Sunday, September 26, 2010

கார நம்ம வெச்சிருக்கோம்... கார வெச்சிருந்த சொப்பணசுந்தரிய...

சிகாகோவில் என்னவோ இது வெயில் காலம் தான்...
ஆனால் என் வாழ்வில் இது 'கார்' காலம்..

ஆம்.. கார் வாங்கும் எண்ணம் துளிர்த்து, வேறூன்றி, மரமாகி... நாட்கள்..ஏன் மாதங்கள் பல ஆகியிருந்தாலும்..
ஓட்டுனர் உரிமம் இல்லை(இந்த அனுபவம் என் முந்தைய வலைப்பதிவுகளில் கண்டிருக்கலாம்)
"லட்சுமிதேவியின் வரமேதுமில்லை" என்ற என் புலம்பலுக்கு விடை
... அமெரிக்க அரசாங்கத்திடம் வருமான வரி விவர கோப்புகள் சமர்ப்பிக்கும் நேரம்.

நான் முழு நினைவோடு தான் மேற்கண்ட வரியை எழுதினேன். குழப்பமேதும் வேண்டாம்.

நம் நாட்டிலோ,.. வருமான வரி கணக்கீடு புரிய வைக்க ஒரு தரகர், அவர் தரும் படிவத்தில் எந்த நிற பேனாவில் கையெழுத்திட வேண்டுமென்ற குழப்பம், நேரில் சென்று வருமான வரி அலுவலகத்தில் கணக்கை சேர்க்க திண்டிவனம் வரை நீளும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம்..இவை மட்டும் தான் நினைவிருக்கிறதேனக்கு.

இங்கும் வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய நேரம். நான் எந்த தரகரையும் அணுக வேண்டிய நிலை இல்லை..
அரசாங்கத்திற்கு சொந்தமான வரி வருமான இணையத்தளத்தில் பதிந்து, பதில் சொல்லவேண்டிய விவரங்கள் இதோ...
  • என் பெயர் மற்றும் விலாச விவரங்கள்(குமரன், 1600 பென்சில்வேனியா அவென்யு, வாசிங்டன். என்று எழுத ஆசை தான்...)
  • நான் இங்கு குடியேறிய மாதம்/கிழமை(விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம், கார் காலம், வெள்ளிக்கிழமை என்று எழுத சொல்லி உந்தியது என் சிறு மூளை..)
  • எனக்கு படியளக்கும் நிறுவனம்
  • நான் வாங்கும் சம்பளம் எவ்வளவென்று, பணிபுரியும் நிறுவனம் தரும் குறியீட்டு எண்
  • சம்பளத்தில் வரியாக பிடிக்கப்படும் தொகை(எவ்வளவோ..ஆனாலும் அது பெரும் பங்கு.. ஹீ ...ஹீ ..)
  • நான் தனி ஆளா அல்லது குடும்பஸ்தனா..(நான் தனி ஆள் தான் ஆனால் தமிழ் நாடே என் பின்னாடி..), எனக்கு இங்கு மாதாமாதம் ஆஹும் செலவு என இன்னபிற கேள்விகள்.
இவ்வளவே... வரி கணக்கு காட்ட நான் செலுத்திய நேரம், 8 மணி சன் செய்தியின் விளம்பர இடைவேளை அவகாசம்.

நான் இந்த விவரங்களை பதிந்த ஒரு வாரத்தில், வருமானவரித்துறையில் இருந்து ஒரு மின்னஞ்சல். 
"உளமார்ந்த வணக்கங்கள்,
நீங்கள் சமர்ப்பித்த வருமான வரி கணக்குகளை சரி பார்த்தாகிற்று, அமெரிக்க அரசாங்கம் உங்களுக்கு அளிக்கவேண்டிய தொகை '$$$$', இந்த தொகை உங்களை வந்து சேர உங்களின் வங்கிக்கணக்கு இலக்கம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணை சுழற்றவும். நன்றி"
(என் கண்களின் கருமணிகள், டாலர் ($) ($) உருவமேடுத்தன..)

என் வங்கி கணக்கு விவரங்களை அளித்து மூன்று மணி நேர அவகாசத்தில்,...
"உன் பணம் பணம்.. என் பணம் பணம்... உன் பணம் என் பணம்..."

"இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!? 
சரி, இந்த தெருவாவது என்ன விலைன்னு கேளு!?
ஐயோ..இப்போ நான் எதையாவது வாங்கியாகனுமேடா!"

கார் தேடல் தொடங்கினேன்.
"புது கார் வாங்கலாம்..." என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.

