Friday, April 23, 2010

கள்ள விழிகளில்

நடுஜாமத்தில் தட்டி எழுப்பி என் இரு கண்களையும் ஒரு கருப்புத்துணியால் மறைத்து கட்டிவிட்டு செய்யச்சொன்னால் நான் 100% சரியாக செய்யக்கூடிய காரியங்களில் சில.,
- எந்த ஒரு கணிணியையும்(மேசைக் கணிணி/மடிக் கணிணி) அதிகபட்சம் ஒரு திருபுளியை மட்டும் கொண்டு, அதன் கடைசி பாகம் வரை பிரித்துவிட்டு மறுபடியும் அது முழுமையாக செயல்படும் விதம் மீண்டும் சேர்ப்பது.
- ஒரு கணிணியின் செயல்திறன் அறிந்ததும், அதற்க்கு தேவையான மென்பொருள் நிறுவ எந்த நிமிடத்தில் எந்த எந்தெந்த பொத்தான்களை அழுத்தி அதை முழுவதும் செயல் பெறவைக்க முடியுமென்பது.
- எனக்கு வேலை செய்ய ஒதுக்கப்பட்ட எந்த கணிணியிலும், ON என்ற பொத்தானை அழுத்தியதிலிருந்து எவ்வளவு நேரத்தில் அது என் காவற்ச்சொல்லை வினவும் என்பதறிந்து அதன் பசியாற்றி பின்னர் என் தினசரி அலுவலுக்கு தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் திறந்துவைப்பது.
- நான் அனுப்ப நினைக்கும் குறுந்தகவலை என் கைப்பேசியிலிருந்து எந்த தவறுமின்றி தட்டச்சு செய்து குறிப்பிட்டவருக்கு அனுப்புவது.
- தொலைப்பேசியின் மறுமுனையில் இருப்பவருடைய கணிணிக்கோளாறை, அவர் சொல் மட்டும் கேட்டு எந்த திரையையும் பாராமல், எந்த புத்தகத்தையும் வினவாமல் சரி செய்வது.
- கணிதத்தில் pi -யின் மதிப்பீடு என்னவென்று இருபத்திஐந்தாம் தசமம் வரை கூறுவது.
- குறைந்தபட்சம் அரை மைல் தூரமாவது ஒரு நேர் கோட்டில் நீந்திச்செல்வது.
- நிமிடத்திற்கு 55 வார்த்தைகள் வீதம் தட்டச்சு.

விட்டால் இன்னும் நீளும் இந்த பட்டியல்....
இங்கு 'பட்டியலிடக்கூடயவை(அல்லது பட்டியலிட வேண்டியவை!) எத்துனை' என்ற கேள்விகள் எழும் நிச்சயம்.. ஆதலால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்...!

"என்ன ஆச்சு உனக்கு !? "
"என் இந்த அர்த்தமற்ற பட்டியல் திடீரென்று ?"
உங்கள் நெற்றிச்சுருக்கங்களின் அர்த்தம் புரிகிறது எனக்கு.

அதெல்லாமிருக்கட்டும்., எனக்கு இன்னும் இரண்டு கண்களும் காதுகளும்(முகத்தில் எங்காவது) இறைவன் வரமளித்தாலும் கூட, கண்டிப்பாக நான் கோட்டை விடப்போகும் விஷயம்... இதோ...
- உப்பு..... ருசிக்கு..
- மஞ்சள் தூள்.... நிறத்திற்க்காக...
- மிளகாய்த்தூள்... காரத்திற்கேற்ப்ப...
- கடுகு.. சிறிதளவு...
- நறுக்கிய வெங்காயம்.... சாம்பார் அளவிற்கேற்ப்ப...
- நறுக்கிய தக்காளி.... வெங்காயத்தின் அளவிற்கேற்ப்ப...
- நன்கு தட்டிய பூண்டு....  அதுவும் சிறிதளவு(!)....
- புளி... ஒரு எலுமிச்சை பழ அளவு..
- தண்ணீர்... தேவைக்கேற்ப்ப...

ஆம்...!
உங்கள் கணிப்பு சரியே... சமையல்.

