Friday, April 2, 2010

கரிகாலன் காலம் போல....

நேற்று இரவு எப்போது உறங்க ஆரம்பித்தேன் என்பது கொஞ்சமும் நினைவில் இல்லை..

".........வயலுக்கும், நரிகளிடமிருந்து கோழிகளையும் செம்மறி ஆடுகளையும் காக்க காவலாக வயலோரம் நான் கட்டிய சிறு கூடாரத்தில் அமர்ந்து தென்னை மரக்கீற்றுகளினூடே நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தது மட்டும் தான் நினைவிலிருந்தது எனக்கு..

சேவல் கூவும் சப்தம் கேட்டு துயிலேளுகிறேன்...
கண்களை முழுதும் திறக்கவிடாது கூசும் சூரிய ஒளி...

கொட்டகையிலிருந்து வெளியே வந்ததுமே, என் வயலை ஒரு நோட்டம் விடுகிறேன்...
அட...! அறுவடைக்கு தயார் ஆகிவிட்டன பருத்தி செடிகள் எல்லாம்...
பருத்தி செடிகளுடன் சேர்த்து அறுவடை செய்துவிடலாமென்று நான் விட்டுவைத்திருந்த ஏற்கனவே விளைந்திருந்த கத்தரி செடிகளும் காற்றின் திசையில் சாய்ந்தாடிக்கொண்டிருந்தன...

அறுவடை செய்ய நான் தயார் ஆகும் முன், வயலின் மறுமுனையில் திரிந்தோடும் செம்மறி ஆடுகளை விரட்டிச்சென்று அதன் கொட்டகையில் அடைக்கிறேன்.
கோழிகளை அடைத்திருக்கும் கூண்டினுள் இருந்து, முட்டைகளை தேடி சேர்த்தாகிற்று...!

கன்று குட்டியை அதன் தாயிடம் கொண்டு சேர்த்துவிட்டேன்..!
ஒன்று 1000 ரூபாய் என்று சென்ற வாரம் வாங்கிய 30 வெள்ளை  பன்றிக்குட்டிகளையும் ஒரு நோட்டம் விட்டபடி வயலை சுற்றி வந்தேன். மூன்று வாரங்களுக்கு முன் நட்டுவைத்த Hybrid-ஆப்பிள் மரக்கன்றுகளும் காய்க்க ஆரம்பித்துவிட்டதை பார்த்து மகிழ்ந்தவண்ணம் நடை பயின்றேன்.

அறுவடை செய்யப்போகும் பருத்தி, கத்தரி மற்றும் இந்த ஆப்பிள் எல்லாவற்றையும் விற்று காசாக்கிவிடலாம்.
வயலில் பயன்படுத்தும் வண்டிகள் எல்லாவற்றுக்கும் போதுமான அளவு எரிபொருள் வாங்கலாம்.. மேலும் என் வயலை இன்னும் பெரிதாக்கிவிடலாம்.
அட! எத்துனை சிந்தனைகள் என்னுள்...

என் அறுவடை எந்திரத்தை உயிர்ப்பித்து என் வயலில் அறுவடையை தொடங்கினேன். அறுவடை செய்யும் பயிர்களுக்கு தகுந்தாற்போல் தன் அமைப்பை மாற்றி அறுவடையை விரைவாக்கிக் கொண்டிருந்தது அந்த இயந்திரம்.......பின்னணியில் 'கரிகாலன் காலம் போல..' பாடல் ஒலிக்க......"

"போதும் உன் கனவை பற்றிய பேத்தல்... நிறுத்திவிட்டு வேறு ஏதாவது எழுது பார்க்கலாம்..."
என்று உங்களில் பெரும்பாலானோர் முனகுவது கேட்கிறது எனக்கு.

இவை ஏதும் கனவல்ல அன்பர்களே !
நிஜமும் அல்ல....

"போதும் குழப்பியது..." என்கிறீர்களா ?
இவையாவும் இணையத்தில் கடந்த ஆண்டு சூடு பிடிக்க ஆரம்பித்த 'Social Gaming' வலைத்தளங்கள் பற்றி தான்.

