Friday, April 16, 2010

அங்காடித்தெரு

நாம் தினமும் பார்க்கும் இடங்கள், அதில் உலாவும் மனிதர்கள், 
நம் பொழுதை கழிக்கவும், பண்டிகைக்கால புதுத்துணிகள் வாங்கவும் பளிங்கு தரையில் உலாவி, பொம்மை கட்டியிருக்கும் புடவையை நோட்டம் விட்டு, இலவச குளிர்பானங்கள் குடித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் ரெங்கநாதன் தெரு கடைகளில் வேலைப்பார்பவர்களையும் அவர்களது வாழ்க்கை அவலங்களையும் யதார்த்தம் குறையாமல் கேமரா முன் கொண்டு வந்து., நம்மை 'அட!' போட வைத்து கண்களையும் ஈரமாக்கி விட... இதோ... "அங்காடித்தெரு"

அரசியல் வாக்குவாதங்கள், சுவிட்சர்லாந்தில் பாடல், லஞ்ச ஒழிப்பைப்பற்றிய பிரச்சாரம், குத்து பாடல்கள், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் கதாநாயகன், கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் வந்து தாதாக்களை பந்தாடும் இளைஞன், தொப்புள் தெரிய நடனம்,  நுனி நாக்கு ஆங்கிலத்தில் பத்தி பத்தியாக வசனங்கள்.. இவை ஏதுமில்லால் வெற்றிப்படம் தர முடியுமென்பதை கண் முன் காட்டியிருக்கிறது அங்காடித்தெரு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாலும், தந்தையை விபத்தில் பறிகொடுத்து விட்டு வறுமையில் வாடும் குடும்பத்தையும், கடன்களையும் அடைக்க திருநெல்வேலியிலிருந்து சென்னை ரெங்கநாதன் தெரு 'செந்தில் முருகன் ஸ்டோர்' க்கு வேலைக்கு வருகிறார் லிங்கு(மகேஷ் : அறிமுகம்).
மூச்சு விடவும் நேரம் குடுக்காமல், கண்கொத்திப்பாம்பாக நோட்டம் விட்டு அடி உதை குடுத்து நெஞ்சில் பயம் விதைக்க முதலாளியிடம் சம்பளம் வாங்கும் மேற்ப்பார்வையாளர்கள், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் சம்பளம் குறைத்துவிட வடிவமைக்கப்பட்ட இயந்திரம், எந்த வேலை சொன்னாலும் 'முடியாது' என்று சொல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், நான்கு பேர் நிற்கும் இடத்தில் இருநூறு பேர் தோளோடு உறங்கும் அவலம், தனக்கு முன் உண்பவர் தரும் தட்டிற்க்கு காத்திருந்து உணவு உண்ண வேண்டிய நிர்பந்தம் என்று எல்லா வேதனைகளையும் தாங்கி வாடிக்கையாளர்களிடம் புன்னகையை மட்டும் உமிழப்பழகவேண்டிய சேல்ஸ் வேலை.
"பசியுற்ற முதலைகள் இருக்கும் கிணற்றில் விழாமலிருக்க, சீரும் மலைப்பாம்பின் வாலைப்பிடித்து தொங்கும் தருணத்தில் உயர்ந்த மரக்கிளையிலிருந்து நாக்கில் சொட்டும் தேனை" போல் ஆறுதலாக லிங்குவிற்கு அறிமுகமாகிறார் உடன் வேலை புரியும் கனி(அஞ்சலி)
நாட்கள் நகர ஆரம்பிக்க, கனியுடம் ஆரம்பித்த 'மோதல் அறிமுகம்' நட்பாகி... காதல் மலர்கிறது. காதலை ஏற்க மறுக்கிறது அவர்கள் உலகம்.
தங்கள் காதலை ஜெயிக்கவைக்க போராடும் இவர்களுக்கு வழி விட்டதா அங்காடித்தெரு என்பதை நிஜ வாழ்க்கையின் இலக்கணங்கள் மாறாமல் தருகிறது மீதிக்கதை.

 அழுக்கு படிந்த ரெங்கநாதன் தெரு, சேல்ஸ் வேலை செய்யும் நபர் என்று எவரும் அடையாளம் காட்டும் ஆடைகளோடு கதாபாத்திரங்கள் இத்தோடு மட்டும் கதையை நகர்த்திச்சென்ற டைரக்டர் வசந்தபாலனின் நம்பிக்கை படம் முழுக்க மிளிர்கிறது.

மகேஷ்., ரப்பர் பந்து கிரிக்கெட் விளையாடும் கிராமத்து இளைஞனாக, 
'நான் பன்னன்டாவதுல ஆயிரத்து நூத்தி இருபத்தி எட்டு மார்க்கு அண்ணே.. இந்நேரம் இன்ஜினியரிங் படிசிட்டுருக்கணும்' என்று கொதிக்கும் போது, தன் வேலை பறிபோய்விடும் பயத்தில் 'மன்னிச்சிருங்க அண்ணாச்சி' என்று கதறும் போது, 'இனிமே உன் முன்னாடி வந்து நின்னா பிஞ்ச செருப்பால அடி' என்று காதலியிடம் கோபம் கொள்ளும்போதும் அறிமுக நாயகன் என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றிவிடுகிறார். படம் முழுக்க 'பலே' சொல்ல வைக்கிறது அவரது நடிப்பு..
'கற்றது தமிழ்' அஞ்சலி., நடிப்பில் போதுமான அளவு முதிர்ச்சி. துருதுரு கண்களுடன் காதலனை பார்ப்பதிலும், 'வேறென்ன நான் பத்தாங்கிளாஸ் பெயில் ஆகிட்டேன், அவன் பாஸ் ஆகிட்டான்' என்று யதார்த்த வசனம் பேசும்போதும்,  'மாரைப் பிடிச்சு கசக்கினான்... பேசாம நின்னேன்!' என்று மகேஷிடம் வெடித்துவிட்டு, 'இதே டிசைன்ல மெரூன் கலரா?... இருக்குக்கா...' என்று கண்ணீரை துடைத்துக்கொள்ளும் போதும்.... என்று படம் முழுக்க நம்மை பெரிதும் நெகிழ வைக்கிறார்.

