Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

உலக நாயகன் கமலஹாசன், மாதவன், த்ரிஷா ஒன்றிணைந்திருக்கும் 'ரெட் ஜயன்ட் மூவீஸ்'ன் மன்மதன் அம்பு


சினிமா நடிகை நிஷாவாக த்ரிஷா(சினிமா பெயர் நிஷாவாக, நிஜப்பெயர் அம்புஜாக்ஷி யாகவும்), காதல் கைக்கூடி விரைவில் அவரை கைப்பிடிக்க காத்திருக்கும் சந்தேக நாயகன் மதனகோபலாக மாதவன், மதனகோபாலின் சந்தேகத்தின் விளைவில் முளைத்த துப்பறியும் சாம்பு மேஜர் மன்னார் ஆக கமல்.
படத்தின் பெயர்க் காரணம் புரிந்திருக்குமிந்நேரம்.

மதனகோபாலின் சந்தேக குணத்தால் மனமுடைந்து காதல் துறக்கிறார் நிஷா(எ)அம்பு. துறந்த காதலை மறக்க உல்லாசப் படகில் தன் பள்ளி வயது தோழி தீபாவுடன்(சங்கீதா) உலகம் சுற்ற முடிவெடுக்கிறார். காதலை மறக்க முடியாமல் தவிக்கும் மதனகோபால், அம்புவை வேவு பார்க்க செய்யும் ஏற்ப்பாடு தான் மன்னார். புற்று நோயில் தவிக்கும் நண்பனுக்கு உதவி செய்ய சந்தர்ப்பவசத்தால் அம்புவைப் பற்றி பொய் சொல்லி பணம் சேர்க்கிறார் மன்னார்.

இந்நிலையில் அம்புவிடம் மனம் திறக்கிறார் மன்னார். கோர விபத்தில் தன் மனைவியை தொலைத்த நினைவுகளை கட்டவிழ்க்கும் சமயத்தில் அம்புவுக்கு விதியால் தங்கள் கதைகள் குறுக்கிடுவது புரிகிறது, கூடவே ஒரு இனம் புரியாத ஈர்ப்போடு.

மீதப்படம், அம்பு கைப்பிடித்தது யாரை என்பதே!

கமல்... வழக்கம் மாறாத நடிப்பு.
சிரிப்பு, ஈரக்கண்கள், மிடுக்கு, 'ப்ளேபாய்' த்தனம், எளிமை ஓங்கும் அழகு நடனம். பேஷ்..பேஷ்..

மாதவன். படம் முழுக்க வந்து போகிறார்.
ஏனோ மனதில் நிற்காத நடிப்பு.

த்ரிஷா, அழகு. எதார்த்த நடிப்பு.

கதையின் நடுவில் வந்துபோகும் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி நிறைவான நடிப்பு.

படம் முழுக்க., பாரிஸ், பார்சிலோனா, வெனிஸ் நகரம் என சுழல்கிறது. மனுஷ் நந்தன்-னின் கேமரா கண்களுக்கு ஒரு சபாஷ்.

கடைசி நாற்ப்பது நிமிடங்கள்... திரைக்கதையை வைத்துக்கொண்டு என்ன செய்யவதென்று தெரியாமல் முழித்திருக்கிறார் கே.ஸ்.ரவிக்குமார்.
சுருக்கமாக, சொதப்பலான திரைக்கதை.

படம் முழுக்க ஆங்கில வாசம். ஆங்கிலத்தின் நடுவே தமிழ் வார்த்தைகள் கேட்கப்பெறலாம். ஒரு மிகத் தாழ்மையான வேண்டுகோள் "என் பாமரன் பேசும் மொழியில், பாமரனுக்கு புரியும் மொழியில் பேசி படம் எடுங்களேன்.. தயவு செய்து"

'நீல வானம்' பாடல் மனதில் நிற்கிறது. படமாக்கப்பட்ட விதமும் புதுமை. 'அட' சொல்ல வைக்கும் உழைப்பு, பின்னோக்கி சுழலும் உலகில் புரிகிறது.
கவிதைப் பாடல் முயற்சி 'பலே'.