Thursday, February 10, 2011

மலரே ஒரு வார்த்தை பேசு...இப்படிக்கு பூங்காற்று (பயணக் கட்டுரை) -2

பகுதி-1


'இன்னும் முப்பது நிமிடங்களில் நாம் தரையிரங்கிவிடலாம்... உங்கள் இரவு நல்லிரவாக மலரட்டும்.. நன்றி' என்றார் விமானி.


நான் சென்றிறங்கும் இடம் 'டென்னிசீ' மாநிலத்தின் 'மெக்கீ டைசன்(McGhee tyson) விமான நிலையம்'


டென்னிசீ(Tennessee) - அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களிலொன்று. நாற்பத்தி இரண்டாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு, ஜனத்தொகை - சுமாராக அறுபத்தி இரண்டு லட்சம் பேர்(நம் தமிழகத்தின் பரப்பளவு ஐம்பதாயிரத்து இருநூறு சதுர மைல்கள்... நாம் ஆறே முக்கால் கோடி பேர்(!)).


டென்னிசீ என்றதுமே பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு நினைவில் வரும் பெயர் 1960-களில் புகழ் பெற்ற "எல்விஸ் ப்ரெஸ்லே(Elvis Presley)" என்ற அமெரிக்க பாடகர். இவர் வாழ்ந்து மறைந்தது டென்னிசீ மாநிலத்தின்   மெம்ப்சிஸ்(Memphis) என்னுமிடத்தில்.


என் முந்தைய பதிப்பில், சொல்ல மறந்த முக்கிய நிகழ்வு ஒன்று...

நான் சிகாகோவில் விமானமேறும் சமயம் என் தோளில் இருந்த பையின் எடை அதிகமென்று கூறி, அதிலிருந்த சிலவற்றை மற்றுமொரு பைக்கு என்னை மாற்றச்சொல்லி அறிவுறுத்தினாள் விமானப் பணிப்பெண் ஒருத்தி. என்னுடைய பயண முடிச்சுகளின் பெரும்பகுதி புகைப்படக்கருவிகளும் கண்ணாடிவில்லைகளும் தான். அவை இதோ உங்கள் பார்வைக்கு.

"பெண்ணே நான் ராக் பெல்ளர் குடும்பத்தில் ஒருவனல்ல, இந்த கண்ணாடிவில்லைகள் எனக்கு மிகவும் முக்கியம்" என்றேன். 


என் தோளில் இருந்த பையல்லாமல் மற்றுமொரு பையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு, புன்சிரிப்போடு "எங்களால் முடிந்ததைச்  செய்கிறோம் அன்பரே!" என்றாள்.

பயணம் முழுவதுமே,  தேனிலவு பிரயாணத்தில் புது மனைவி பக்கத்தில் உட்காராமல் தவிக்கும் மணாளனின் இதயம் போல் தவித்துக்கொண்டிருந்தது என் இதயமும். காரணம்., என் கண்பார்வையை விட்டு நகரவிட்டதில்லை என் புகைப்பட உபகரணங்களை.


விமானத்தில் இருந்து இறங்கியதுமே, என் பையை தேடத்தொடங்கினேன்.
'அன்பார்ந்த பயணிகளே! உங்களின் வருகைக்கு நன்றி, உங்களின் பயண முடிச்சுகள் இதோ' என்றாள் ஒரு மீன் கண்ணழகி ஒரு ஆளுயர அடுக்கு தட்டைக் காட்டி. 
ஒரு நோட்டதிலேயே உணர்ந்துவிட்டேன் என் பை அதில் இல்லை என்று. மீண்டுமொருமுறை நோட்டம்... கண்டிப்பாக இல்லை. 
'அட முருகா! வெள்ளைக்காரியை நம்பி குடுத்தேனே.. தேவை தான் எனக்கு... ' என்று நொந்து கொண்டிருக்கும் நேரம்....


..."நீங்கள் தானே குமரன்" என்று என் பின்னாலிருந்து ஒரு ஆண் குரல். 