இப்போது சட்டென்று புரிந்திருக்கும் சிலருக்கு நான் கூறுவது என்னவென்று.
ஆம் ! Farmville என்னும் Facebook பயன்படுத்துவோருக்கு பரிட்சயமான விளையாட்டு தான்.

இன்றைய iPod தலைமுறை விளையாடித்தீர்க்கும் இந்த விளையாட்டு, இணையத்தின் பயன்பாட்டிற்கு வந்தது சென்ற வருடம் ஜூன் மாதம்.

இன்று இதை உலகம் முழுவதும் விளையாடுவோர் எண்ணிக்கை 82 கோடிக்கும் மேல்.
இதற்க்கு இருக்கும் அதிகாரப்பூர்வ ரசிகர்கள் கூட்டம் 25 கோடிக்கும் மேல்.

இந்த Farmville-யை பற்றி மேலும் சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.,
1. இந்த விளையாட்டை உருவாக்கிய மார்க் என்பவர்  கூறுவது., இதை விளையாடுவோரை தோளோடுதோள் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தினால் அந்த வரிசை குமரி முதல் காஷ்மீர் வரை ஆறரை முறை வந்து சேருமாம்.
2. இந்த விளையாட்டில் இருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் இருக்கும் நிஜ விவசாயிகளின் எண்ணிக்கையை காட்டிலும் அறுபது மடங்கு அதிகமாம்.
3. இந்த விளையாட்டில் ஒரு நாளைக்கு மட்டும் வாங்கப்படும் tracktor-களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். John Deere என்ற அமெரிக்காவின் முன்னணி நிஜ tracktor-கள் தயாரிக்கும் நிறுவனம் ஒரு வருடத்திற்கு விற்கும் tracktor-களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாயிரம்.
4. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மட்டும், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் வரும் இந்த விளையாட்டிலிருந்து என்று கணித்திருக்கிறார்கள் இந்த விளையாட்டை சொந்தம்கொண்டிருக்கும் zynga நிறுவனத்தைச்சேர்ந்த நிபுணர்கள்.

என்னதான் இருக்கிறது இந்த விளையாட்டில் என்கிறீர்களா..!?
நீங்கள் இந்த விளையாட்டில் எப்படி தோன்ற வேண்டுமென்று நீங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.
விதைகள் வாங்க பணம் சேர்க்க வேண்டும்.
விதைகளை விதைத்ததும் உடனே விளைந்துவிடாது பயிர்கள், அவற்றுக்கு நீரூற்றி பாதுகாத்து நாட்கள் கழிந்த பின்னர் தான் அறுவடை செய்ய முடியும்.
உங்களுடன் சேர்ந்து விவசாயம் செய்யப்போவது யார் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்(!).
உங்கள் பக்கத்துக்கு வயலில் விவசாயம் செய்யப்போவது யார் என்றும்...
உங்கள் நண்பர்களின் வயலுக்கு உரம் போட்டு கைமாறாக எரிபொருள் பெறலாம். இன்னும் எத்துனையோ சொல்லிக்கொண்டே போகலாம்(!!).

மேலும் ஒரு படி மேலே போய், இந்த விளையாட்டை எப்படியெல்லாம் நேர்த்தியாக விளையாடலாம் என்பதற்கு துணுக்குகள் தரவும் நிறைய வலைதளங்களும் உள்ளன.

ரசிகர்கள் இருப்பது போல் இந்த விளையாட்டை எதிர்ப்பதற்க்கும் நிறைய குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த விளையாட்டை பணம் கொண்டு விளையாடுவோரும் நிறைய.

மொத்தத்தில் நட்புறவை மேம்படுத்தி, மனஅழுத்தத்தை குறைப்பதாக நம்புகிறது இதை விளையாடுவோர் சமூகம்.

எது எப்படி இருந்தாலும், "நீ எதிர்காலத்தில் மாடு/பன்றி மேய்க்கக்கூட லாயக்கு இல்லை... என்று பள்ளி நாட்களில் ஆசிரியர்களிடம் நான் வாங்கிய திட்டுகளை பொய்யாக்கிவிட்டேன்" என்று பெருமை கொள்கிறார்கள் என் நண்பர்களில் பலர்..

சந்திப்போம்....N