Friday, June 25, 2010

பதினொன்னு போட்டு காட்டு...

அழுதுவடியும் அழுக்குப்படிந்த பழைய கட்டிடம்.. அல்லது சற்றுமுன் கலெக்டர்/மந்திரியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய, ஆனாலும் விரைவில் அழுக்குப்படியப்போகும் வெள்ளை வெளேர் கட்டிடம்.

எவ்வளவு புதிதாக இருப்பினும்., அந்த கட்டிடங்களின் பெரும்பாலான தூண்கள் ஏற்கனவே சிகப்பு பாவாடை கட்டி இருப்பதை காணலாம். உபயம் : போது இடங்களில் வெற்றிலை மென்று துப்புவோர் சங்கம்.

கட்டிடத்தின் சுவரிலோ அல்லது அதை சுற்றி அமைந்துள்ள மதில் சுவரிலோ(!) 'நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்ற எச்சரிக்கையின் மேல் தேர்தல் பிரச்சார விளம்பரமோ, சினிமா விளம்பரங்களோ குடிகொண்டிருக்கும்.

கட்டிடத்தின் தென்மூலை, வடமூலை, சனிமூலை, ஈசான்யமூலை என எந்த மூலையையும் விடாமல், மூங்கில் தடுப்புகள் கட்டி அதை வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வசூலிக்கும் கூட்டம்.

தட்டச்சு இயந்திரம்/மடிக்கணிணி சகிதமாக கட்டிடத்தின் முன் இருபுறமும் அமர்ந்து தன் வேலைகளை கவனித்தும், மீதமுள்ள புலன்களால் நம்மை ஊடு கதிர்படமேடுக்கும் 'உடனடி தரகர்கள்' கூட்டம். இவர்களன்றி அரசாங்க அலுவலகத்தினுள் ஓரணுவையும் அசைக்க எந்த ஒரு இந்திய குடியுரிமை பெற்ற சாமானியனாலும் முடியாதென்பது இவர்களது எண்ணம்...இது உண்மை இல்லை என்று மறுக்க நாமில் பெரும்பாலானோர்க்கு முடியாது.

கட்டிடத்தினுள் நுழைந்ததுமே நாம் என்ன காரியத்திற்காக வந்திருக்கிறோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் அன்பளிப்பாக(!!) வாங்கலாம் என்று நம் முகம்/நடை/உடை பாவனைகளை வைத்து ஆரூடகம் செய்யும் 'அரசாங்க அலுவலர்' கூட்டம்.

கத்தை கத்தையாக கோப்புகள், ஏற்கனவே தன் பாதியை மூட்டைபூச்சிகள் விழுங்கிவிட்டதை உணர்ந்திருக்கும் மேசை நாற்காலிகள், மழைக்கால விளைவாக கண்ணீர் விட்டும் விரிசல் கண்டும் நிற்கும் சுவர்கள், ராஜராஜ சோழன் காலத்திலிருந்து இந்த அலுவலகங்களில் தங்கள் குடும்பத்தை விருத்தி செய்து கொண்டிருக்கும் சிலந்திகள்.... இவையெல்லாம் அரசாங்க அலுவலகத்தின் அடையாளமாக கண்டு வளர்ந்தவன் நான்.

கண்டிப்பாக., பெருமாள், செந்தில், மணிகண்டன் என பெயர்கள் கொண்ட அரசாங்க அலுவலர்களில் ஒருவரேனும்.. அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள் மேஜை மேலுள்ள பெயர் பலகைகளை...
ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன... என ஒவ்வொரு மேசைக்கும் டீ, காப்பி விநியோகிக்கும் டீ கடை சிறுவர்கள்..
நேற்றைய 'தங்கம்', 'தென்றல்' மெகா சீரியல் விமர்சனங்கள் காதுக்கு எட்டும் தூரத்திலிருக்கும் பெண் அலுவலர்களிடமிருந்து.

ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலக வேலைக்கு., பதினோரு மணிக்கு வந்ததையே லிம்கா சாதனைகளில் பதியவேண்டிய நிகழ்வாக நினைத்து பேசும் கூட்டம் ஒரு பக்கம், நாசாவில் தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளராக இருந்து, பால்வெளி நட்சத்திரங்களை சுற்றி இனம் புரியாமல் தோன்றும் கருப்பு வட்டங்களை பற்றிய ஆராய்ச்சியை தமிழக அரசாங்க வேலை நிமித்தம் கைவிட்டுவிட்டு வந்துவிட்ட ஒரு தோரணையோடு உலா வந்து கொண்டிருக்கும் அலுவலர்கள் ஏராளம்.

எல்லாமிருக்கட்டும், நாம் அந்த அலுவலகத்திற்க்கு வந்த வேலை என்ன என்பதை மட்டும் சுருங்கசொல்லிவிட்டால் போதும்.. அது அப்துல் கலாம் - முன்னாள் இந்திய ஜனாதிபதி என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் வேண்டுமானாலும் சரி(!)., அதற்க்கு யாருக்கு எவ்வளவு அன்பளிப்பு(!) கொடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் தயாராக இருப்பர் சித்திரகுப்தனாக அங்கிருக்கும் ப்யூன்கள்.

இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது நடந்திருக்கும்.

கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் என்பதில் ஆரம்பித்து மின் கட்டணம் கட்டுவது வரை பொதுவாக எல்லாவற்றுக்கும் இதே நிலை தான் நம் நாட்டில்.
உதாரணதிற்க்கு, ஓட்டுனர் உரிமம் பெற அரசாங்கத்திற்க்கு செலுத்தவேண்டிய கட்டணம் எவ்வளவு கேட்டால் நம்மில் பெரும்பாலனோர்க்கு கண்டிப்பாக தெரியாது... காரணம்..
இது தன்னிலை விளக்கம் கொண்ட வாக்கியம். காரண விளக்கம் தேவையிறாது என்று நினைக்கிறேன்(!).

"கட்டணம் மட்டும் தான் செலுத்துவேன்... அன்பளிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு..." என்று அரசு அதிகாரிகளிடம் வீம்பு பேசினால், கண்டிப்பாக எட்டு போடுவதற்கு பதிலாக பதினொன்று பொட்டு காட்டிவிட்டு தான் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இதைப் போன்ற அனுபவங்களில் வாழ்ந்து பழகிய எனக்கு, வரப்போகும் அனுபவ அலைகள் சற்றே பரவசமூட்டுபவை என்று சொன்னாலும் அது மிகையாகாது........

அனுபவ அலைகளோடு மீண்டும் சந்திக்கிறேன்.....N