார்கள் எல்லாம் பெட்ரோல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால்
- நம்மைப்போல் இயந்திரங்களும் வேலை நேரம் போக மீத நேரம் விளையாட ஆரம்பித்தால்

இப்படி இன்னும் பல....
வெறும் வாய்ச்சவடால் மட்டுமல்லாமல், இவை எப்படி சாத்தியம் என்றும் விளங்க வைத்தார்கள்.

கண்கள் விரிந்து, பேசுவதறியாமல் வீடு திரும்பினேன் அடுத்த வார விடுமுறை வரை சிகாகோவிற்கு விடைதந்து... N