Monday, August 23, 2010

பதினொன்னு போட்டு காட்டு... (தொடர்ச்சி)

நான் என் முந்தைய வலைப்பதிவுகளில் கூறியிருந்ததைப்போல், இங்கு(அமெரிக்க வாழ்க்கை வாழ..) கார் இல்லா மனிதனுக்கும் கால் இல்லா மனிதனுக்கும் பெரும் வித்யாசமில்லை..

கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதென்று முடிவு செய்தேன்.
கார் ஓட்டுகிறோமோ இல்லையோ, மொத்தத்தில் இந்த உரிமம் இங்கு அடையாள அட்டை போன்ற ஒன்று.

கார் ஓட்டுனர் உரிமம் நம் பிறந்த தேதி தாங்கி நிற்கும்.

இந்த நாட்டில் சட்டங்கள் அந்த மாதிரி.
அண்மையில் நடந்த சம்பவமொன்று நினைவிற்கு வருகிறதெனக்கு., இங்கு நான் புதிதாக ஒரு வீட்டில் குடியேறிய சமயம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். தேவையான பொருட்களை தேர்வு செய்த பின்னர்., பணம் செலுத்துமிடத்தில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த சிகப்பு உதட்டுக்காரி ஒருத்தி "நீங்கள் இந்த கத்தியை வாங்கவேண்டுமானால் நான் உங்கள் அடையாள அட்டையை பார்க்க வேண்டும்" என்றாள்.
அர்த்தம் விளங்காமல் நெற்றி சுருக்கினேன்
அதற்க்கு அவள் "பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூர்மையான உபகரணங்கள் விற்பதற்கு இந்த மாநிலத்தில் தடை" என்றாள்.
'அடடா... என் பெயர்க் காரணம் எப்படி புரிந்தது இந்த வெள்ளைத்தோல்காரிக்கு' என்ற மனதில் சிரித்துக்கொண்டே..' அப்படி ஏதும் என்னிடம் இல்லை பெண்ணே!" என்றேன்.
"மன்னிக்கவும் அன்பரே, உங்களுக்கு இதை விற்றால் நான் வேலை இழக்கக்கூடும்" இது அவள்.
"கத்தியை தவிர மற்றவைக்கு ரசீது போடுங்கள்" என்றேன் புன்சிரிப்புடன்.

இதைப்போல் பல நூறு சட்டங்கள் உண்டு இங்கு, வயதுக்கேற்ற பண்டம் விற்பனைக்கு.
தலைவலி மாத்திரை வாங்கவேண்டுமானால் கூட, "வயதென்ன?, அதற்க்கு அத்தாட்சி என்ன?" என்ற கேள்விகளுக்கு பின் தான் ஏதும் நடக்கும்.

இணையத்தில் உலாவி, இங்கு ஓட்டுனர் உரிமம் பெற என்ன ஆவணங்கள் தேவை என்று தெரிந்துகொண்டேன். கூடவே எந்த அலுவலகம் செல்ல வேண்டும் மற்றும் எவ்வளவு தூரமென்றும்.

ஓட்டுனர் உரிமம் பெற : நான் வேற்று நாட்டவன் என்பதால்., நம் நாட்டின் கடவுச்சீட்டு, நான் இங்கு வேலை செய்யத் தான் வந்திருக்கிறேன் என்பற்கான அத்தாட்சி(பிறகென்ன அமெரிக்க பழங்குடியினத்தவரின் பாடல்கள் கற்று போகவா வந்தேன்!), என் இருப்பிட விலாசம் மற்றும் இருபது டாலர் அரசாங்க கட்டணம்..... இவையெல்லாம் அத்தியாவசியமாம்.
மேற்க்கண்டவை மட்டுமல்லாமல்., வாகன/சாலை சட்டம் பற்றிய எழுத்துத் தேர்வில் எண்பத்திஐந்து சதவிகிதம் பெற்று தேர்ச்சி, குறைந்தபட்சம் ஐந்து மைல் தூரம் சாலை விதிகளை மதித்து கார் ஒட்டி காட்ட வேண்டும் ஒரு அரசாங்க அதிகாரியிடம்(நம் ஊர் R.T.O போல்)

என் அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானோர்., "அரசாங்க அலுவலகத்திற்க்குச் செல்கிறாய், எட்டு மணிக்கு அலுவலகம் ஆரம்பிக்கும் சமயம் அங்கு இருப்பது உசிதம்" என்று பயமூட்டினர்.

