Wednesday, April 7, 2010

விழியிலெல்லாம்...

திங்கட்கிழமை....
விரைவில் இந்த சொல்லை அதிகாரப்பூர்வமாக 'கொடும் வசைச்சொல்' என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.
மென்பொருள்/கணிணியியல் சார்ந்த நிறுவனங்களில் இதன் வீரியம் கொஞ்சம் அதிகமென்றே கூறலாம்.

வெள்ளி இரவை கேளிக்கை இரவென்று ஆரம்பித்து... சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் "இரவினில் ஆட்டம்.. பகலினில் தூக்கம்...இதுதான் எங்கள் உலகம்..." என்றிருந்துவிட்டு., திங்கட்கிழமை வேலைக்கு வரும் போதும் இருக்கும் மனநிலை... வாழ்கையில் முதன் முதலில் பள்ளி செல்லும் மூன்று வயது குழந்தையின் மனநிலையிலிருந்து  எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல..

திங்கள் காலை., "எப்படி இருந்தது உங்கள் சனி/ஞாயிறு ?" என்று நம் சிங்காரச்சென்னையில்  ஆரம்பிக்கும் உரையாடல்களை கேட்பதே எனக்கு ஒரு தனி சுவாரசியம்.....

'மகாபலிபுரம் சென்றிருந்தேன் bike-ல் கிழக்கு கடற்கரை சாலை வழியே என் நண்பியுடன், கடற்கரையில் கால் நனைத்துவிட்டு பல்லவ சிற்ப்பங்களின் கலை நுணுக்கத்தை ஆராய்ச்சி செய்தோம்(!!), வராக குகைக்ககோவிலின் தனிமை எங்களை ரொம்பவே ஈர்த்தது(!!!), திரும்ப வரும்போது Mayajaal-ல் சினிமாவிற்கு சென்றோம் இரவு வரை நேரம் கடத்த..' என்பான் ப்ளேபாய்  பிரம்மச்சாரி,

'பெரிதாக ஒன்றும் செய்யவில்லை பாஸ், உணவு - உறக்கம் - உணவு - உறக்கம்' என்று கழித்தேனென்பான்  சோம்பேறி பிரம்மச்சாரி,

'காரில் பயணித்தோம் நானும் நண்பர்களும் பாண்டிச்சேரி வரை, Old-Monk கையும் Napoleon-யும் சந்திக்க(!)... வரும்போது திண்டிவனம் வழியாக வந்தும் கூட மாமாவுக்கு மாமூல் அழ வேண்டியதாகிற்று... அத்தோடு சேர்த்து மொத்த செலவு இருபதாயிரம்..' என்பான் கேளிக்கை விரும்பி பிரம்மச்சாரி,

'நான் ஊரில் இல்லை சார், சொந்தஊருக்கு சென்றிருந்தேன்.. நேற்றிரவு வரும்போது Unreserved பெட்டியில் பயணிக்கவேண்டியதாயிற்று.. தூக்கமே இல்லை.." என்பான் வாராவாரம் ஊருக்கு செல்லும் தூரத்து வெளியூர் பிரம்மச்சாரி,

'என்ன....வழக்கம் போல் தான் மச்சி, நண்பர்கள் - வீட்டு வேலை - திநகர் ஈகிள் பார் - பெசன்ட் நகர் கடற்க்கரை - வீடு - உறக்கம்' என்பான் உள்ளூர் பிரம்மச்சாரி,

'...நானும் என் காதலனும் கபாலீஸ்வரரை தரிசிக்க சென்றிருந்தோம், அங்கிருந்து தி-நகர்.. ஏதோ காரணத்தால் என் ATM கார்டு திடீரென்று வேலை செய்யவில்லை(!).... பிறகென்ன, அவனது தங்க வர்ண கிரெடிட் கார்டின் காந்த பட்டையில் போதுமான அளவு கோடுகள் விழுந்திருக்கும் இந்நேரம்(!!).." என்பாள் "பொட்டு வைத்துக்கொள்ளாததை நாகரீகம் என்றெண்ணும்" ஜீன்ஸ் பாண்ட்  யுவதி,

'....சனிக்கிழமை காலை பத்து மணிக்கு எழுந்தேன், அன்று சாயந்திரம் கோவிலுக்கு சென்றோம் நானும் என் தோழியும்... ஞாயிறு மதியம் ஹாஸ்டலில் Chicken சமைத்தார்கள், மீத நேரம் TV பார்த்து பொழுதைப்போக்கினேன்....' என்பாள் கோழிப்பண்ணையில் வாழும் சக அலுவலக அழகி,

