Monday, December 6, 2010

மலரே ஒரு வார்த்தை பேசு...இப்படிக்கு பூங்காற்று (பயணக் கட்டுரை) -1

'போதும் இந்த கணினிகள் கக்கும் பீப் சப்தமும், கொதிகொதிக்கும் காற்றும், கைபேசிகளின் அதிர்வும்...'
இந்த எண்ணம் என்னுள் இமியளவு துளிர்த்தாலே.., என் மூளை, தான் சொர்வடைந்துவிட்டதை எனக்கு உணர்த்தும் குறுந்தகவலாக புரிந்துகொள்வேன்.

விடுமுறை எடுக்கும் நேரம் வந்தாகிற்று.

இங்கு(அமெரிக்காவில்) குளிர் காலம் ஆரம்பிக்கும் சமயம். இத்துனை நாட்களாக பூக்கள் கொண்டு அழகு சேர்த்த மரங்கள் எல்லாம், இப்போது பழுத்த இலைகளோடு கண்களுக்கு இதமளிக்க ஆரம்பிக்கும் நேரம்.

நான் மலைக்காதலன், நீர்வீழ்ச்சி ரசிகன், ரீங்காரமிடும் வண்டுகளின் சப்தத்தில் உலகத்தை மறப்பவன், ஆள் அரவமற்ற சாலைகளை கண்டு கவலை துறப்பவன், பச்சைப்பசும் புல்வெளிகளில் காலை நேர மூடுபனி கண்டு மெய் சிலிர்ப்பவன், குருவிகளின் பாடல்களில் காணராகம் கேட்டு மகிழ்பவன், தென்றல் முகத்தை வருடும் சுகத்தை ஒப்பிட வேறொரு சுகமொன்றுமில்லை என்ற எண்ணம் கொண்டவன், நொடிக்கொருமுறை வானத்தின் வண்ணத்தை மாற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகைக்கண்டு வாய்பிளப்பவன், வாகனப்புகையற்ற காற்றை அடர் காடுகளன்றி வேறெங்கு சுவாசிக்க முடியுமென்று வாதிடுபவன்.

இன்னும் கொஞ்சம் தூரம் தாவினால் நீலவான்வெளியை தொட்டு விடலாம் என்ற எண்ணம் மலைகள் மேலன்றி வேறெப்போது தோன்றும். 
மலை உச்சி.... கீழே பார்த்தால் மயிர்க்கூச்செறியும் ஆழ் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று(தவறி விழுந்துவிடாமல்!) கத்திப்பாருங்கள் 'என்னை வெல்ல யாருமில்லை' என்று., கூட சேர்ந்து சுருதி சேர்க்கும் மலைகளும் 'உங்களை வெல்ல யாருமில்லை' என்று. 
'தன்னை வெல்ல ஆளில்லை இந்த மண்ணுலகில்' என்ற எண்ணத்தோடு நின்றிருக்கும் மலைகளை கீறிக்கொண்டு கொட்டும் நீர்வீழ்ச்சிகளை காணும்போது ஏற்ப்படும் பரவசத்தை வார்த்தைகளில் அடக்குவது கடினம்.

"விடுமுறை" என்றதுமே... என்னை இப்படி ஒரு இடத்திற்கு செல்ல தூண்டியது என் மூளை. இங்கு வந்ததிலிருந்து ஓரிரு முறை கேள்விப்பட்ட இப்படிப்பட்ட இடமொன்று மின்னலாய் தோன்றியது.... 'தி கிரேட் ஸ்மோகீஸ்'(The Great Smokies அல்லது The Great Smoky Mountains, தமிழாக்கம் தடுமாறுவதை உணர்கிறேன் தமிழினமே!)

இணையத்தேடல் தொடங்கினேன்.
மேற்ச்சொன்ன இடத்தின் அழகை குளிர் காலத்தில் பார்ப்பதற்கு கண்கள் இரண்டு போதாதென்றது கூகிள்.
இது போதும்.. தொடங்கினேன் என் பிரயாண ஏற்பாடுகளை.