படம் முழுக்க சரவெடியாய் 'கனா காணும் காலங்கள்' புகழ் பாண்டி.
'எப்ப பார்த்தாலும் பக்கத்துக்கு வீட்டு பிள்ள மாதிரி வருமா வருமான்னு கேட்டல்லயா.... இப்ப நான் அந்த புள்ளைய விட மார்க்கு கூட..' என்று தந்தைக்கு விளக்கம் கூறும் போதும், 'மாரிமுத்து மெட்ராஸ் போறேன்டி, சிநேகா அக்கா ஊரு' என்று சிலுப்பும்போது,
'சேமியா ன்னு ஒரு பேரா!?' என்று காதல் வயப்படும் பொது, 'மாப்ள, எங்க அப்பன் சொல்லி கூட நான் கேட்கலடா.. உனக்காக தான் இங்க வந்தேன்' என்று கண்ணீர் மல்கும்போது என உண்மையில் கலக்கியிருக்கிறார்.

பேப்பர் பொறுக்கும் முஸ்லிம் பெரியவர், செருப்பு அணியாத முதலாளி அண்ணாச்சி, நெற்றி நிறைய குங்குமத்தோடு பூ விற்கும் பெண்கள், ரிமோட் கவர் விற்கும் சிறுவர்கள், பார்வையற்ற நடைபாதை வியாபாரி,  அண்ணா/அக்கா என்று நம்மை அழைக்கும் சேல்ஸ் ஊழியர்கள், தொப்பையோடு டிராபிக் கான்ஸ்டபிள் , உடல் முழுக்க வாட்ச் கட்டிக்கொண்டு அதை வியாபாரம் செய்பவர், குள்ளரும் அவரது மனைவியும், காதலன் கூறிய வார்த்தை தாங்க முடியாமல் கோபம் கொப்பளிக்கும் கண்களோடு தற்கொலை செய்துக்கொள்ளும் செல்வராணி, வேலை தேடி கலைத்து இலவச கழிவறையை சுத்தம் செய்து அதற்கு பணம் வசூலிக்கும் உழைப்பை நம்பும் இளைஞன் என்று படம் நெடுக வரும் அன்றாட கதாபாத்திரங்கள் மேலும் அழகு.

கதாநாயகன் சென்னை வந்துவிட்டதை உணர்த்த சென்ட்ரல் ஸ்டேஷன் காண்பிப்பது தமிழ் சினிமாவிற்கு புளிக்கும் பழமாகிவிட்டது என்று நினைக்கிறேன்(!).. இனி கோயம்பேடு பஸ் நிலையம் கண்களுக்கு இதம் தரட்டும்.

"....கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என ஜெயமோகனின் வசனம், படத்திற்கு 'ஜே!' போட வைக்கிறது. 
ரிச்சர்ட் மரிய நாதனின் காமெராவிற்கு நிச்சயம் பெரும்பங்குண்டு. ரெங்கநாதன் தெருவில் புழுக்கத்தொடு நடமாடும் மனிதர்களாகட்டும், சேற்றில் விழும் strawberry பழமாகட்டும்.. படமாக்கியிருக்கும் விதம் கைதட்டளுக்குரியது.

'அவள் அப்படி ஒன்றும்', 'உன் பேரை சொல்லும்' பாடல்கள் மனதிற்கு தாலாட்டு.

'அட யாருபா இவன் !?' என்று சாமானியனையும் கேட்க வைக்கும் 'கருங்காலி' மேற்பாவையாளரின் நடிப்பு,  "இந்த பை கடைல தான் எங்க அண்ணன் மெட்ராஸ்ல வேலை செய்யுது, அந்த பைய தருவீங்களா?" என்று தங்கை பாசம், கிராமத்து மகேஷின் முதல் காதல் கதையில் சென்னைப் யுவதியாக வந்து 'Strawberry ஒரு பலம்' என்று தமிழ் பேசும் பெண்,  வர்ணப்போடிகளில் மறைந்து போகும் கோலமிடும் பெண்ணின் ரத்தக்கரை, மாமூல் கொடுப்பதை குறித்து வைத்துக்கொள்ளும் அண்ணாச்சி, தன் குழந்தை தன் கணவனைப்போலவே ஊனமுற்று உள்ளதென்பதை நினைத்து பூரிப்படையும் முன்னாள் பாலியல் தொழிலாளி, கொடூர விபத்தோடு ஆரம்பிக்கும் முதல் காட்சி என்று படம் முழுக்க நம்மை சலிப்பு தட்டாமல் நகர்த்திச்செல்லும் தருணங்கள் நிறைய...

நம்மிடையே நடக்கும் அவலங்கள் என்னவென்று தெரிய, கண்டிப்பாக அனைவரும் கடக்க வேண்டிய தெரு --- அங்காடித்தெரு.

சந்திப்போம்....N