மேற்க்கண்ட(மாதிரி!) சமையல் குறிப்புகளை.,
கசக்கி தூக்கியெறியும் முன்பு நோட்டம் விடும் வேர்க்கடலை மடிக்கப்பட்ட நாழிதளின் தாளிலோ,
டீ கடையில் பஜ்ஜி மடித்துத்தரப்படும் தினசரியிலோ,
ஆர்வமின்றி புரட்டும் ஏதோ ஒரு வார இதழிலோ,
நண்பனின் தொலைபேசி எண் குறிக்கும் பொது தென்படும் அம்மாவின் சமையல் குறிப்பு நோட்டிலோ,
தொலைக்காட்சியில் வேறு அலைவரிசை மாற்றும் போது தென்படும் 'சமைத்துப்பார்' நிகழ்ச்சியிலோ  நாம் அனைவரும் கண்டிப்பாக எங்காவது ஒரு நாள் காணப்பெற்றிருப்போம்...

நானும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்தேன், சமைக்கும் கட்டாயம் நேரும் வரை(பெண் வாசகிகள் கோபம் கொள்ள வேண்டாம்...).
நான் இங்கு(சிகாகோ) வந்ததிலிருந்து, இதைப்போன்ற சமையல் குறிப்புகள் தான் எனக்கு படியளந்து கொண்டிருக்கின்றன..
காரணம்., புர்ரிட்டோ, கோர்டிடாஸ், கியேசடியா, நாக்கோஸ், டோர்டாடாஸ், குங்பாவ் சிக்கன், ஹநி வால்நெட் ஷ்ரிம்ப், சளுபாஸ், லான்குவா....(கவலை வேண்டாம், எத்துனை முறை படித்தாலும் வாயில் நுழையாத, புரியாத, அர்த்தம் விளங்காத பெயர்கள்தான் இவையெல்லாம்....) என இன்னும் பல என்று ஊர் பேர் தெரியாத உப்பு சப்பு காரமற்ற உணவுகளால் செத்து மடிய தயாராக இருக்கும் என் நாக்கு..!

நான் இங்கு வந்து சில வாரங்களில், கார உணவு வகைகள் உண்ண முடிவதில்லை என்று புலம்புவதை கேட்ட என் அமெரிக்க நண்பர்களிலொருவர்.,
"குமரன், கவலை வேண்டாம். நம் அலுவலகத்திலிருந்து  வெகு அருகாமையில் ஒரு ஹோட்டல் உண்டு, அங்கு நான் உன்னை கூட்டிச்செல்கிறேன். அவர்கள் தயார் செய்யும் சில உணவுவகைகளில், காரமென்றால் அப்படி ஒரு காரம்.
நான் ஒரு முறை தெரியாமல் அங்கு உண்டுவிட்டு, என் நாக்கின் சுவையறியும் செல்களில் ஒரு பெரும் பகுதியை பறிகொடுத்தேன்" என்றார்.

'அடடா வெள்ளையனே... பாலை வார்த்தாயடா  என் வயிற்றில். பாடிகாட் முனீஸ்வரன் துணை இருக்கட்டும் உன்னுடன்....' என்று மனதில் கூறிக்கொண்டு குஷியோடு சென்று சேர்ந்தேன் அந்த ஹோட்டலுக்கு அவரோடு.

உணவு வகைகளை ஒவ்வொன்றாக பரிமாறவும் செய்தார்கள், நாங்கள் சாப்பிட ஆரம்பித்து இருபது நிமிடங்களுக்கு மேலாகியிருந்தது.
பொறுமையிழந்த நான், "நீங்கள் கூறிய அந்த கார சார உணவுகளை கொண்டு வரச்சொலுங்களேன்....வந்ததே அதற்குத்தானே" என்றேன் அவரிடம்...

"நான் சொன்ன அந்த அதிபயங்கர கார சார உணவு வகைகளெல்லாம் நீ சாப்பிட்டு முடித்து வெகு நேரமாகிவிட்டது, என்னால் தான் காரம் தாங்க முடியவில்லை" என்றார் கோவைப்பழ நிறத்தில் முகம் சிவந்து போய், கண்களிலும் மூக்கிலும் நீர்(!) வடிய..
"அட கடவுளே.... நான் சாதாரணமாக உண்ணும் காரத்தில் ஐம்பதில் ஒரு பங்கு கூட இல்லையே இது..." என்றேன் சிரிப்போடு...
"நீ இந்த உணவை வகைகளை உண்ணும்போதே ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது என்னால்" என்றார் அவர்.
"கார சார உணவு வகைகளை உண்பதென்பது எங்களுக்கு தாய்ப்பாலை போல" என்றேன் அவரிடம்.