'அடடா.. என்ன கொடுமை சார் இது'

நான் செல்ல முடிவு செய்த நாள், சனிக்கிழமை.
சனி நீராடிவிட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகம் சென்று சேர்ந்தேன். எனக்கு முன்னரே இருபது பேர் அந்த அலுவலகம் முன், அழகான நேர் வரிசையில் காத்திருந்தனர்.

மணி 7.45 : அலுவலகத்தினுள் இருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து "எல்லோருக்கும் எங்கள் இனிய காலை வணக்கங்கள்! உங்களை இந்த அலுவலகத்திற்கு அன்போடு வரவேற்கிறோம். இன்னும் பதினைந்து நிமிடங்களில் இந்த அலுவலகம் திறக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெற வந்துள்லோர் இந்த கதவின் வலது புறமும், மற்ற அரசாங்க காரியங்களுக்கு வந்திருப்போர் கதவுன் இடது புறமும் நிற்கவும்.(சித்தெறும்புகளைப்போல் சட்டென நகர்ந்து அவள் சொன்னதை செய்தனர் அனைவரும்..நானும் தான்.. அலையில் சிக்கிய இலையைப்போல்)
மேலும் அலுவலகத்தினுள் உணவுப் பண்டங்களுக்கு அனுமதி இல்லை.
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்" என்று சொன்னதோடு புன்னகையும் சிந்திவிட்டு, கேள்விகளோடு காத்திருப்போருக்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

வரிசையில் நிற்கும் மக்கள் மத்தியில் எந்த சண்டையும் இல்லை..யார் முதலில் நகர்ந்து செல்ல வேண்டுமென்ற குழப்பம் ஏதும் இல்லாமல் நகர்ந்தனர்.

மணி 8.00 : அலுவலகம் திறக்கப்படுகிறது.
அலுவலகத்தினுள் நுழைந்ததும், குளிர்காற்று என் முகத்தை அணைத்து வரவேற்றது. தாஜ் கோரமென்டலினுள் நுழைந்ததாக நினைத்துக்கொண்டிருந்த என் மூளையை சரிசெய்துகொள்ள., என் நாக்கை ஒரு முறை நானே கடித்து இது கனவல்ல என்றும் உறுதி செய்தேன்.

மணி 8.05 : என் வரிசையில் நான் ஆறாவதாக...என் முறை வந்ததும் என் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. "குமரன், தங்களது ஆவணங்கள் சரி பார்தாகிற்று, நீங்கள் செல்லவேண்டிய செயலறை எண் ஆறு" என்றது சிகப்பு உடையில் இருந்த பைங்கிளி(!) ஒன்று.

மணி 8.15 : இடம் : செயலறை எண் ஆறு., "காலை வணக்கம், தாங்கள் இங்கு வந்த நோக்கம்?" என்றார் ஒரு அரசாங்க அதிகாரி. மூலிகை பெட்ரோல் தயாரித்து அமெரிக்கா முழுதும் விற்பனை செய்ய, உரிமம் பெற வந்தேன் என்று சொல்ல எண்ணி "ஓட்டுனர் உரிமம்" என்றேன் புன்னகையுடன். நான் கொண்டு சென்றிருந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, இன்னபிற ஆவணங்களில் என்னிடம் மூன்று முறை கையெழுத்து பெற்றார்.
கவுண்டமணி பாணியில்., 'சார், எங்க ஊர் முக்கியமான பேப்பர்ஸ் ஏதும் உள்ளே வெக்கலயே..' என்று மனதில் எண்ணம்.