'Sathyam தியேட்டர்-ல் ஹிந்தி படம் பார்க்க சென்றிருந்தோம் நானும் என் தோழிகளும், அங்கிருந்து Spencer Plaza போய் கையில் இலவசமாக மருதாணி வரைந்து கொண்டு, அங்கு மொத்தம் எத்துனை மாடிப்படிகளென்று எண்ணிக்கொண்டு வந்தோம்' என்பாள் மூன்று மாதங்களுக்கு முன் தமிழகத்தின் தென்கோடியிலிருந்து சென்னை வந்து வேலையில் சேரும்போது எண்ணெய் வைத்து தலையை படிய சீவி நான்கு வர்ணங்களில் கண்ணாடி வளையல் அணிந்து வந்ததை இன்று மறந்தவிட்ட 'அருக்காணி பேத்தி',

'நானும் என் மனைவியும் காரில் சென்றோம் முட்டுக்காடு படகு குழாம் வரை.. இப்போ  கார் ஓட்ட நல்லா இருக்கு சார்.. போன வாரம் தான் மாமனார் ரேடியல் டயருக்கு மொய் அழுதார்.. அதான் கொஞ்ச தூரம் ஓட்டலாமென்று..." என்பார் முன் பல் வரிசை தெரிய சிரிப்போடு, ஒரு மாதம் முன்பு அவசர அவசரமாக கார் ஓட்ட கற்றுக்கொண்ட புதிதாக கல்யாணமானவர்,

'மனைவி சனிக்கிழமையும் அரை நாள் அலுவலகம் சென்றிருந்தாள்., ஏதோ ஆடிட்டிங் என்று, குழந்தைகளை நான் தான் கவனித்துக்கொண்டிருந்தேன்.. மதியம் என் அம்மாவை medical check-up   கூட்டிச்சென்றேன்.. மனைவி குழந்தைகளோடு ஞாயிறு மாலை சினிமா, ஹோட்டலில் இரவு உணவு...' என்பார் கூட்டுக்குடும்ப நடுத்தர வயதுக்காரர்,

'திங்கட்கிழமை-யின் மீட்டிங்கிற்கு சனிக்கிழமை ஒத்திகை என்று சொல்லி நாள் முழுக்க போனை கட்டி அழ வேண்டியதாகிற்று' இது அலுவலக அதிகார மேல் வர்க்கத்தின் வழக்கமான புலம்பல்...


ஏன் கசக்கிறது திங்கட்கிழமையென்றால்....!?
இது தானே உங்கள் சந்தேகம்...

திங்கட்கிழமை வந்து செய்து கொள்ளலாம் என்று விட்டுவைத்திருந்த, போன வார வேலைகளெல்லாம் விக்ரமாதித்தன் முதுகில் மறுபடியும் ஏறிக்கொள்ள காத்திருக்கும் வேதாளமாக தோன்றும்.

கடந்த வாரம்., வெள்ளிக்கிழமை காலையிலேயே, செய்து முடிக்கவேண்டிய  வேலைகளை முடித்து விட்டிருந்தாலும், "வேலையை முடித்துவிட்டேன்..." என்று உடனே பொத்தான்களை தட்டி தண்டோரா போடாமல்(வேறென்ன., வார கடைசி நாளில், நானூற்றி முப்பதி ஆறாவது வரியில் தவறு இருக்கிறது பார், புள்ளி சரியாக வை என்று... குறைகள் கூறும் மேலதிகாரியின் வேலைப்பளு தாங்க பயந்துதான்...)., சாயங்காலம் ஆறு மணிவரை காத்திருந்து, வீட்டுக்கு கிளம்பும்போது அவசராவசரமாக அரையும்குறையுமாக மேலதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு சென்ற மின்னஞ்சல்களின்  'பிற்ப்பகல் பலன்கள்' கண்டிப்பாக சிம்மசொப்பனமாக காத்திருக்கும்.

முதுகெலும்பு அடுத்த ஐந்து நாட்களுக்கு கற்சிற்ப்பமாகி விடும்...
அமரும் நாற்காலிகளின் மேலுள்ள செயற்கை பஞ்சின் வெப்பம், உடல் சூட்டை அதிகமாக்கி.. மூளையை கரைக்க ஆரம்பிக்கும்..
தாயின் தாலாட்டு பாடல்களை எளிதில் தோற்க்கடிக்கும் கலந்துரையாடல்கள்(!)...
இன்னும் எத்துனையோ காரணங்களுண்டு..