பொதுவாக நான் காலையில் அலுவலகம் கிளம்பிச்செல்லும் அவசரத்திற்கு கை கொடுப்பது கண்டிப்பாக பாலும் Kellogg's-ம் மட்டும்தான்.
மதிய உணவிற்கு, சற்றுமுன் மேலே கூறிய(பெயர் விளங்காத) உணவுப்பட்டியலில் ஏதோ ஒன்றை உண்டு பசியாற வேண்டியது...
இரவிலும், சனி/ஞாயிறுகளில் மட்டும், என் நாக்கு இன்னும் விரக்தியில் செத்து மடிந்துவிடவில்லை என்பதை நினைவிலிருத்திக்கொள்ள நம் ஊர் சாம்பார், ரசம், பொறியல், கூட்டு என்று சமயலறையில் புகுந்து ஆய்வுகள் செய்யவேண்டுயுள்ளது.

  • வெங்காயம் நறுக்கும் போதுதான் உண்மையில் புரிகிறது ஏழாம் வகுப்பு  இரசாயனவியல் பாடம், Syn-Propanethial-S-Oxide கண்களுக்கு என்ன செய்யுமென்று.
  • தண்ணீரின் கொதிநிலை அளவும், குக்கரின் விசில் சப்தமும் ஏன் என்று  புரிகிறது இப்போது.
  • தக்காளியை எந்த வாக்கில் வெட்டுவது அதை பொடியாக நறுக்க.
  • கடுகுக்கும் எண்ணெய்க்கும் இடையில் நடக்கும் போரில் என் கையில் குண்டுகள் பட்டுவிடுவதை யாரிடம் முறையிடுவேன்.
  • 'அடி பிடித்துவிடும்' என்று சொல்லுவதன் சாராம்சம் என்னவென்று தெரிந்தது., நான் சமைத்த சாம்பார் சட்டியை விட்டு வர மறுத்த தினத்தன்று.
  • 'தேவைக்கேற்ப' என்ற வார்த்தை இன்றுவரை எனக்கு புரிந்ததாக தெரியவில்லை.
ஆய்வுகள் என்றதுமே புரிந்திருக்கும் உங்களுக்கு, ஆம்! சமையலுக்கு முக்கிய தேவை... அந்த உணவை வைத்து சோதனை செய்ய ஒரு ஜீவன்(!).

இதையெல்லாம் மீறி, குறிப்புகளை படித்து சமையல் செய்வது அலுத்துப்போய்... 
'நாமே ஏதாவது செய்தாலென்ன...?' என்று ஆரம்பித்து... 
முடிவில் சமையல் நன்கறிந்த நண்ப/நண்பிகள் "என்ன சமைத்தீர்கள்?" என்ற கேள்விக்கு "Carrot சாம்பார், கத்தரிக்காய் ரசம், கொத்தமல்லி கூட்டு, கருவேப்பிலை குழம்பு...." என்று நான் ஏடாகூடமாக பதிலளித்தது ஒன்றிரண்டு முறையல்ல(!).

'சமையல் தானே.. அதற்க்கு ஏன் இவ்வளவு புலம்பல்...?'
பதில் இருக்கிறது அதற்கும்.
பள்ளி முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில்...
கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் மெஸ் சாப்பாடு...
வேலைக்கு சேர்ந்த பின்னர் முப்பொழுதும் அலுவலக காண்டீன் சாப்பாடு இல்லையேல் ஹோட்டல் உணவு... 

கணிசமான வருடங்கள் ஓடி தீர்ந்துவிட்டன நான் முதன்முதலாக சமைக்க ஆரம்பித்த சமயம்.
என்னிடம் யோசனை கேட்டால், சட்டென்று கூறிவிடுவேன் தயங்காமல்... 'பள்ளியிலோ கல்லூரியிலோ., ஆண்களுக்கு மட்டும் அடிப்படை சமைக்கும் திறன்களை பரிட்சையில்லா பாடமாகும்படி...'

'ஆண்களுக்கு மட்டும்' என்று கூறியது., 'சமையலறை பெண்களின் பிறப்புரிமை' என்று கூச்சலிடும் கூட்டத்தை சேர்ந்தவன் நான் என்பதால் அல்ல.
சமையல் கலையென்பது பெண்களின் உயிரணுக்களில்., பொறுமை, சகிப்புத்தன்மை, ருசியுணர்வு... இன்னும் இது போன்ற பல மென் குணங்களோடு ஏற்கனவே இருக்கும் ஒரு அங்கம். 

"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை.... சந்தோஷ சங்கீதம்..." என்ற வைரமுத்துவின் பாடல் வரியில், வாழ்வின் துளிகள் தான் எத்துனை.

சிந்திப்போம்...N