'வேட்டையாடு விளையாடு' கமல் போன்றதொரு மிடுக்கேறிய தோற்றம், ரே-பான் கண்ணாடி, வலது கையில் இரண்டு தேசத்து மணி காட்டும் ராடோ, தன் கோட்டின்(Coat) இடது கையோரம் 'Tommy Hilfiger' என சின்னதொரு முத்திரை என மென் புன்னகையோடு தன் பெயரை வில்லியம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கை குலுக்கினார் அந்த நபர். 


"குமரன், நான் தான். நான் நினைப்பது சரியாக இருந்தால்.. நீங்கள் தானே நான் வந்த விமானத்தின் விமானி" என்றேன்(விமானப்பயணம் ஆரம்பிக்கும் போது விமானிகள்.. தங்கள் பெயரையும், தங்கள் துணை விமானிகள் பெயரையும் அறிவித்துக்கொள்வது வழக்கம்.. அப்படி கவனித்ததுதான் இவர் பெயரையும்).


"உங்கள் ஊகம் சரி தான் குமரன்" என்றார்.


நானும் "பத்திரமாக என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் வில்லியம்" என்றேன்.


"நன்றி.. " என்றார் கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல்.


"குமரன், இதோ உங்கள் பை. இதில் உடையும் தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகவும்., அதை பத்திரமாக வைக்க வேறு இடமில்லாததால், என் குழுவின் பணிப்பெண் ஒருத்தி நான் என் பயண முடிச்சுகளை வைக்கும் பிரத்தியேக இடத்தில் இதையும் வைத்துக்கொள்ளுமாறு வேண்டியிருந்தாள்.. வந்திறங்கியதும் உங்களிடம் ஒப்படைக்க உறுதி கூறினேன்..." என்று கூறி பையை என்னிடம் ஒப்படைத்தார். அடடா! அதுக்குள்ள வெள்ளை தோல் மேல சந்தேக பட்டுடோமே என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டது என் மூளை.


"மிக்க நன்றி வில்லியம்..." இது நான்.


"உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..." என்று மீண்டும் கைகுலுக்கி புன்னகைத்து விட்டு கூட்டத்தில் சென்று மறைந்தார் வில்லியம்.


நேரே நடக்க ஆரம்பித்தேன் கார் பதிந்து வைத்திருந்த இடம் தேடி. "Enterprise Car Rental" என வெளிர் பச்சை ஒளிப்பலகை வரவேற்றது.


மெக்கீ டைசன் - உள் நாட்டு விமான நிலையம் தான். டென்னிசீ மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகளை கவரும் விமான நிலையமும் கூட.
முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 'சார்லஸ் மெக்கீ டைசன்' என்ற விமானியின் நினைவாகத்தான் இந்த பெயராம்.


சுத்தத்திற்கு இலங்கான வெளிர் தரை, நடக்கும் வலிகூட கால்களுக்கு கொடுக்காத நகரும் தரை இதெல்லாம் போதாதென கண்களுக்கு இதமளிக்க ஒரு பச்சை பசும் தோட்டமும் அதன் ஊடே நீரோட்டமும்...இதில் கால் பங்கு நம் சென்னைப்பட்டின விமான நிலையத்திற்கும் வந்துவிட்டால்(!)...


Starbucks காபியின் சுகந்தம் என் மூளையை சீண்டி என்னை நிஜவுலகிற்கு கொனர்ந்தது.


"மிஸ்டர் குமரன், டென்னிசீ மாநிலத்திற்கு உங்களை வரவேற்கிறேன்" என்றது ஆளுயர ஆலிவ் பழம் ஒன்று.
"ஹாய்..." இது நான்.


"டென்னிசீ மாநிலத்திற்கு வருவது இது உங்களுக்கு முதல் முறையா ?" இது அவள்.
டென்னிசீ மாநிலம் வந்தது மட்டுமல்ல, அழகு மயில் ஆங்கிலம் பெசக்கண்டதும் இது தான் முதல் முறை" என்றேன் நான்.
கன்னங்கள் இளஞ்சிவப்பாக மாறி "நன்றி" என்றாள்.
"என் பெயர் ரீடா, இன்று உங்களுக்கு வேண்டிய கார் ஏற்பாடு செய்து தர வேண்டியது என் பொறுப்பு" என்றாள் ரீடா.




                                                                                                             ........மீண்டும் சந்திப்போம்...J