என் கணினியின் சுட்டிக்கு சுமாராக முப்பது சொடுக்குகளும், எட்டு 'பெஞ்சமின் பிராங்க்ளின்' படம் போட்ட அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் தேவைப்பட்டது கீழ்க்கண்டவற்றை தயார் செய்ய.,
- சென்று வர விமானப் பயணச்சீட்டு
- மூன்று நாட்கள் காட்டில் தங்கக் குடிலொன்று
- நடக்க முடியா தூரங்களுக்காக கார் ஒன்று

மறுநாள் சாயங்காலம்....
வீட்டிலிருந்து இருபது மைல் தூர கார் பயணத்திற்கு பின், 'சிகாகோ ஒ'ஹேர் விமான நிலையம் உங்களை அன்போடு வரவேற்கிறது.' என்ற எழுத்துப்பலகை, எனக்கு விமானநிலையம் வந்துவிட்டதை உணர்த்தியது.

வெண்ணிற மிளிரல் தரை கொண்டு என்னை உள்வாங்கிக்கொண்டது  ஒ'ஹேர் விமானநிலையம்.
வருடத்திற்கு சுமார் ஆறரை கோடி பயணிகளை கையாளும் அமெரிக்காவின் இரண்டாவது அதிமும்முரமான விமான நிலையம் இது.
இந்த விமான நிலையம் ஒரு நாளைக்கு கொடியசைத்து கட்டுப்படுத்தும் விமானங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறு(2500).. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு நூத்திஐந்து(105) விமானங்கள்.
இரண்டாம் உலகப்போரில் வீர மரணமடைந்த "எட்வர்ட் புட்ச் ஒ'ஹேர்" என்ற விமானியின் ஞாபகார்த்தமாக இந்த பெயர். நாற்ப்பதுகளின் தொடக்கத்தில் இரண்டாம் உலகப்போருக்கு தேவையான விமானங்கள் கட்டும் தளமாக இருந்த இடம், இப்போது பிரும்மாண்ட சர்வதேச விமான நிலையமாக உருமாறி நிற்க்கிறது.

'United Airlines' சார்பாக உங்களை உளமார வரவேற்க்கிறேன் என்றாள் முத்துப்பல் சிரிப்போடு, காலின் பெரும்பகுதி தெரிய குட்டைப்பாவாடை(!) அணிந்த  விமானப்பணிப்பெண் ஒருத்தி.
'நன்றி' என்றேன். அதை வழிமொழிந்து, எனக்கு விமானத்தில் இருக்கை எண்ணளித்து மீண்டும் புன்னகைத்தாள். மறுபடியும் நன்றி கூறி விடைபெற்றேன்.

எத்துனை முறை விமான பயணம் செய்தாலும், ஜன்னலோர இருக்கையைத் தவிர யாதொன்றும் அறியேன் நான்.
காரணங்கள்.,
  • ஒருவேளை அடிக்கடி எழுந்து நடக்கும் பழக்கமுள்ள பக்கத்துக்கு சீட்டவர் கிடைத்துவிட்டால், கவலை ஒன்றும் இல்லை.
  • மேகங்களின் கீழே, மேகங்களினூடே, மேகங்களின் மேலே என நம்மை தாங்கி எழும் இரும்புப்பறவை.. இதை பார்த்து ரசிக்கும் சுகம்..அடடா!
  • நம்மை விட பெரியதாய் ஓங்கி நிற்கும் கட்டிடங்கள், சிறுத்து பொம்மை வீடுகலாவது அழகு
  • இரவு நேரத்தில் நேர் கோடுகளாய், அதை ஊடுரும் கோடுகளாய் தெரு/வீட்டு விளக்குகளின் அணிவகுப்பு பிரபஞ்ச நட்சத்திரங்கள் எல்லாம் தரைக்கு வந்துவிட்டதாக தோன்றுமெனக்கு
  • சூர்யோதயமோ, அஸ்தமனமோ....நிறம் மாறும் வானத்தின் அழகை கண்டு குதூகளிக்கலாம்
  • விமானி விமானத்தை கீழிறக்க, வேகம் குறைக்க, நூத்தியெண்பது கோண வட்டமடிக்க அதன் இறக்கைகளுக்கு தரும் கட்டளைகை காணப்பெறலாம்
அடுத்த இருபது நிமிடங்களில் சிகாகோ நகரம் ஒரு சிறு புள்ளியாக மறைந்தது.

'இன்னும் முப்பது நிமிடங்களில் நாம் தரையிரங்கிவிடலாம்... உங்கள் இரவு நல்லிரவாக மலரட்டும்.. நன்றி' என்றார் விமானி.
                                                                                                                                        ......(தொடரும்)