இங்கு வாழும் பெரும்பாலானோர், கார்களை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டும் ஓட்டிவிட்டு அதை விற்றுவிட்டு வேறு கார் வாங்கிவிடுவது வழக்கம்.
காரணம் கேட்டால்,
  • இந்த காரை விட புது மாடல் வந்தாச்சு
  • நான் எந்த காரையும் ஐம்பது ஆயிரம் மைல்கள் அல்லது ஒரு வருடத்துக்கு மேல் ஓட்டுவது கிடையாது
  • பனி காலம் ஆரம்பிக்கும் முன் இன்னும் பெரிய கார் வாங்க போகிறேன்.. அதான்
  • என் முன்னாள் மனைவியின் கார் இது... புது மனைவிக்கு(!) இந்த கார் பிடிக்கவில்லை
  • எங்கள் வீட்டு நாய் குட்டி போட்டிருக்கிறது, ஆதலால் காரில் நிறைய இடம் வேண்டும்
  • சென்ற வாரம் நான் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து மோதி முன்புற கண்ணாடியில் ஒரு கீறல் பட்டுவிட்டது
என இது போல் பல நூறு காரணங்கள் உண்டு.

கார்களை ஏமாற்றி விற்ப்பது இங்கு கஷ்டம்.
கார் வாங்கப்பட்ட தேதியிலிருந்து, இந்த நிமிடம் வரை... கார் எத்துனை முறை பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, ஏன் பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, விபத்துகளில் இருந்து மீண்டிருக்கிறதா?, திருட்டு வழக்குகள் ஏதும் பதியப்பட்டுல்லதா போன்ற இன்னபிற விவரங்களை அந்த காரின் 'VIN' எனப்படும் பதினேழு இலக்க அடையாள எண் கொண்டு எந்த 'குப்பனும் சுப்பனும்' கண்டுபிடித்து விடலாம்.

நான் 'Honda' காதலன்.
தேட ஆரம்பித்தது 'Honda' கார்களை மட்டும்.

கார் விற்கும் எண்ணமுடையோர், தங்கள் கார் பற்றிய விவரங்கள் முற்றும் காரின் புகைப்படத்துடன் இணையத்தில் பிரசுரித்தவுடன்., கார் வாங்கும் எண்ணமுடையோர் முந்திக்கொண்டு காரை சென்று பார்த்து, ஆராய்ந்து பணம் கொடுத்து வாங்கிவிடுவது.
இதில், செய்ய வேண்டியவை.,
  • வாங்கப்போகும் காரின் சரித்திரம் தெரிந்து
  • காரை ஒட்டி பார்ப்பது
  • காரை ஏன் விற்கிறார்கள் என்ற காரணம்
  • காரை ஒரு மெக்கானிக் கடையில் கொடுத்து பரிசோதனை
தேட ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில், சிக்கியது நான் எதிர்பார்த்த மைல்கள் ஓட்டத்தில்/விலையில் ஒரு 'Honda Civic'.

காரின் சரித்திரம் தெரிந்து கொண்டேன், அடையாள எண் கொண்டு.
சொல்லும்படியான பிரச்சினைகள் ஏதுமில்லை.

சுழற்றினேன் 'கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை'.

'ஹலோ..' என்று அமெரிக்க ஆங்கிலத்தில் எதிர்முனையில் கூவியது ஒரு குயில்.
'கார் விற்பனை நிமித்தம் அழைக்கிறேன், உங்கள் கார் இன்னும் விற்பனைக்குள்ளதா ?' என்றேன்.
'ஒ... அந்த கார் என் பாட்டியுடையது. நீங்கள் இன்று நாலு மணிக்கு இந்த விலாசம் வந்தால் காரை பார்க்கலாம்' என்றது அமெரிக்க குயில்.
'சரி.. உங்கள் விலாசம் ஒரு முறை சரி பார்த்துக்கொள்கிறேன்........ நன்றி'

சரியாக மூன்றே முக்காலுக்கு அந்த விலாசம் சென்றடைந்தோம் நானும் என் அமெரிக்க நண்பரும். 
என்னோடு பணிபுரிபவர் இந்த அமெரிக்க நண்பர்.
எந்த காரையும், அதன் சப்தம் கொண்டு அதில் எத்துனை திருகாணிகள் இறுக்கம் குறைந்திருக்கின்றன என்று கூறிவிடுவார்.

நான் மறுபடியும் அந்த தொலைப்பேசி எண்ணை அழைத்து, நீங்கள் கூறிய விலாசத்திற்கு வந்துவிட்டேன்.. காரை பார்க்க நான் தயார் என்றேன்.

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து.
'வணக்கம் அன்பர்களே...'
நானும்.. 'வணக்கம், இந்த கார் உங்கள் பாட்டியுடையதா ?' என்றேன்.
அவரும், 'இல்லை.. இல்லை.. நீங்க பேசியது என் பேத்திகிட்ட தான், நான் தான் அந்த பாட்டி' என்றார்.
'அட.. அப்படியா.. உங்கள பார்த்தா பாட்டி மாதிரியே தெரியலீங்க' என்றேன்.
அவர் வெட்க்கம் மல்குவது கண்களில் தெரிந்தது.