"மிஸ்டர் குமரன், உங்கள் வலது பேரு விரல் ரேகை வேண்டும், தயவுசெய்து அந்த ஒளிப்பலகையில் உங்கள் வலது கை பெருவிரலைப் பதியுங்கள்" என்றார்.
மயிலிறகின் ஸ்ப்ரிசம் போதும் அந்த இயந்திரத்திற்கு, என் பேரு விரலை பதித்தவுடன் அதை உள் வாங்கிக்கொண்டு 'பீப்' சப்தமிட்டது.

"மிஸ்டர் குமரன்., நீங்கள் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி, உங்களின் பார்வை திருத்தத்திற்க்கா(?) அல்லது உங்களின் முக பாவனைக்காகவா ?" என்றார் அவர்.
'முக பாவனை மாற்ற நான் என்ன தசாவதாரம் கமலஹாசனா ?' சிரிப்புடன் "பார்வை திருத்தம் தான் காரணம்" என்றேன்
"உங்கள் இரு கண்களாலும் உங்களின் வலது கைப்பக்கமுள்ள அந்த கருப்பு பெட்டகதினுள் பாருங்கள்" என்றார்... அந்த பெட்டகதினுள் இருந்த திரையில் தெரிந்த பறக்கும் பலூனை பார்த்த மாத்திரத்தில் 'பீப்..பீப்..' என்றது என்றது அந்த இயந்திரம். அந்த இயந்திரம் கூறிய என் கண்பார்வை குறியீடுகளை குறித்துக்கொண்டதுடன்,

"நீங்கள் அடுத்து நேரே சென்று காசாளரிடம் உங்கள் கட்டணத்தை கட்டிவிடுங்கள்" என்றார்.

மணி 8.28 : இடம் : காசாளர் கூடம்., இருபது டாலர் நோட்டை(மட்டுமே!) அவரிடம் நீட்டியதுமே, இயந்திரம் கக்கிய ரசீதை என்னிடம் நீட்டினார்.

மணி 8.31 : இடம் : பரீட்சைக் கூடம்.,
'என்ன பெரிய பரீட்சை., SSLC, ப்ளஸ் 2 என வாழ்க்கை தடத்தையே மாற்றும் பரீட்சைகள் எழுதியாகிற்று.. இன்னுமென்ன பயம்' என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்தாலும், அபார நம்பிக்கையின் விளைவால் ஏதும் சொதப்பல் நடந்துவிடுமோ என்ற பயமும் தான்.
சாலையின் குறியீடுகள், வாகனத்தை கையாளும் விதம், பாதுகாப்பு சட்டங்கள் என ஒரு வாகன ஓட்டுனருக்கு இருக்கவேண்டிய இயல்பறிவை சோதிக்கும் பரீட்சை.

மணி 8.35 : இடம் : பரீட்சைப் பேப்பர் திருத்துமிடம்.,
எழுதி முடித்த பரீட்சைத் தாளை மற்றுமொரு அரசாங்க அதிகாரி வாங்கிச் சென்றார். பதில்களை என் எதிரிலேயே(!) சரி பார்க்க ஆரம்பித்தார்.
'ஒரு வேலை நம்மிடம் சம்திங் ஏதிர்பார்ப்பாரோ..'  தமிழனின் மூளை(!).
 குறும் புன்னகையுடன் "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்... நேரே சென்று நீங்கள் ஒட்டி காட்டப்போகும் காருடன், அலுவலகத்தின் பின்புறம் வந்துவிடுங்கள். மற்றுமொரு அரசாங்க அதிகாரி அங்கு உங்களை சந்திப்பார்" என்றார்...
'ஆத்தா....நான் பாஸ் ஆகிட்டேன்' 


மணி 8.40 : இடம் : அலுவலகத்தின் பின்புறம்.
நான் வாடகைக்கு கொண்டு சென்றிருந்த காரில் காத்திருக்க., உதடுகளில் 'Elle 18' தாங்கி வந்த பாவையொருத்தி காரில் இருத்த ஒளி/ஒலி-ப்பான்களை சரி பார்க்கும் மும்முரத்தில்.


