Sunday, January 3, 2010

வணக்கம் தமிழினமே !!!


இது என் முதல் தமிழ் வலை பக்கம்.

என்னுடைய நெடு நாளைய ஆசையும் கூட.
என் கனவு என்று கூட சொல்லலாம்..

அனைத்தும் தமிழில் இருந்துவிட்டால் எல்லாமும் எல்லாருக்கும் எளிமை ஆகிவிடும் என்று நண்பர்களிடம் கூறியதுண்டு.
காரணம், என் தாய் தமிழ்நாட்டில் இருக்கும் சாமானியனுக்கும் புரிந்துவிடும் மொழி இது.

ஆயிரம் கோடி ஆண்டுகளாக போற்றி பாதுகாக்கப்பட்ட மொழியும் கூட.
ஆற்று மணலில் ஏழுத ஆரம்பித்து பின்னர் ஓலை சுவடிகளில் அரங்கேறி அதன் பின்னால் காகிதங்களை அலங்கரித்து., இன்று இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது என் தமிழ்.
உலகில் எவ்வளவு மொழிகளுக்கு இருக்கிறது இந்த அறிய பெருமை ?

பன்பல பரிமாணங்கள் எடுத்தாலும், என்னை பொறுத்த வரை இந்த கணினி பரிணாமம் சாகா வரம் பெற்றது என்பது என் கருத்து.
காரணம், கரையான்கள் அரித்து தின்றுவிடும் அல்லது மழை நீரிலோ, புயல் காற்றிலோ மங்கி    போய் விடும் என்ற கவலை இல்லை..

இப்படி கணினி மயம் ஆக்கப்பட்ட என் தமிழ், உலவ போவது மரண பயம் அறியாத இணையத்தில்.

என் இந்த தமிழ் இணைய தளம் மலர துணையாக இருக்கும் கூகிள்(Google) நிறுவனத்திற்கு என் ஆயிரம் கோடி வணக்கங்கள்.
இந்த இனைய தமிழும் என்னை போல் ஒரு எங்கோ ஒரு கணிபொறி தேர்ந்த இளைஞனின் முயற்சி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு.

இந்த வலை பக்கத்தை எழுத எழுத என்னுள் ஆயிரம் புறாக்களை சட்டென்று தட்டி பறக்க விட்டதொரு உணர்வு.

இதுவரை என் தாய் தமிழுக்காக நெருப்பில் கரைந்த உயிர்கள் சாந்தம் அடையட்டும்.

ஜப்பானியர்கள் போல் தாய் மொழியில் கல்வி.. தாய் மொழியில் வர்த்தகம்... தாய் மொழியில் மென்பொருள் என்ற நிலை வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பூரித்து இருக்கிறேன்.

எனக்கு தமிழ் எழுத படிக்க தெரிவித்தது, என் தாய்க்கு பின் என் பள்ளி.. அதன் பின்னர் நான் அதிகம் தெரிந்த தமிழ்., ஆனந்த விகடன் வார இதழில் தான்.
இன்னும் நினைவ்ருக்கிறது சுஜாதாவின் "என் இனிய எந்திரா".
அன்று கண்ட சுஜாதாவின் கனவு வீண் போய்விடவில்லை.
அவர் கனவுகள் இன்றும் உயிரோடு உலா வந்து கொண்டிருக்கிறது.

நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் ஆதாலால் தான் இப்படி ஒரு வலை தளம் என்று எண்ணி விட வேண்டாம்.
ஆங்கில மொழி மேம்பட முக்கிய காரணம் என்று மேல் நாடுகள் கூறும், ஆக்ஸ்போர்டு பல்கலைகலகதில் ஆங்கில புலமைக்கு சிறப்பு பட்டமும் பெற்றிருக்கிறேன்.
நான் கற்ற கணினி ஆங்கிலத்தில் தான்.

நித்தம் படி அளப்பவன் கடவுள்.
அதை போல்  படி அளக்கும் மொழி தான் இன்று எனக்கு ஆங்கிலம்.
"இப்படி தமிழ் இருந்துவிட்டால்"., என்பது என் கனவு.


ஆங்கிலம் என்பது அறிவின் அளவு என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து நெடு நாட்கள் ஆகிவிட்டது தான் கவலை அளிக்கிறது.

உனது இந்த வலை தளத்தால் தமிழ் எங்கும் பறந்து சென்று விடாது என்ற உங்களது   முனுமுனுப்புகள் கேட்க முடிகிறது என்னால்.
இருப்பினும் இது என்னால் முடிந்த முயற்சி.

இந்த வலை தளம் உங்களை கவர்ந்தால், மனதில் இருத்தி திரும்ப சந்தியுங்கள்.
உங்களுகென என்னாலான படைப்புகள் காத்திருக்கும்.

மீண்டும் சந்திப்போம்!