மறுபடியும் வெள்ளிக்கிழமை வருவதற்கு இன்னும் எத்துனை நாட்கள் இருக்கிறது என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டு இருப்போரை திங்களன்று பெருவாரியாக காணலாம்.

சில முற்போக்கு சிந்தனையாளர்கள்(!)  "எந்த பைத்தியக்காரன் வடிவமைத்தது இந்த வார நாட்கள் இப்படி அமைய வேண்டுமென்று ?",
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "ஏழு நாட்கள் தான் ஒரு மாதம் என்றிருந்திருந்தால், இந்நேரம் மாதம் நான்கு முறை சம்பளம் வாங்கலாம்" என்றெல்லாம் தீவிர உரையாடல்களோடு திங்கட்கிழமை-ஜுரத்தை போக்கிக் கொண்டிருப்பார்கள்.

திங்கட்கிழமை தான் பலருக்கு புரியும் 'காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்  இயந்திரம்' கண்டுபிடிக்கப்படவேண்டியதன் அவசியம்.

நாட்கள் வெள்ளிக்கிழமை நோக்கி நகர ஆரம்பிப்பது, முதல் நாள்-முதல் காட்சி சூப்பர் ஸ்டார் படத்தின்  டிக்கெட் வரிசையில் முன்னேறும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி ஆரவாரம் தான் எங்கள் எல்லோர் மனதிலும் ஒவ்வொரு வாரமும்...

இந்த திங்கட்கிழமை-ஜுரம் என்பது நாடுகளையும், கண்டங்களையும் மொத்தத்தில் எல்லைகளை தாண்டியது என்று மிகவும் உறுதியாக கூறுவேன் நான்.

பெரும்பாலான மேலைநாடுகளில், வார நாட்களில் எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை  செய்தாலோ, விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து வேலை செய்தாலோ, மேலதிகாரிகளுக்கு தக்க விளக்கமளிக்க நேரிடும். 
காரணம், வேலையை செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் முடிக்காதது திறனற்ற வேலையாளின் அடையாளமென்பதால்.
நம் ஊரில் இந்த விதி தலைகீழ். ஏன் அப்படி என்ற விவாதம் ஆரம்பித்தால், அது இன்னும் பதினைந்து வலைப்பதிவுகள் நீளும்...

இங்கு(அமெரிக்கா-வில்) சனி/ஞாயிறு என்பது முழு சுதந்திர தினங்கள் தான்.
கைபேசிகளும், அலுவலக மடிக்கணிணிகளும், மின்னஞ்சல்களை சட்டைப்பைகளுக்கு கொண்டு தரும் Blackberry களும் சற்றே இளைப்பாறும்.

இங்கு வாழும் மக்கள் இந்த நாட்களை கழிக்க, அருகாமை கடல் பயணங்கள், கேளிக்கை பூங்காக்கள், சினிமா, சுற்றுலாத்தலங்கள், தொலை தூர கார் பயணம், விளையாட்டு நிகழ்ச்சிகள், TV என்று பொழுதுபோக்கிறார்கள்.

இந்த பொழுதுபோக்குகளை சுற்றி தான் இருக்கிறது இந்த ஊர் 'திங்கட்கிழமை உரையாடல்கள்'
அப்படி ஆரம்பித்த ஒரு உரையாடலில், ஒரு அமெரிக்க நண்பர்.. தான் சமீபத்தில் பார்த்த ஆங்கில பாப் பாடலொன்றில் கணிணி உத்திகள் கொண்டு இருபது பேருக்கு மேல் ஒரே மாதிரி Sync-dance ஆடியதை பார்த்து வியந்ததாக கூறிக்கொண்டிருந்தார். அதை மெச்சி தலையசைத்தனர் அருகிலிருந்த சக அமெரிக்க நண்பர்களும்...

சிறிது நேரம் யோசித்துவிட்டு, நம் ஊர் "மதுரைக்கு போகாதடி..." பாடலை காட்டினேன் அவரிடம்...
பாடலை பார்க்க ஆரம்பித்தபோது, ஆச்சர்யத்தில் அவர் திறந்த வாயை மூட வெகு நேரம் ஆனது...
இதெல்லாம் நாங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே 'சந்திரலேக்கா' என்றொரு படத்தில் ஒரே பாடலில் ஆயிரம் நடன கலைஞர்கள் கொண்டு சாதித்து விட்டோமென்று பெருமையடிதுக்கொண்டேன் அவரிடம்..

அட!! எவ்ளவோ செய்துட்டோம், இதை செய்யமாட்டோமா !!

சந்திப்போம்....N