மணி 8.43 : இடம் : வாடகை காரின் ஓட்டுனர் இருக்கையில்.
காற்றோடு மிதந்து வந்து காரில் ஏறிக்கொண்டாள் நடுத்தர வயது பெண்னொருத்தி. "குமரன், என் பெயர் Jackie. உங்கள் வாகன ஓட்டும் திறமையை பரிசோதிக்க போகிறேன் நான். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்"
'பேசியே ராஜ்யத்தை வெல்லும் தமிழ்க் குடியில் பிறந்தவன் நான், அது முடியாதம்மா என்னால்'


மணி 8.45 : இடம் : போக்குவரத்து அம்மும் சாலை
வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு, பின்னோக்கி செல், குறிப்பிட வேகத்தில் செல், சாலையோரம் வாகனத்தை இறுதி, பள்ளி வளாகம் நெருங்கினால் என்ன வேகத்தில் செல்ல வேண்டும்....என்று சுமார் எட்டு மைல் தூரம் எனக்கு கட்டளைகள் இட்டு வந்தாள். 
நான் - பொம்மலாட்ட பொம்மையை என்று சொன்னாலும் மிகையாகாது.
நான் செய்கிற தவறு/சரி எல்லாவற்றையும் குறித்துக்கொண்டும் வந்தாள்.
'சம்திங் பற்றி பேச இது தான் சரியான சமயம் என்றது என் சாத்தான் மூளை'
'வேண்டாம் பொறு' என்றது சுயசிந்தனை.


மணி 9.15  : இடம் : அலுவலகத்தின் பின்புறம்(ஓட்டும் பரீட்சை ஆரம்பித்த இடம்!)
தான் வைத்திருந்த படிவத்தில் கையெழுத்திட்டு, என்னிடம் திரும்பி "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்" என்றாள்.
வெற்றி....வெற்றி... வெற்றி வேல்... வீர வேல்..


மணி 9.20  : இடம் : ஓட்டுனர் உரிமதிற்க்கு புகைப்படமெடுக்குமிடம்.
"கொஞ்சம் சிரியுங்களேன்" என்று சிணுங்கியது ஜீன்ஸ் அணிந்த பைங்கிளி ஒன்று.
"புகைப்படம் முடிந்தாகிற்று, உங்கள் முன்னாலுள்ள ஓளிப்பேழையில் கையெழுத்திடுங்கள்" என்று மீண்டும் சிணுங்கல்.
மணலில் எழுதிய விரல்களுக்கு.. ஓளிப்பேழையின் வழவழப்பு பிடிபடவில்லை...

"கையெழுத்து சரியாக வந்ததாக தோன்றவில்லை பெண்ணே..
என்னை மீண்டும் கையெழுத்திட அனுமதித்தால்..
உன் உதட்டழகை வர்ணித்து கவிதை எழுதி சலவைக்கல்லில் பதித்து, அதை நிலவில் கொண்டு சேர்க்கிறேன்.."


சிரிப்பைச் சிந்திவிட்டு "சரி..." என்றாள்.


மணி 9.25  :  "மிஸ்டர் குமரன், உங்கள் ஓட்டுனர் உரிமம் தயார். உங்கள் பயணங்கள் இனிதாக அமையட்டும்".
"நன்றி" இது நான்.

சுயஅறிவு/வாகன கையாளும் முறை தேர்வு..
கண் பரிசோதனை..
வார்த்தைக்கு வார்த்தைக்கு மரியாதையுடன் பேசும் அலுவலர்கள்..
அதட்ட யாருமில்லாவிட்டாலும் மக்களிடையே இருந்த ஒழுங்கு முறை..
சற்று முன் சலவை செய்து எடுத்ததைப்போன்ற அலுவலகம்..
தேவையான ஆவணங்கள்..
இடைத்தரகர்கள் இல்லாத இரண்டரை மணி நேரம்.
அரசாங்க கட்டணம் மட்டும்..
...இவை மட்டுமே நினைவில்.

என்று வரும் நம் நாட்டில் இந்த நிலை ??

சந்திப்போம்.....N