இதை கவனித்த என் அமெரிக்க நண்பர், என் காதருகே வந்து.,
'அந்த பெண்ணுக்கு உன் வயதில் ஒரு பேரனோ பேத்தியோ இருக்கக்கூடும்.. இதை உனக்கு யூகிக்க முடியலையா?'
'எல்லாம் தெரியும்.. நான் தமிழன்.. உலகம் அழியும் தருணம் வரை கூட பேசிக்கொண்டு தான் இருப்பேன்.. கார் பேரம் முடியும் வரை இதெல்லாம் கண்டுக்காதீங்க' என்றேன்.

அந்த பெண் குறுக்கிட்டு, 
'நீங்கள் பார்க்க வந்த கார் அதோ அங்கு நிற்கிறது.. சாவி காரில் தான் இருக்கிறது.. ஒட்டி பார்க்க வேண்டுமானால், தாராளமாக சென்று பாருங்கள்' என்றார்.

கருப்பு நிற 'Honda Civic'
'அடடா.... கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...'
கார் ஓட்டம்.. கிட்டதிட்ட மூன்று மைல். 
ஒட்டிய என் நண்பர், பின்னர் காரின் பானட்டில் சிறிது நேரம் ஆராய்ந்துவிட்டு.. 'கார் நல்ல நிலையில் தான் உள்ளது... வாங்கிய பின் செலவேதும் செய்யாமல் ஓட்டலாம்.. அது உறுதி' என்றார்.
நானும் காரை ஒட்டி, 'முடுக்கி, நிறுத்தி, பற்ச்சக்கரம்' இவற்றின் சௌகர்யம் தெரிந்தேன்.

தொடங்கிய இடம் திரும்பினோம், 
'என்ன கார் புடிச்சிருக்கா?' என்றார் அந்த பெண்.
அவரருகே சற்றுமுன் பூத்த குல்மொஹர் பூவொன்று நின்று கொண்டிருந்தது.
'கார் ரொம்ப புடிச்சிருக்கு..' 'இது தான் உங்க பேத்தியா ?' இது நான்.

'ஹாய், நான் தான் உங்களுடன் காலையில் பேசினேன்.. என் பெயர் ஜோவென்' என்று கை குலுக்கினாள்.
சிகப்பிற்கு அடையாளம் சொல்லும் உதடுகள், நீல நிற கண்மணி....
'கை குலுக்கியது போதும்..கையை பிடித்து இத்தோடு இரண்டு நிமிஷம் ஆகிறது' என்று காதை கடித்து, என்னை நிஜ உலகிற்கு கொண்டு வந்தார் என் நண்பர்.
கைகளை விட்டுவிட்டு 'இதெல்லாமா கணக்கு வைத்துக்கொள்வீர்கள்' என்றேன் அவரிடம் வடிவேலு பாணியில்.

'கார் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. விலையை கொஞ்சம் குறைக்க முடிந்தால் ஷேமம்' என்றேன்.

'எவ்வளவுக்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்' என்றார்.
'நீங்கள் தான் சொந்தக்காரர், நீங்கள் சொல்லுங்கள்' என்றேன்.
'எங்கள் ஊராக இருந்திருந்தால் கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசி முடித்திருப்போம்' என்று தொடர்ந்தேன்.
'அது என்ன கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசுவது... எப்படி என்று விளக்குங்கள்' என்றார் பாட்டி(!).
'விளக்க நான் தயார், எங்கள் ஊர் வழக்கப்படி பேரம் பேசுபவருக்கு பேத்தி இருந்தால்., பேத்தியிடம் தான் அப்படி பேரம் பேச வேண்டும்' என்றேன் குறும்பு சிரிப்புடன்.
'You silly' என்று சிரித்தாள் ஜோவென்.

'நீ எதற்கு அடி போடுகிறாய் என்று புரிகிறது, சீக்கிரம் விலையை பேசு...' என்றார் என் நண்பர்.

கடைசியாக நான் கூறிய விலைக்கு ஒத்துக்கொண்ட பாட்டிக்கு நன்றி கூறி, மற்றுமொரு முறை ஜோவென் கைகளை குலுக்கி(ஹீ...ஹீ...), காரை வாங்கி வந்தேன்.

சிறகுகள் முளைத்து விட்டதொரு பரபரப்பு.
என் வீடு நோக்கி முப்பது மைல் தூர பயணம் என் முன்னால்.
மேற்க்கே மறைந்து கொண்டிருந்தது சூரியன்... இரு புறமும் தூரிகை வைத்து தீட்டியதை போன்ற புல்வெளி... இரவு நெருங்குவதை புரிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தன கொக்குகள்.. கொஞ்சம் எதிரே..சாலையோரம்... முகத்தினூடே முடி களைய பெண்னொருத்தி... இந்த முறை..கனவல்ல.

சந்திப்போம்.....N